பக்கம் எண் :

108திருவரங்கத்தந்தாதி

யினால், மங்கை என்னும் - தனது மனைவியாகிய, மால் நாகம் அரு மணி யை - (விஷத்தினால்) மயக்கத்தைச்செய்யுந்தன்மையதான சர்ப்பத்தினது பெறுதற்குஅரிய மாணிக்கத்தை, முன் - முன்பு, நீங்கினன் - பிரிந்தான், என்பார் - என்றுசொல்வார்கள்: அதுவும் - அங்ஙனம் மயங்கியதும், நின் மாயம் அன்றே - நீகாட்டிய மாயையன்றோ; (எ - று.) - அன்றே - தேற்றம்.

நினதுசங்கல்பத்தினாற் கொண்ட மநுஷ்யபாவனையினாலேயே அங்ங னம் மாயைக்குஉட்பட்டவன்போன்று காட்டினா யென்றபடி.

நாகமணி - நாகரத்நம்; கிடைத்தற்கு அருமையும் ஒளியும் பற்றி, அது பிராட்டிக்கு உவமை கூறப்பட்டது. நாவினால் துதித்தற்குஇனிய னென்பது, "நா கவரும் அமுது" என்பதன் கருத்து.

(86)

87.மாயாதவர்தலைவாவரங்காவடமாமதுரை
மாயாதவரண்டர்வந்தடைந்தான்மழுவாளிபிர
மாயாதவர்செய்வர்முந் நூல்செந்நூல்கொண்டவண்ணமொப்ப
மாயாதவரத்தனைக்குடல்கோத்ததுன்வாணகமே.

(இ - ள்.) மா யாதவர் தலைவா - பெருமையையுடைய யதுகுலத்தார்க் குத் தலைவனே! அரங்கா - ! வட மா மதுரை மாயா - வடதிசையிலுள்ள பெரிய மதுரையிற் கண்ணனாக அவதரித்த மாயவனே! - தவர் - முனிவர்க ளும், அண்டர் - தேவர்களும், வந்து அடைந்தால் - (கொடியபகைவர்க்கு அஞ்சி) வந்து சரணமடைந்தால், மழு ஆளி - சிவனும், பிரமா - பிரமனும் ஆகிய, அவர் - அவ்விருமூர்த்திகளும், யாது செய்வர் - என்னசெய்யமாட் டுவர்! (ஒன்றுஞ்செய்யத் திறமில்லா ரென்றபடி); உன் வாள் நகமே - உனது வாள்போற் கூரிய நகமே, முந் நூல் செந் நூல் கொண்ட வண்ணம் ஒப்ப - (நினதுமார்பில்விளங்கிய வெண்ணிறமான) முப்புரிநூல் சிவந்த நூலை வடமாக அணிந்தவிதத்தை யொக்கும்படி, மாயாத வரத்தனை குடல் கோத்தது - (பலவாற்றாலும்) அழியாத வரத்தைப் பெற்றவனாகிய இரணியனது குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்தது; (எ - று.) - ஈற்றுஏகாரம் - பிரிநிலையோடு, சிறப்பு.

"முந்நூல் செந்நூல் கொண்ட வண்ண மொப்ப" என்றது - "கூருகிர் நுதியிற் பைந்தேன், பொழிமலரலங்கன்மார்பம்போழ்ந்து செங்குருதியூறி, வழிபசுங்குடர்மென்கண்ணி, யாளரி வனைந்ததன்றே" என்றபடி நரசிங்க மூர்த்தி இரணியனது மார்பைத் தனது கைந்நகங்களினாற் பிளந்து குடலைப் பறித்து மாலையாகத் தரித்துக்கொண்டபோது அக்குடலினின்று வழிந்த இரத்தப்பெருக்கின் சம்பந்தத்தால் வெண்புரிநூல் செந்நூல்போலாயிற் றென்றும், இரத்தமூறுதலாற் செந்நிறமான அக்குடலானது செந்நூலினா லானதோ ருபவீதத்தை நிவீதமாக (கழுத்தில்மாலைபோலத் தொங்கும்படி) அணிந்ததுபோலு மென்றுங் கருத்துப்படும். இரணியன், தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத்திலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்குமரணமில்லாதபடி வரம்பெற்றவனாதலால், "மாயாதவரத்தன்" எனப் பட்டான். பிரமருத்திரர்கள் தம்மைக்குறித்துத் தவம்புரிந்து துதித்துப்