(இ - ள்.) கொற்றம் வாணற்கு - வெற்றியையுடைய பாணாசுரனுக்கு, வாகு அலைய - தோள்கள் (துணிப்புண்டு) துடிக்கும்படி, நேமி தொட்டாய் - சக்கராயுதத்தைப் பிரயோகித்தவனே! அரங்கா - ! - அன்பர் - (நினது) அடியார்கள், குவலையம் சூழ் கடல் - பூமண்டலத்தை வளைந்திருக்கிற சமுத்திரத்தையும், காயா - காயாம்பூவையும், மரகதம் - மரகதரத்தினத்தையும், கொண்டல் - நீர்கொண்ட மேகத்தையும், நெய்தல் - கருநெய்தல்மலரையும், குவலையம் - கருங்குவளைமலரையும், கண்டு - பார்த்து, நைவர் - (அவை நினதுவடிவத்தை நினைப்பூட்டுதலால்) மனமுருகுவார்கள், என்றால் - , - கொடும் பல் பிறப்பு ஆகு வலை அற்று அங்கு உனை காணில் - கொடிய பலவகைப்பட்ட பிறப்புக்களாகிய வலைகளின் தொடர்பு ஒழிந்து அப்பரமபதத்திலே நினதுதிருமேனியைப் பிரதியக்ஷமாகத் தரிசித்தால், அவர்க்கு குறிப்பு என் ஆம் கொல் - அவர்கள் கருத்து மற்றும் யாதாகுமோ! (எ - று.) பலவகைக்கலக்கத்துக்கு இடமான இவ்வுலகத்துப் பிறவியி லிருக்கை யிலேயே நினது உருவத்துக்குப் போலியாமவற்றைக் கண்டவளவிலே மன முருகும் மெய்யடியார் பிறப்புநீங்கிப் பரமபதத்தில் உன்னையே நேரிற்கண் டால் எவ்வளவு ஆனந்த மடையார் என்றபடி; தொடர்நிலைச்செய்யுட்பொ ருட்பேறணி. கடல்முதலியன எம்பெருமானது திருமேனிநிறத்திற்கு உவமையாகுதலை, "கடலோ மழையோ முழுநீலக்கல்லோ காயாநறும்போதோ, படர்பூங்குவளைநாண்மலரோ நீலோற்பலமோ பானலோ, இடர்சேர்மட வாருயிருண்பதியாதோ வென்று தளர்வாள்", "பூவையுங் காயாவு நீலமும் பூக்கின்ற, காவிமல ரென்றுங் காண்டோறும் - பாவியேன், மெல்லாவி மெய்ம் மிகவே பூரிக்கு மவ்வவை, யெல்லாம் பிரானுருவே யென்று" என்பவற்றாலும் அறிக. கருநெய்தலும் கருங்குவளையும் - சாதிபேதம். நெய்தல் குவலையம் என்பதற்கு - நெய்தல்நிலத்துத் தோன்றும் நீலோற்பல மென்று உரைப்பாரு முளர். தொட்டாய் என்ற சொல்லின் ஆற்றலினால், நீ படைக்கலத்தைத் தொட்டமாத்திரமே துஷ்டநிக்கிரகத்துக்குப் போதும்என்ற குறிப்பு விளங்கும்; "அன்றியவாணனாயிரந்தோளுந்துணிய வன்றாழிதொட்டான்" என்றார் பெரியாரும்: "வாணனாயிரம்புயங்கள் குருதிநீர்சிந்தியோட நேமிதொட்ட திருவரங்கராசரே" என்பதுங் காண்க. குவலயம், மரகதம், பாணன், பாஹு, நேமி - வடசொற்கள். வாகு வலைய - வாகு என்பது வடமொழித் திரிபாதலால், அதன் குற்றியலுகரம் உயிர்வரக் கெடவில்லை. முதலிரண்டடிகளில் குவலையம் என்றது, இடைப்போலி. பிறப்பு உயிரைப் பந்தப்படுத்துவதால், வலை யெனப்பட்டது. காயா என்ற செடியின்பெயரும், நெய்தல் குவலயம் என்ற நீர்ப்பூங் கொடிகளின் பெயரும் - அதனதன்மலர்க்கு முதலாகுபெயராம். மரகதம் - பச்சையிரத்தினம். அங்கு - சேய்மைச்சுட்டு. (90) | 91. | குறியானைச்செங்கணெடியானைவானவர்கோவைச்சங்கக் | | | குறியானைவித்ததிருவரங்கேசனைக்கூவிநின்று | | | குறியானைகாத்தவனைப்பாடினேன்கொடிகூப்பிடினுங் | | | குறியானையப்பவர்போற்கொடியேன்சொலுங்கொள்வனென்றே. | |