தேவாதிதேவனும் ஸர்வேச்வரனு மாதலால், "இறைப்பொருளாம் நம்பெருமாள்" என்றார். "இறைப்பொருளாம்" என்றதைத் திருவெட்டெழுத்திற்கு அடைமொழியாகவுங் கொள்ளலாம். எட்டுத்திருவக்ஷரமாய் மூன்றுபதமாயிருப்பதும் நாராயணநாமத்தையுட் கொண்டதுமான பெரியதிருமந்திரம் ஸகலவேதாந்ததாத்பர்யமாய் எல்லாமந்திரங்களினும் பிரதான மாதலால், "இறைப்பொருளாம் திருவெட்டெழுத்து" எனத்தகும். "ஸகலதைவங்களிலும் ஸர்வேஸ்வரன் ப்ரதாநனாகிறாப்போலே, ஸகலமந்த்ரங்களிலும் இம்மந்த்ர விசேஷம் ப்ரதாநமாயிருப்ப தொன்று" என்று ஆன்றோர் அருளிச் செய்திருப்பதை நோக்குமிடத்து "இறைப்பொருளாம்" என்றதை நம்பெருமாள், திருவெட்டெழுத்து என்ற இரண்டனோடுஞ் சேர்த்தல் இனிதாம். நம்பெருமாள். ஸ்ரீரங்கநாதன். இத்திருநாமம், உயர்ச்சியைவிளக்கும்; "நம் பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை, யென்ப ரவரவர்த மேற்றத்தால், அன்புடையோர் சாற்று திருநாமங்கள்" என்ற உபதேசரத்தினமாலையைக் காண்க. பதரிகாச்சிரமத்தி லெழுந்தருளியிருக்கின்ற நாராயணனது திருவெட்டெழுத்தை "நம்பெருமாளுடைத்திருவெட்டெழுத்து" என்றது, திவ்வியதேசத்து எம்பெருமான்களில் நம்பெருமாளுக்கு உள்ள தலைமைபற்றி யென்க. ஸ்ரீரங்கதிவ்வியதேசத்து மூலமூர்த்தியைப் பெரியபெருமாளென்றும், உத்ஸவமூர்த்தியை நம்பெருமாளென்றும் வழங்குவது, ஸம்பிரதாயம்; இருவர்க்கும் பொதுப்படக் கூறுதலும், "எம்பெருமான்" என்றாற்போல நமதுகடவுளென்றபொருளில் திருமாலை "நம்பெருமாள்" என்றலும் உண்டு. "ஸம்ஸாரிகள் தங்களையும் ஈச்வரனையும் மறந்து ஈச்வரகைங்கர்யத்தையும் இழந்து இழந்தோமென்கிற இழவு மின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, ஸர்வேச்வரன் தன்க்ருபையாலே இவர்கள் தன்னையறிந்து கரைமரஞ்சேரும்படி தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டருளினான்" ஆதலால், "நம்பெருமாளுடைத் திருவெட்டெழுத்து" எனப்பட்டது. இங்கு, ஆறாம்வேற்றுமையுருபு செய்யுட்கிழமைப்பொருளின்பாற்படும். ஆதியில் பதரிகாச்சிரமத்திலே நாராயணனால் நரனுக்கு உபதேசிக்கப்பட்ட திருமந்திர மென்க. இனி, விஷயமாகவுடைமையை ஆறாம்வேற்றுமைப்பொருளாகிய கம்பந்த மெனக் கொண்டு, நம்பெருமாள்விஷயமான அதாவது ஸ்ரீமந்நாராயணனையுணர்த்துகின்ற திருமந்திர மென்றலு மாம். திருவெட்டெழுத்துள்ளுறைப்பொருள் - பரமாத்மஸ்வரூபம், ஜீவாத்மஸ்வரூபம், இவ்விருவர்க்குமுள்ள ஸம்பந்தத்தின் ஸ்வரூபம் முதலியன. ("இத்தால், ஈச்வரன் ஆத்மாக்களுக்குப்பதியாய்நின்று ரக்ஷிக்கு மென்கிறது. ஆக, திருமந்த்ரத்தால், எம்பெருமானுக்கேயுரியேனான நான் எனக்கு உரியனன்றிக்கே யொழியவேணும்; ஸர்வசேஷியான நாராயணனுக்கே எல்லாவடிமைகளுஞ்செய்யப்பெறுவேனாகவேணு மென்ற தாய்த்து" என்ற முழுக்ஷுப்படியைக் காண்க.) ஓகாரங்கள் - ஐயப்பொருளன. ஸிரஸ், மநு, இதிஹாஸ புராணம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. இங்கு "மனு" என்றது - சுவாயம் புவமநுவினாற் செய்யப்பட்ட நூலைக் குறித்தது; கருத்தாவாகுபெயர்: "திருவள்ளுவர்" என்றாற் போல. ஏகாரம் - உயர்வுசிறப்பு; அசையுமாம். முறை |