யை (ஒழுக்கத்தை) யுணர்த்தும் நூலை "முறை" என்றது, காரியவாகுபெயரின் பாற்படும். முறையென்ற சொல்லுக்கு நூலென்ற பொருளும் உண்டு. இதிகாசபுராணங்களைச் சேர்த்துக்கூறியதன் காரணம், இரண்டும் வேதாந்தப்பொருளைத் தெளிவிப்பனவாதல். "இதிஹாஸபுராணம்" என்னும் உம்மைத்தொகை, வடநூல்முடிபு. "குறைந்த உயிரெழுத்துக்களையுடைய சொல்லாவது சிறப்புடையசொல்லாவது உம்மைத்தொகையில் முந்திநிற்பதாதல் வேண்டும்" என்ற வடமொழி வியாகரணநூலார்கொள்கையில் முதல்வகையின்படி "புராணேதிஹாஸம்" என்ன வேண்டியிருக்க அங்ஙனங்கூறாது "இதிஹாஸபுராணம்" என அதிகஉயிரெழுத்துக்களையுடைய இதிஹாஸபதத்தை முன்நிறுத்தியது, அதன் சிறப்பினா லென்க. "இதிகாச புராண முழுப்பொருளோ" என்ற பாடத்திற்கு - இதிகாசபுராணங்களின் பூர்ணமான அர்த்தமோ வென்பது பொருள். மூன்றாமடியின் முதலில் "இறைப்பொருளோ" என்று பாடமாயின், இவையெல்லாவற்றிலுஞ் சிறந்ததொரு பொருளோ வென்று உரைக்க. நம் பெருமாள் - நமது தலைவர். இங்கு "நம்" என்ற தன்மைப்பன்மை, எல்லாவுயிர்களையும் உளப்படுத்தியது. பெருமாள் = பெருமான்: பெருமையையுடையவன். இதில், பெருமை யென்ற பண்புப்பகுதி ஈற்று ஐகாரம்மாத்திரங் கெட்டு "பெரும்" என நின்றது; ஆன் என்ற ஆண்பால்விகுதி, "ஆள்" என ஈறுதிரிந்தது: ஆள் என்ற பெண்பால்விகுதியே சிறுபான்மை ஆண்பாலுக்கு வந்த தென்றலும் ஒன்று. அன்றி, பெருமையை ஆள்பவனெனக் கொண்டால், ஆள் என்ற வினைப்பகுதி கருத்தாப்பொருள்விகுதிபுணர்ந்துகெட்ட தெனவேண்டும். (பெருமாள் என்பதன் பெண்பால், பெருமாட்டி.) "உடைய" என்னும் ஆறாம்வேற்றுமைச்சொல்லுருபு ஈறுதொக்கு "உடை" என நின்றது. எட்டுஎழுத்து - பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகையாய், அத்தனையெழுத்துக்களையுடைய மந்திரத்தைக் குறித்தது. உள்உறைப் பொருள் - உள்ளே உறுவதாகிய பொருள். உறை - உறு - பகுதி, ஐ - கருத்தாப்பொருள்விகுதி. உள்ளுறையெனினும், உட்கிடையெனினும் ஒக்கும். முதுப்பொருள். இறைப்பொருள், உள்ளுறைப்பொருள் - பண்புத்தொகைகள். இனி, உள்ளே உறைதலையுடைய பொருளென்றுங் கொள்ளலாம்; இப் பொருளில், உறை - முதனிலைத்தொழிற்பெயர். இரண்டாம்வேற்றுமையுரு பும்பயனுந்தொக்கதொகை. ஒரு பெயரின் ஒருபகுப்பைக்கொண்டு அப் பெயர்முழுவதையுங் குறிப்பதொரு மரபுபற்றி, அழகியமணவாளதாசரை "மணவாளர்" என்றார்; (இதனை, வடநூலார், "நாமைகதேஸே நாமக்ரஹணம்" என்பர்.) தம் - அசை. "மணவாளர்தம்மாலை" என்றவிடத்துத் தொக்குநின்ற ஆறாம்வேற்றுமையுருபு - செய்யுட்கிழமைப்பொருளது; கூர்மபுராணம், கபிலரகவல், கம்பராமாயணம், "பற்றற்றான்பற்று" என்றவற்றிற் போல: அழகியமணவாளதாசரால் இயற்றப்பட்ட மாலை யென்க. இனி, விஷ்ணு புராணம், விநாயகரகவல், சீவகசிந்தாமணி என்றாற்போல, "மணவாளர்தம் மாலை" என்றதை அழகியமணவாளனென்று திருநாமமுடைய ஸ்ரீரங்கநாதன் விஷயமான மாலையென்றுங் கொள்ளலாம்; திருவரங்கத்துமாலை யென்ற நூற்பெயரின் பரியாயநாமமாம். "கோயிலில் வந்த வந்த, மணவாளர் |