பொற்றிருப்பாதாம்புயங்கட்கு மாலையென, மணவாளர் சூடும்" மாலை யாதலால், இருவகையும் ஏற்கும். "மணவாளர்" என்ற பன்மை, உயர்வுபற்றியது. "மாலையினுள்" என்றவிடத்து, உள் - ஏழுனுருபுமாம். இச்செய்யுளில் "மணவாளர்" என ஆக்கியோன்பெயரும், "மணவாளர் தம் மாலை" என நூற்பெயரும், நுதலியபொருளும், "மறைப்பொருளோ" என்பது முதலாக விகற்பித்துக்கூறியவாற்றால் நுதலியபொருளும், இவ்வொரு நூலுணர்ந்தவர் அப்பலநூற்பொருள்களையும் ஒருங்கேயுணர்வரென நூற்பயனும், அம்மறைமுதலியவற்றின் வழி நூலிதுவென நூல்வந்தவழியும், பரந்து கிடந்த அந்நூற்பொருள்கள் பலவற்றைத் தொகுத்துக்கூறிய நூலிதுவெனத் தொகுத்தலாகிய நூல்யாப்பும், அம்மறைப்பொருள் முதலியவற்றையுணரும்விருப்பமுடையார்பலரும் இந்நூல்கேட்டற்குரிய அதிகாரிகளெனக் கேட்போரும், அப்பொருள்கள்பலவற்றையும் சில்வாழ்நாட்பல் பிணிச்சிற்றறிவினராகிய மனிதர்கள் எளிதில்உணர்ந்துஉய்யும்படி ஒருங்கே சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் வேண்டுமென்று ஆசிரியர் கொண்ட அருளே இந்நூல்செய்ததற்கு ஏது வெனக் காரணமும் பெறப்பட்டன. "ஆக்கியோன் பெயரேவழியேஎல்லை, நூற்பெயர்யாப்பேநுதலியபொருளே, கேட்போர் பயனோடு ஆயெண்பொருளும், வாய்ப்பக்காட்டல் பாயிரத்தியல்பே," "காலங் களனே காரண மென்றிம், மூவகை யேற்றி மொழிநரு முளரே" என்ற சிறப்புப்பாயிரத்திலக்கணத்தில் மற்றவை குறிக்கப்படுவன உய்த்துணர்ந்துகொள்க இக்கவி, அபியுக்தரி லொருவர் செய்தது. இது, வைஷ்ணவசம்பிரதாயத்தில் "தனியன்" எனப்படும்; (நூலினுட்சேராது) தனியே பாயிரமாக நிற்றல்பற்றியது, அப்பெயர். உயர்திணையாண்பால் விகுதி சிறுபான்மை அஃறிணைக்கும்வருதலை, கடுவன், கோட்டான், தோளுக்கினியான் என்றவிடங்களிற் காண்க; நாலடியார், சிவஞானசித்தியார் என்றஇடங்களில் "ஆர்" விகுதிபோல இங்கு "அன்" விகுதி உயர்வுகுறிப்ப தென்றலுமாம். காப்பு. காப்பு - காத்தல்; அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்: ஆகவே, கவி தமக்கு நேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை நிறைவேற்றவல்ல தலைமைப்பொருளின் விஷயமாக உயர்ந்தோர் வழக்கத்தின்படி செய்யுந் தோத்திர மென்பது கருத்து. (திருவரங்கநாதனது திருமேனியவயவங்களும், திவ்வியபஞ்சாயுதங்களும்.) | நாளும் பெரியபெருமாளரங்கர் நகைமுகமுந் | | தோளுந் தொடர்ந்தென்னையாளும்விழியுந் துழாய்மணக்குந் | | தாளுங் கரமுங் கரத்திற் சங்காழியுந் தண்டும் வில்லும் | | வாளுந் துணைவருமே தமியேனை வளைந்துகொண்டே. | |