(இ - ள்.) பெரியபெருமாள் அரங்கர் - பெரியபெருமாளென்று ஒரு திருநாமமுடையவரான ஸ்ரீரங்கநாதருடைய, நகை முகமும் - மலர்ச்சியை யுடைய திருமுகமும், தோளும் - திருத்தோள்களும், என்னை தொடர்ந்து ஆளும் விழியும் - என்னை விடாதுதொடர்ந்து அடிமைகொள்ளக்கடாக்ஷிக் கின்ற திருக்கண்களும், துழாய் மணக்கும் தாளும் - திருத்துழாய்மணம் வீசுகின்ற திருவடிகளும், கரமும் - திருக்கைகளும், கரத்தில் - அக்கைகளில் ஏந்துகின்ற, சங்கு ஆழியும் - சங்கசக்கரங்களும், தண்டும் - கதையும், வில்லும் - தனுசும், வாளும் -, தமியேனை வளைந்துகொண்டு - வேறு துணையுங் கதியுமில்லாத என்னைச் சூழ்ந்து கொண்டு, நாளும் - தினந்தோறும் (எந்நாளும்), துணை வரும் - துணையாக வரும்; (எ - று.) - வருமே என்பதில், ஏகாரம் - தேற்றம். ஈற்றுஏகாரம் - அசை. இங்ஙனம், தமது வழிபடுகடவுளும், எடுத்துக்கொண்ட இப்பிரபந்தத் திற்கு ஏற்புடைக்கடவுளுமாகிய திருவரங்க நாதனது திருவவயவங்களையும் ஐம்படையையும் தமக்கு நீங்காததுணையாகக் கொண்டமை கூறியதனால், எடுத்துக்கொண்ட இந்நூல் இடையூறின்றி இனிதுமுடியுமென்பது கருத்து. திருவரங்கத்திற்குப் பெரியகோயிலென்றும், அங்குஎழுந்தருளியிருக் கின்ற எம்பெருமானுக்குப் பெரியபெருமாளென்றும் திருநாமங்கள் வழங்கும், பெருமாள் - இராமபிரான்; (இளையபெருமாள் - லக்ஷ்மணன்:) இராம பிரானால் முன்பு திருவாராதநஞ் செய்யப்பெற்றமைபற்றி, ஸ்ரீரங்கநாதனுக்கு "பெரியபெருமாள்" என்று திருநாமம். அரங்கர் - ரங்கமென்னும் விமானத்தில் எழுந்தருளியிருப்பவர். நகை முகம் - புன்சிரிப்பையுடைய முக மென்றும், ஒளியையுடைய முகமென்றுங் கொள்ளலாம். தொடர்தல் - தேடிப்பின் தொடர்தலுமாம். துழாய்மணக்குந்தாள் - அடியார்கள்அருச்சித்த திருத்துழாயின் வாசனை வீசப்பெற்ற திருவடி; இடத்துநிகழ்பொருளின் தொழில், இடத்தின்மேற் சார்த்தப்பட்டது. அன்றி, துழாயினால் மணக்குந் தா ளென்றும், துழாயோடு இயற்கைநறுமணம்வீசுந் தா ளென்றும் கூறலாம். இனி, திருத்துழாய் வாசனை வீசுதற்குக் காரணமான திருவடியென்றல் சிறக்கும். இப்பொருளில், பெயரெச்சம் - காரியப்பொருளது: "நோய் தீரும் மருந்து" என்றாற் போல, "ஸர்வகந்தன்" என்று பெயர்பெறும்படி இயற்கைத்திவ்வியபரிமளமுடைய கடவுளாதலால், இங்ஙனங்கூறுதல் ஏற்கும். திருத்துழாய் அங்குரித்ததுமுதல் என்றும்மாறாத நறுமணமுடைய தாதலால், என்றும் மாறாத இயற்கை நறுமணமுடைய திருமாலுக்கு உரியதாய்ச் சிறக்கும். திருமாலின் சங்கம் - பாஞ்சஜந்ய மென்றும், சக்கரம் - சுதர்சந மென்றும், கதை - கௌமோதகீ யென்றும், வில் - சார்ங்க மென்றும், வாள் - நந்தக மென்றும் பெயர்பெறும். இவை துஷ்டநிக்கிரகஞ்செய்யுங் கருவியாய்ச்சிறத்தலால், இவற்றைத் தமது இடையூறுதவிர்க்குங் காப்பாகக் கொண்டார்; அன்றியும், இவை, எம்பெருமானுக்குக் குற்றேவல்செய்யும் பரிஜனங்களாய் எப்பொழுதும் அவனருகில்விடாது நின்று அவனது திருவுள்ளக்கருத்தின்படி தொழில்செய்யும்: திருவரங்கத்தந்தாதிக்காப்பில் "அரங்கர், காராழி |