பக்கம் எண் :

132திருவரங்கத்துமாலை

வண்ணப்பெருமா ளந்தாதிக்குக் காப்புரைக்கில்,..... கூராழி சங்கந்திருக்கதை நாந்தகங் கோதண்டமே" என்றதுங் காண்க. நகைமுகம் முதலியவற்றைக் காப்பாகக்கொண்டது, அவை சிஷ்டபரிபாலனஞ்செய்தற்கு உறுப்பாதலால். ஒரு திருக்கை திருச்சங்கையும், அதற்கேற்ற மற்றொரு திருக்கை திருவாழியையுந் தரித்தல் இயல்பாதலால், அவற்றை "சங்காழி" எனச் சேர்த்துக்கூறினர்.

"நாளும்" என்ற உம்மை, தொறுப்பொருளது. மற்றை உம்மைகள் - எண்ணுப்பொருளன. அரங்கர் - உயர்வுப்பன்மை. முகம், கரம் - வடசொற்கள். சங்கு, தண்டு - ஸங்கம், தண்டம் என்ற வடசொற்களின் விகாரம். நகை.. நகுத லென "ஐ" விகுதி பெற்ற தொழிற்பெயராகவேனும், நகைத்தலென முதனிலைத்தொழிற்பெயராகவேனுங் கொள்ளத்தக்கது. துழாய் - துளஸீ என்னும் வடசொல்லின் சிதைவு. சங்காழி - பன்மைவிகுதி பெறாத அஃறிணையும்மைத்தொகை. ஆழி - வட்டவடிவமாக வுள்ளது; (அசுரர் முதலிய கொடியவர்களை) அழிப்பதென்று இதற்குக் காரணப் பொருள் கூறவுமாம். வரும் - செய்யுமென்முற்று; இது நிகழ்காலமுணர்த்துதலை "பல்லோர்படர்க்கை முன்னிலை தன்மை, அவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச், செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா" என்னுந் தொல்காப்பியச் சூத்திரம் நோக்கி யுணர்க. அரங்கரது நகைமுகம் முதலியன தமக்குத்துணையாய்வருதல் முக்காலத்தினும் உளதாதலால், நிகழ் காலத்தாற் கூறப்பட்டது. "முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை, எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து, மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்" என்ற தொல்காப்பியச் சூத்திரத்தின் உரையில் "நிகழுங்காலத்து மெய்ந்நிலைப்பொதுச்சொல்" என்றதற்கு "நிகழ்காலத்திற்கு உரித்தாய்நின்றும் ஏனைக்காலங்களையும் உள்ளடக்கிநிற்கும் பொருள்நிலைமையினையுடைய செய்யுமென்னுஞ் சொல்" என்று பொருள்கூறி, "மலைநிற்கும், தீச்சுடும், ஞாயிறுஇயங்கும், திங்களியங்கும்" என்றவற்றை உதாரணங் காட்டினர் நச்சினார்க்கினியர்; சேனாவரையர்கருத்தும் இதுவே. தமியேன் - தனித்துள்ள யான்; இது, தனிமைப்பொருள் குறித்த தமியென்னும் வினைப்பகுதியடியாப்பிறந்து பணிவையுணர்த்துந் தன்மையொருமைப் பெயர். "வளைந்துகொண்டு" என்பது, ஒருசொல்நீர்மைத்து; "என்றுகொண்டினையகூறி" என்றவிடத்துப் போல; "கிளந்தவல்ல வேறுபிற தோன்றினுங், கிளந்தவற்றியலா னுணர்ந்தனர்கொளலே" என்னுந் தொல்காப்பியத்து இடைச்சொல்லியற் புறனடைச்சூத்திரத்தால் "கொண்டு" என்னும் அசை கொள்ளலும் அமையும்.