பக்கம் எண் :

134திருவரங்கத்துமாலை

மங்களாசாஸநஞ்செய்பவராய், முதலில் "திருவாழி" என்றார். பொய்கையாழ்வார் சூரியதீபத்தையேற்றியும் பூதத்தாழ்வார் ஞானதீபத்தையேற்றியுங் காட்ட எம்பெருமானைக் காண்கின்ற பேயாழ்வார் முதலில் "திருக்கண்டேன்" என்றமை காணத்தக்கது. ஒருவன் எம்பெருமானை ஆசிரயிக்கப்புக்கால் அப்பொழுது அவன்குற்றம்பாராமல் அவனைத் தன்நிழலிலே வைத்துச் சமயமறிந்து எம்பெருமான்திருமுன்பே கொண்டுவிட்டு இவன்குற்றத்தைப் பொறுப்பிப்பதற்குப் பிராட்டியின் புருஷகாரம் இன்றியமையா தாதலால் "அந்தமில்சீர்ப், பொற்பாவைதன்னருளாற் பொன்னரங்கர் தாள்பணிந்து, நற்பாலடைந்துய்ந்தேன்நான்" என்றபடி பிராட்டிமுன்னாகப் பெருமாளையடைய வேண்டியதாதல்பற்றியும் அவளை முதலில்வாழ்த்துதல் ஏற்கும். அநந்தரம் சற்றுஉற்றுநோக்குமிடத்து, சந்திரசூரியமண்டலங்கள்போல விளங்குகின்றனவாய் முறையே அவனது இடத்திருக்கையிலும் வலத்திருக் கையிலுமுள்ள சங்கசக்கரங்களின் சோதி காணப்படுதலால், "எம்பெருமானது திருமேனிக்குக் காவலாய்த் துஷ்டநிக்கிரகசிஷ்டபரிபாலனத்துக்கு உறுப்பாக வுள்ள இத்திவ்வியாயுதங்கள் என்றும் அழிவின்றி வாழவேண்டும்" என்று ஆசாஸிப்பவராய் "சங்கு திருவாழி வாழி" என்றனர். மற்றும்ஊன்றிப் பார்க்கையில், அப்பரமனது முடிவில்லதோரெழில்நீலமேனியும் அத்திருமேனிபள்ளிகொண்டிருக்கிற கிடையும் கட்புலனாதலால், அவற்றை வாழ்த்தலாயிற்று. எம்பெருமான்திருமேனி நீர்கொண்ட மேகம்போலக் காண்பவர் கண்களைக்குளிரச்செய்து அவர்கள்தாபந்தவிர்த்து அவர்களை உய்விப்பதாதலால் அதற்கும், அந்த அமலனது யோகநித்திரை எல்லாவுயிர்களும் உய்யும்வகையைச் சிந்திப்ப தாதலால் அதற்கும் வாழ்த்துக்கூறல் வேண்டிற்று. திருமேனியைக் கண்ணுற்றபின்னர் அந்தஆதிமூர்த்தியைத் திருப்பாணாழ்வார்போலத் திருவடிமுதல் திருமுடியீறாகச் சேவித்து அநுபவித்து ஆனந்தமடையத் தொடங்குகின்றா ராதலால், "தாள்வாழி" என்றார். இவ்வளவு அநுபவத்திற்குங் காரணம் கோயில்வாசமென்பது கொண்டு, ஈற்றில் "அரங்கப்பெருஞ்செல்வம்" வாழ்த்தப்பட்டது.

"சங்குதிருவாழி" என்று சேர்த்துக்கூறியதன் காரணம் காப்புச்செய்யு ளுரையிற் கூறப்பட்டது. யோகநித்திரை - எல்லாவற்றையும் அறிந்து கொண்டே லோகரக்ஷணசிந்தையுடனே தூங்குகின்றதுபோலப் பிறர்க்குத் தோன்றவைக்கும் நிலை; இது - அறிதுயில், விழிதுயில், துயிலாத்துயில், பொய்த்துயில், மாயத்துயில் எனவும்படும். "மருவார்" என்றது - மலர்க்கும் தாளுக்கும், "வணங்குமன்பர்பெருவாழ்வனைய" என்றது - பெருமாளுக்கும் அரங்கத்திற்கும் அடைமொழியாகத்தக்கது.

திருவாழி சங்குதிருவாழி வாழி - "வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு, வடிவார்சோதிவலத்துறையுஞ்சுடராழியும் பல்லாண்டு, படைபோர்க்குமுழங்குமப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே" என்றார் திருப்பல்லாண்டில், தாள்வாழி - "உன்செவ்வடிசெவ்விதிருக்கா ப்பு" என்றது திருப்பல்லாண்டு. வாழி பெருமாளரங்கப்பெருஞ்செல்வம் - "ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம்" என்ற வடமொழிமேற்கோளைக் காண்க.