திரு - பெரியபிராட்டியார். வாழிய என்னும் வியங்கோள்வினை முற்று, ஈற்று யகரவுயிர்மெய் கெட்டு "வாழி" என நின்றது. அதன்முன் வருமொழி முதல்வலி இயல்பாம்: வியங்கோள் ஐம்பால்மூவிடங்கட்கும் பொதுவாத லுணர்க. "சங்கு திருவாழி" என்ற தொடரின் இடையிலுள்ள "திரு" என்ற அடைமொழியை, மத்திமதீபமாக, முன்நின்ற "சங்கு" என்றதனோடுங் கூட்டுக; இவை ஆயுதகோடியில்மாத்திரமன்றி ஆபரண கோடியிலுஞ் சேர்தலால், அழகிய சங்கசக்கரங்க ளெனவுந் தகும். "சிறந்த" என்ற விசேஷணம், உபமானமாகிய கொண்டலோடும், உபமேயமாகிய உருவோடும் இயையும். கொண்டலுக்குச் சிறப்பு - உலகமும் அதற்குஉறுதி யாகிய அறம்பொருளின்பங்களும் நடத்தற்கு ஏதுவாதலும், குளிர்ந்தவடி வுடைமைபற்றிக் கண்டோரால் விரும்பப்படுதலும். உருவிற்குச் சிறப்பு - "அண்டர்கோ னணியரங்க னென்னமுதினைக், கண்ட கண்கள் மற்றொன் றினைக்காணாவே" என்றபடி கண்டவர்கண்களைக்கவர்தலும், அவரது பிறவிப் பெருங்கடலைப் போக்குதலும். உரு - வடிவும், நிறமுமாம். ஆர்மலர் - வினைத்தொகை: மரு வார் என்று எடுத்து, வாசனைநீண்ட என்றலு மொன்று; நெடுந்தூரமளவும் வாசனைவீசுகின்ற என்று கருத்து. தாளுக்கு, மது - இனிமை மிகுதி. ("அம்ருதஸ்யந்திநிபாதபங்கஜே" என்பது காண்க.) அடைமொழி கொடாமல் "மலர்" என்றால், அது, எல்லாமலர்களினுஞ் சிறந்ததாகிய தாமரைமலரைக் குறிக்கும். அது - திருவடிகட்கு, செம்மை மென்மை அழகுகளில் உவமம். அன்பர் - அன்பையுடையவர்; பக்தர். அவர்கட்கு எல்லாநன்மைகளும் திருவரங்கநாதனாலும் ஸ்ரீரங்கம்கிமையாலும் உண்டாதல்பற்றி, "அன்பர் பெருவாழ்வனைய பெருமாளரங்கப் பெருஞ்செல்வம்" எனப்பட்டது. கொண்டல் - நீர்கொண்ட மேகத்திற்குத் தொழிலாகுபெயர்; கொள் - பகுதி, தல் - விகுதி, ளகரதகரங்கள் ணகரடகரங்களானது - சந்தி. உரு - ரூபமென்ற வடசொல்லின் சிதைவு. யோகம், மது - வடசொற்கள். "பெருமாள்" என்பதை, திரு, சங்கு திருவாழி, உரு, துயில், தாள் என்றவற்றோடுங் கூட்டுக. "பெருமாள் அரங்கப்பெருஞ்செல்வம்" என்பதற்கு - பெரியபெருமாளாகிய ஸ்ரீரங்கத்திலுள்ள பெருஞ்செல்வ மென்றலும் அமையும்; "உங்கள் பூர்வர்கள் தேடிவைத்த மஹாநிதி இதுகாணும்" என்றுசொல்லி ஆளவந்தார்க்கு மணக்கால்நம்பி பெரியபெருமாளைச் சுட்டிக்காட்டிய வரலாற்றை யுணர்க; "ஸ்ரீரங்கமங்களநிதி." "பெருவாழ்வு" என்றது, அழியாத முத்தியுலகத்துப் பேரின்பவாழ்வுமாம். இச்செய்யுள் - தண்டியாசிரியர் கொள்கைப்படி "வாழ்த்து" என்னும் அலங்காரமாம்; "இன்னார்க் கின்னதியைக வென்று தாம், முன்னியது கிளத்தல் வாழ்த்தென மொழிப" என அதனிலக்கண முணர்க. முதலிடை கடைகளில் மங்கலவாழ்த்தையுடைய காப்பியம் அழிவின்றி நின்று சிறப்புறு மென்பது ஆன்றோர்கொள்கை யாதலால், முதலில் வாழ்த்துக்கூறினர்; "ஆதியு மந்தமு நடுவு மங்கலம், ஓதிய முறைமையி னுரைப்ப ராயிடின், ஏதமி லிருநிலக் கிழத்தி யின்புற, நீதியம் பனுவல்கள் நிலவு மென்பவே" என்பது காண்க. |