பக்கம் எண் :

140திருவரங்கத்துமாலை

வகைஉபசாரவழக்கு. ஆளானவர்கண்களிகூர் அரங்கம் - "கூர்" என்ற வினைத்தொகை - காரியப்பொருளதாய், காரணப்பெயரைக் கொண்டது. கூர் - மிகுதிகுறிக்கும் உரிச்சொல். அரவணை - ஸர்ப்பசயநம். அர அணை என்றும் பிரிக்கலாம். அரா என்னும் குறியதன்கீழ் ஆகாரம், குறுகியும் அதனோடு உகரமேற்றும் நிற்கும். காள + அசலம் = காளாசலம்: தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர்; பண்புத்தொகை. காளம் - கருநிறமானது. அசலம் - சலியாதது என மலைக்குக் காரணக்குறி. காளாசலம் - நீலகிரி: காளமேகம்படிந்ததொரு பெருமலையென்றுங் கொள்ளலாம். என - உவமவுருபு. காளாசலம் - நிறத்திற்கும், கம்பீரமாகிய தோற்றத்திற்கும் உவமையாம். ஒண்ணா - ஒன்றா என்பதன் மரூஉ; ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம். "செம்பொன்மாமுடி" என்றதை அன்மொழித்தொகையாகவாவது அடையடுத்தஆகுபெயராகவாவது கொள்ளவே, சிரசை யுணர்த்தும். "செம்பொன்" என்பதை அதனாலாகிய கிரீடத்துக்குக் கருவியாகுபெய ரெனக் கொண்டு, முடி - சிரசு என்றலுமாம். மா முடி - பெரிய கிரீடமுமாம். தாமம் - வடசொல்; திருத்துழாய்மாலை, மலர்மாலைகள், பொன்மணிகளாலாகியஆரங்கள், வனமாலை யென்னுந்திவ்வியமாலை இவைகளையெல்லாங் குறிக்கும். தாமம் எனக்கொண்டு, ஒளியென்னவுமாம். "திரு" என்ற அடைமொழியை, தாள் முடி தோள் என்றவற்றிற்குங் கூட்டலாம்.

இங்கே "ஆயிரம்" என்றது, அளவில்லாததென்னும் பொருளது. அங்ஙனங்கொள்ளாவிடின், தாளாயிரம் முடியாயிரம் முதலியன சேராவாம். ஆகவே, அளவற்ற பாதம் முதலிய சகல அங்கங்களையு முடையவ னென்பதாம். அபரிமிதமாய் அற்புதமாயிருக்கிற மகாஞானமும் மகாசக்தியு முள்ளவன் எம்பெருமான் என்பது, தேர்ந்தபொருள். பெருமான் சகலஇந்திரி யங்களாலேயாதல் ஓர்இந்திரியத்தாலேயாதல் திருமேனியாலேயாதல் திவ்யாத்மஸ்வரூபத்தாலேயாதல் எல்லாவற்றையும் எப்போதும் எல்லா விதத்திலும் அறிகின்றவனும் செய்கின்றவனுமா யிருக்கின்றா னென்பது, முக்கியமான கருத்து. இங்ஙனமேயன்றி, அநேகம் திருமுடிகள் திருக்கண்கள் திருக்கைகள் திருவடிகள் முதலாகிய அவயவங்களாற் செறிந்திருக்கின்றான் பகவா னென்பது கருத்தன்று. அளவில்லாத கண் முதலியவற்றை யுடையவன் எப்படி அளவில்லாதகாட்சி முதலானவற்றை யுடையனாயிருப் பனோ அப்படியே பகவானும் என்று எடுத்துக்காட்டினபடியாம். மற்றும், விசுவரூபங்காட்டுகிற சமயங்களில்மாத்திரம் எம்பெருமான் பல அவயவங்களைக் கொள்ளுதலும் உண்டு. இங்கு, சிலர், உலகமெல்லாம் பகவானுடைய சொரூப மாதலால் உலகத்திலுள்ளோருடைய முடி புயம் முதலியவையெல்லாம் அவனுடையவையா மெனக் கருத்துக்கூறுவர்; அது பலவிதத்திலும் பொருந்தா தென அறிக. இது, திவ்யாத்மஸ்வரூபம் கூறியபடி.

(3)

4.பூங்காவிரிப்புனற்கோயிலுள்ளேமிக்கபோகமெல்லாம்
யாங்காணயோகத்துயில்கொண்டவாறெள்ளுமெண்ணெயும்போ
னீங்காதுலகத்துயிர்க்குயிராகிநியாமகனா
யோங்காரமாயதனுட்பொருளாய்நின்றவொண்சுடரே.