பக்கம் எண் :

திருவரங்கத்துமாலை143

மகன். ஓங்காரம் - வடசொற்கள். தம்மைப்போன்ற அடியார்களையுஞ் சேர்த்துக்கொண்டு, உளப்பாட்டுத்தன்மைப்பன்மையாக, "யாம்" என்றார்; கவிகளுக்கு உரிய இயற்கைத்தனித்தன்மைப்பன்மையுமாம். எண்ணெய் - எள் நெய்: எள்ளின் சாரம். ஒள் - ஒண்மை யென்ற பண்பின் அடி. ஒள் + சுடர் = ஒண்சுடர்: பண்படிகளின் லகார ளகாரங்கள் வலிவர னகார ணகாரங் களாம்.

(4)

5.கறங்காழிநாலெட்டிலக்கமியோசனை கட்செவியின்
பிறங்காகமும்மையிலக்கமியோசனை பேருலகி
லிறங்காழிமேகமெனவேயரங்கத்திலெந்தையதி
லுறங்காகநீளமைந்தைம்பதினாயிரமோசனையே.

(இ - ள்.) கறங்கு - ஆரவாரிக்கின்ற, ஆழி - திருப்பாற்கடலினது, (நீளம்) -, நால் எட்டு இலக்கம் யோசனை - முப்பத்திரண்டுலக்ஷம் யோஜனை யளவாம்; கட்செவியின் - (அதனிடையேயுள்ள) திருவனந்தாழ்வானுடைய, பிறங்கு ஆகம் - விளங்குகின்ற திருவுடம்பினது, (நீளம்) -, மும்மை இலக்கம் யோசனை - மூன்றுலக்ஷம் யோஜனையாம்; பேர் உலகில் இறங்கு ஆழி மேகம் எனவே - பெரிய இந்நிலவுலகத்தி லிறங்கிவந்த சக்கராயுதத்தையு டையதொரு மேகம்போல, அரங்கத்தில் எந்தை அதில் உறங்கு - திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் அந்தத்திருவனந்தாழ்வான் மேலே (பள்ளிகொண்டு) யோகநித்திரைசெய்தருள்கின்ற, ஆகம் - திருமேனியினது, நீளம் -நீட்சி, ஐந்து ஐம்பதினாயிரம் ஓசனை - இரண்டரை லக்ஷம் (இரண்டுலக்ஷத்து ஐம்பதினாயிரம்) யோஜனையாகும்; (எ - று.)

எம்பெருமானுக்கு உரிய பரத்வம், வியூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சை என்ற ஐவகைநிலைகளுள் வியூகநிலை, இதிற் குறிக்கப்பட்டது. பிரமன் முதலியதேவர்கள் வணங்கி வழிபடுந்தெய்வமாய் எல்லா அவதாரங்களுக்கும் முதலாய்ப் படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களுக்குக் கர்த்தாவாய்த் திருப்பாற்கடலிலே வாசுதேவ ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்தர்களாகிய நான்கு ரூபத்துடன் எழுந்தருளியிருக்கின்ற நிலை, வியூக மெனப்படும். அந்த நான்குமூர்த்திகளுட் பிரதானமாகிய வாசுதேவமூர்த்தியின் திருமேனிவளத்தைக் கூறுபவராய், அதற்கு அங்கமாகப் பாற்கடலின் நீளமே தொடங்கிக் கூறலானார். "ஆழி" என்று பொதுப்படக்கூறினாரேனும், சந்தர்ப்பத்தால், பாற்கடலைக் குறித்தது. நாலெட்டு - பண்புத்தொகை. "ஆசறவயங்குஞ் சாகநற்றீவி னகல நாலெட்டிலக்கத்தி, னோசனையனந்தன்மிசை யரியுறும்பாலுவரியு மன்னதேயாம்" என்ற மகாபாகவதத்தாலும் பாற்கடற் பரப்பின் எல்லையை உணரலாம். இதனால், "நாலெட்டு" என்பதற்கு - உம்மைத்தொகையாக, பன்னிரண்டுஎனப் பொருள்கொள்ளுதல் பொருந்தாமை, வெளிப்படை. யோசனை - நான்குகுரோசங் கொண்டது; அவ்வளவை, "அங்குலமறுநான் கெய்தினதுகரம் கரமோர்நான்கு, தங்குதல் தனுவென்றாகும் தனுவிரண்டது வோர்தண்டம், இங்குறுதண்டமானவிராயிரங்குரோ