சத்தெல்லை, பங்கமில்குரோசநான் கோரியோசனைப்பாலதாமே" என்பதனாற் காண்க. யோசனை, சற்று ஏறக்குறையக் காதவளவாம். கறங்காழி - வினைத்தொகை; கறங்குதல் - ஒலித்தல். ஆழ்ந்துள்ளது ஆழி யெனக் காரணக்குறி; இ - கருத்தாப்பொருள்விகுதி. இலக்கம் - லக்ஷமென்ற வடசொல்லின் விகாரம். இலக்கம் - நூறாயிரம். யோசனை, ஓசனை - யோஜநா என்ற வடசொல்லின் விகாரங்கள். இலக்கம் + யோசனை = இலக்கமியோசனை: தன்னொழிமெய்ம்முன் யகரம்வர இகரம் தோன்றிற்று; இனி, இலக்கம் இயோசனை என்றுபிரித்து, இகரத்தை "யவ்விற்கு, இய்யும் மொழிமுதலாகி முன்வருமே" என்றபடி யகரத்தைமுதலிலேயுடைய வடமொழியின்முன் வந்ததாகக் கொள்ளுதலும் ஒன்று. கட்செவி - கண்செவி: கண்களாகிய காதுகளையுடையது; பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த. அன்மொழித்தொகை: கண்களையே காதுகளாகவு முடைய தென்று கருத்து; பாம்புகட்குக் கண்ணாகிய பொறியொன்றிலேயே காணுதலுங் கேட்டலுமாகிய புலனறிவிரண்டும் அமைந்திருத்தல் காண்க: இதுபற்றி, வடநூலார் பாம்புக்கு "சக்ஷுஸ்ரவஸ்" என்று ஒருபெயர் கூறுவர்; "கோகனநாகம்" என்றார் வில்லிப்புத்தூராரும். "தெரிமாண் தமிழ்மும்மைத் தென்னம்பொருப்பன்" என்றவிடத்துப்போல, இங்கு "மும்மை" என்பது - மூன்றின் தன்மையை யுணர்த்தாமல் மூன்றென்னும் எண்ணையே உணர்த்தியது: "இருமைவகை தெரிந் தீண் டறம் பூண்டார்" என்ற திருக்குறளில் "இருமை" என்றதும் இத்திறத்ததே: இதில், "மை" விகுதி - தன்மையை யுணர்த்தாமல் தன்மையையுடைய பொருளையே உணர்த்தியதனால், பகுதிப்பொருள்விகுதியாம்; இதனை வடநூலார் ஸ்வார்த்தபாவதத்திதப்ரத்யய மென்பர். எம்பெருமானது திருமேனிக்கு மேகம் - நிறத்திலும், கண்டவர்கண் குளிரச்செய்யுந்திறத்திலும், அடுத்தவரிளைப்புத்தவிர்த்தலிலும் உவமை. சக்கராயுதத்தைக் கையிலுடைய திருமாலுக்கு உவமையாதற்பொருட்டு "ஆழி மேகம்" என்றார்; அது - இல்பொருளுவமை. திருப்பாற்கடல் இந்நிலவுலகத்திலுள்ள தாதலால், மேகத்திற்கு "பேருலகிலிறங்கு" என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. மேகம் - வடசொல். ஏ - தேற்றம். எந்தை - எமது பரமபிதா: யாம் என்ற பகுதி, "எம்" என விகாரப்பட்டது; தை - விகுதி. எந்தை = நம்பெருமாள். நீளம் - நெடுமை. ஐந்தைம்பதினாயிரம் - பண்புத்தொகைப் பன்மொழித்தொடர்; இருநூற்றைம்பதினாயிரம். கடலிற் படிந்து அதன்நீரை யுட்கொண்டு கருவுற்ற நீலமேக மென்ற பொருளில் "ஆழி மேகம்" என்றாருமாம். இனி, "ஆழி மேகம்" என்றதைப் பன்மைவிகுதிபெறாத அஃறிணையும்மைத்தொகை யென்று கொண்டு, கடலும் மேகமும் போலவென்று தனித்தனி உவமையாக உரைப்பர் ஒருசாரார். பேருலகில் ஆழிஇறங்கு மேகம் என மொழிமாற்றி, பெரிய இவ்வுலகத்திலே அப்பாற்கடலிலிறங்கிப் படிந்ததொரு மேகம்போல வென்று பொருள்கொள்ளுதலும் அமையும். "நீளம்" என்றதனைப் பிறவற்றிற்குங் கூட்டுக; கடைநிலைத்தீவகம். "யோசனை" என்றது, பெயர்ப்பயனிலையாய் நின்றது. (5) |