களிற் சூட்டும் பூமாலைபோன்ற பாமாலை யென்க; ("அடிசூட்டலாகுமந்தாய மம்," "செய்யசுடராழியானடிக்கே சூட்டினேன்சொன்மாலை," "கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் - உற்ற, திருமாலை பாடுஞ் சீர்" என்றார் பெரியாரும்.) வாள் - ஒளி; உரிச்சொல். அரவிந்தம் - தாமரை; வடசொல்: அதில் வாழ்பவள், அரவிந்தை: அதன்மேல், மார் - பலர்பால்விகுதி. இம்மை - இப்பிறப்பு, மறுமை - இறந்தபின்வரும் நிலை. மாமணவாளர் - ஸ்ரீயஃபதி.மா, பதம் - வடசொற்கள். "தேனார்கமலத்திருமாமகள்கொழுநன், தானே வைகுந்தந்தரும்" என்றபடி பிராட்டியின் புருஷகாரபலத்தாலே பெருமான் தனது உலகத்தைத் தந்தருள்வ னென்பதுதோன்ற, 'மாமணவாளர்தம்பதம் வாய்த்திடும்' என்றார். மணவாளர் என்றது - மூன்றடியிலும், உயர்வுப்பன்மை. ஒருபெயரின் ஒருபகுதியைக் கொண்டு அப்பெயர் முழுதையுங்குறிப்பதொரு மரபுபற்றி, அழகியமணவாளதாசரை 'மணவாளர்' என்றார்; இதனை வடநூலார் 'நாமைகதேசேநாமக்ரஹணம்' என்பர். இரண்டாமடியில், தம் - சாரியை. வாய்த்திடும், இடு - தேற்றமுணர்த்தும் துணைவினை. 'மணவாளர்' என ஆக்கியோன் பெயரும், 'யமகவந்தாதி' என நூற்பெயரும், 'கோயிலில் வந்த அந்தமணவாளர் பொற்றிருப்பாதாம்புயங்கட்கு மாலையெனச்சூடும்' என நுதலியபொருளும், 'மணவாளரவிந்தைமார்நோக்க விம்மை மறுமையில் மாமணவாளர்தம்பதம் வாய்த்திடும்' எனப் பயனும் பெறப்பட்டன. "ஆக்கியோன்பெயரேவழியேயெல்லை, நூற்பெயர்யாப்பே நுதலியபொருளே, கேட்போர் பயனோடா யெண்பொருளும், வாய்ப்பக்காட்டல் பாயிரத்தியல்பே" என்ற சிறப்புப்பாயிரத்திலக்கணத்தில் மற்றவை குறிப்பிக்கப்படுவன உய்த்துணர்ந்துகொள்க. இக்கவி, பிறன்கூறியது; அபியுக்தரிலொருவர்செய்த தென்பர்: இது, வைஷ்ணவசம்பிரதாயத்தில் 'தனியன்' எனப்படும்; (நூலுள் அடங்காது தனியே பாயிரமாய் நிற்றல் பற்றியது, அப்பெயர்; 'அன்' விகுதி - உயர்வுப் பொருளது.) காப்பு காப்பு - காத்தல்; அது, இங்கு, காக்கின்ற கடவுளின் விஷயமான வணக்கத்தைக் குறிக்கும்: ஆகவே, கவி தமக்குநேரிடைத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்கவல்ல தலைமைப்பொருளின் விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது கருத்து. [விஷ்வக்ஸேநரும், பஞ்சாயுதமும்.] 1. | ஓராழிவெய்யவன் சூழுலகேழுவந்தேத்தரங்கர் | | காராழிவண்ணப்பெருமாளந்தாதிக்குக்காப்புரைக்கிற் | | சீராழியங்கையிற்பொற்பிரம்பேந்தியசேனையர்கோன் | | கூராழிசங்கந்திருக்கதைநாந்தகங்கோதண்டமே. | (இ - ள்.) ஓர் ஆழி - ஒற்றைச்சக்கரங்கோத்த தேரையுடைய, வெய்யவன் - சூரியனால், சூழ் - சூழ்ந்துவரப்பெற்ற, உலகு ஏழ் - ஏழுதீவுகளாகவுள்ள பூமியி லிருக்கிற சனங்கள், உவந்து ஏத்து - மனமகிழ்ந்து துதிக்கப் |