எம்பெருமானதுஆணையைத் தான்கொண்டு நடத்துதற்கு அறிகுறியாகவும் இவர் கையிலே பொற்செங்கோலேந்திநிற்பர். இவர்கையில் 'ஆழி' என்றது, எம்பெருமானிடம் இவர்பெற்றுள்ள அதிகாரத்துக்கு அறிகுறியான முத்திரை மோதிரத்தை. திருமாலின் பஞ்சாயுதங்களுள் சக்கரம் - சுதர்சநமென்றும், சங்கம் - பாஞ்சஜந்ய மென்றும், கதை - கௌமோதகி யென்றும், வாள் - நந்தக மென்றும், வில் - சார்ங்க மென்றும் பெயர்பெறும். இவை துஷ்ட நிக்கிரக சிஷ்டபரிபாலநஞ் செய்யுங் கருவியாய்ச் சிறத்தலால், இவற்றைக் காப்பாகக் கொண்டார். சூரியனது தேர் சம்வற்சரரூபமான ஒற்றைச் சக்கரமுடைய தென்று புராணம் கூறும். வெய்யன் - உஷ்ணகிரணமுடையவன்; வெம்மையென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர். இங்கு 'உலகேழ்' என்றது, ஜம்பு பிலக்ஷம் குசம் கிரௌஞ்சம் சாகம் சால்மலி புஷ்கரம் என்ற ஏழுதீவுகளை, இங்கு 'உலகு' என்றது, உயிர்களின்மேல் நிற்கும். காராழிவண்ணம் - மேகமும் கடலும் போன்ற திருநிறமெனினுமாம். பெருமாள் = பெருமான், பெருமையையுடையவர்; இதில், பெருமை யென்ற பகுதி ஈற்றுஐகாரம் மாத்திரம் கெட்டு, பெரும் என நின்றது; 'ஆன்' என்ற ஆண்பால்விகுதி 'ஆள்' என ஈறு திரிந்தது; 'ஆள்' என்ற பெண்பால்விகுதியே சிறுபான்மை ஆண்பாலுக்கு வந்ததென்றலும் ஒன்று: அன்றி, பெருமையை ஆள்பவனெனக்கொண்டால் ஆள்என்ற வினைப்பகுதி கருத்தாப்பொருள்விகுதி புணர்ந்துகெட்டதென வேண்டும். பெருமாளந்தாதி என்ற தொடரில் தொக்குநின்ற ஆறாம்வேற்றுமையுருபின் பொருளாகிய சம்பந்தம் - விஷயமாகவுடைமை; விஷ்ணுபுராணம், விநாயகரகவல் என்பவற்றிற் போல. நாந்தகம் - நந்தக மென்பதன் விகாரம். ஆழி என்ற சொல் - தேர்ச்சக்கரம் மோதிரம் சக்கராயுதம் என்ற பொருள்களில் வட்டவடிவுடைய தென்றும், கடலென்றபொருளில் ஆழ்ந்துள்ளது என்றும் காரணப்பொருள்படும்; இனி கடலென்றபொருளில் பிரளயகாலத்து உலகங்களை அழிப்ப தென்றும், சக்கராயுதமென்ற பொருளில் பகைவர்களையழிப்ப தென்றும் கொள்ளலு மொன்று. 'ஓர்ஆழி' என்றது - ஒற்றைச்சக்கரமுடைய தேருக்கு, பண்புத்தொகையன்மொழி. இச்செய்யுளில் ஆழிஎன்கிற ஒருசொல் அடிதோறும் வேறுபொருளில் வந்தது, சொற்பின்வருநிலையணி. இப்பொருளணியோடு திரிபு என்னும் சொல்லணியும் அமைந்திருத்தல் காண்க. (திரிபாவது - ஒவ்வோரடியிலும் முதலெழுத்துமாத்திரம் வேறுபட்டிருக்க, இரண்டுமுதலியபலஎழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள்வேறுபடுவது.) இவ்விரண்டணியும் பேதப்படாமற் கலந்துவந்தது, கலவையணி. (1) [பன்னிரண்டுஆழ்வார்களின் அருளிச்செயல்.] 2. | வையம்புகழ்பொய்கைபேய்பூதன்மாறன்மதுரகவி | | யையன்மழிசைமன்கோழியர்கோனருட்பாண்பெருமாண் | | மெய்யன்பர்காற்பொடிவிண்டுசித்தன்வியன்கோதைவெற்றி | | நெய்யங்கைவேற்கலியன்றமிழ்வேதநிலைநிற்கவே. | |