(இ - ள்.) வையம் புகழ் - உலகத்தவர்களாற்புகழப்படுகிற, பொய்கை - பொய்கையாழ்வாரும், பேய் - பேயாழ்வாரும், பூதன் - பூதத்தாழ்வாரும், மாறன் - நம்மாழ்வாரும், மதுரகவி ஐயன் - மதுரகவியாழ்வாரும், மழிசை மன் - திருமழிசையாழ்வாரும், கோழியர்கோன் - குலசேகராழ்வாரும், அருள் பாண் பெருமாள் - (நம்பெருமாளின்) விசேஷகடாக்ஷம் பெற்ற திருப்பாணாழ்வாரும், மெய் அன்பர் கால் பொடி - தொண்டரடிப் பொடியாழ்வாரும், விண்டு சித்தன் - பெரியாழ்வாரும், வியன் கோதை - பெருமையையுடைய ஆண்டாளும், வெற்றி நெய் வேல் அம்கை கலியன் - சயம்பொருந்தியதும்நெய்பூசியதுமான வேலாயுதத்தை யேந்திய அழகிய கையையுடைய திருமங்கையாழ்வாரும் ஆகிய பன்னிரண்டு ஆழ்வார்களால் அருளிச்செய்யப்பட்ட, தமிழ் வேதம் - திரவிடவேதமாகிய (நாலாயிர) திவ்வியப்பிரபந்தங்கள், நிலை நிற்க - (எக்காலத்தும் அழிவின்றி உலகத்தில்) நிலைபெற்றிருக்கக்கடவன; (எ - று.) ஆசீர்வாதம் [வாழ்த்து]. நமஸ்காரம் [வணக்கம்], வஸ்துநிர்த்தேசம் [தலைமைப்பொருளுரைத்தல்] என்ற மூவகை மங்களங்களுள், இது வாழ்த்தாம். ஆழ்வார்களால் வெளியிடப்பட்ட திவ்வியப்பிரபந்தங்களின் சொற்பொருட் கருத்துக்கள் அமைய அப்பிரபந்தங்கள் போலச் செய்யப்படுவது இத்திரு வரங்கத்தந்தாதி யாதலால், இந்நூலின் இக்காப்புச்செய்யுளை ஏற்புடைக்கடவுள்வாழ்த்தென்றும் கொள்ளலாம். வையம் - இடவாகுபெயர். 'வையம்புகழ்' என்ற அடைமொழியை எல்லாஆழ்வார்கட்கும் கூட்டலாம். இனி, வையம் புகழ் பொய்கை - "வையந் தகளியா" என்றுதொடங்கிப் பிரபந்தம்பாடி (எம்பெருமானை)த் துதித்த பொய்கையாழ்வா ரெனினுமாம்; அவ்வுரைக்கு, வையம்என்பது - அவர்பாடிய முதல்திருவந்தாதிக்கு முதற்குறிப்பு. "பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை, யையனருள்மாறன்சேரலர்கோன் - துய்யபட்ட, நாதனன்பர் தாட்டூளி நற்பாணனன்கலியன், ஈதிவர்தோற்றத்தடைவாமிங்கு" என்றபடி திருவவதாரக்கிரமத்தால் பொய்கையார் பூதத்தார் பேயார் மழிசைப்பிரான் மாறன் குலசேகரர் பெரியாழ்வார் தொண்டரடிப்பொடி திருப்பாணர் திருமங்கையாழ்வார் என முறைப்படுத்தி, பெரியாழ்வாரது திருமகளான ஆண்டாளையும் நம்மாழ்வாரது சிஷ்யரான மதுரகவியையும் ஈற்றில் வைத்தாயினும், ஆண்டாளைப் பெரியாழ்வாரையடுத்தும் மதுரகவியை நம்மாழ்வாரை யடுத்தும் வைத்தாயினும் கூறுவதே முறையாயினும், இங்குச் செய்யுள் நோக்கி முறைபிறழ வைத்தார். பொய்கை - குளம்; பொற்றாமரைப் பொய்கையில் திருவவதரித்த ஆழ்வாரை 'பொய்கை' என்றது, இடவாகுபெயர். இனி, உவமவாகுபெயராய், ஊர்நடுவேயுள்ள குளம்போல எல்லார்க்கும் எளிதிற் பயன்கொடுப்பவ ரென்றுமாம். பேய் - உவமையாகுபெயர்: உலகத்தவராற் பேய்போலஎண்ணப் படுபவர்; அல்லது, அவர்களைத் தாம் பேய்போல எண்ணுபவர்: "பேயரேயெனக்கியாவரும் யானுமோர், பேயனே யெவர்க்கும் இதுபேசியென், ஆயனே யரங்கா வென்றழைக்கின்றேன், பேயனாயொழிந்தே னெம்பிரானுக்கே" என்ற கொள்கைப்படி, இவர் பகவத்பக்தியாற் பரவசப்பட்டு, நெஞ்சழிதல் |