பக்கம் எண் :

திருவரங்கத்தந்தாதி19

கண்சுழலுதல் அழுதல் சிரித்தல் தொழுதல் மகிழ்தல் ஆடுதல் பாடுதல் அலறுதல் முதலிய செய்கைகளையே எப்பொழுதும் கொண்டு, காண்பவர் பேய்பிடித்தவரென்னும்படியிருந்ததனால், பேயாழ்வாரென்று பெயர்பெற்றனர். பூதன் - எம்பெருமானையறிதலாலே தமதுஉளனாகையை யுடையவராதலால், இவர்க்கு, பூதனென்று திருநாமம்: 'பூஸத்தாயாம்' என்றபடி ஸத்தையென்னும் பொருள்கொண்ட பூ என்னும் வடமொழி வினையடியினின்று பிறந்த பெயராதலால், பூதன் என்பதற்கு - ஸத்தை [உள்ளவனாயிருக்கை] பெறுகின்றவனென்று பொருளாயிற்று. இனி, இத்திருநாமத்துக்கு - உலகத்தவரோடு சேராமையாற் பூதம்போன்றவரென்று பொருளுரைத்தல் சம்பிரதாயமன்று. நம்மாழ்வார்க்கு அநேகம் திருநாமங்கள் இருப்பினும் அவற்றில் 'மாறன்' என்பது, முதலில் தந்தையார்இட்ட குழந்தைப்பெயராதலால் அதில் ஈடுபட்டு அப்பெயரினாற் குறித்தார். பிறந்தபொழுதே தொடங்கி அழுதல் பாலுண்ணுதல் முதலியன செய்யாது உலகநடைக்கு மாறாயிருந்ததனால் சடகோபர்க்கு 'மாறன்' என்று திருநாமமாயிற்று. வலியவினைகட்கு மாறாக இருத்தலாலும், அந்நியமதஸ்தர்களை அடக்கி அவர்கட்குச்சத்துருவாயிருத்தலாலும், பாண்டியநாட்டில் தலைமையாகத் தோன்றியதனாலும் வந்த பெயரென்றலும் உண்டு. மதுரகவி - இனிமையான பாடல் பாடுபவர். மழிசைமன் - திருமழிசையென்று வழங்குகின்ற மஹீஸாரக்ஷேத்திரத்தில் திருவவதரித்த பெரியோன்; இது, தொண்டைநாட்டி லுள்ளது. கோழியர்கோன் - கோழியென்னும் ஒருபெயருடைய உறையூரி லுள்ளார்க்குத் தலைவர்; உறையூர், சோழ நாட்டிராசதானி. சேரநாட்டரசரான குலசேகராழ்வார் திக்விஜயஞ்செய்த போது சோழராசனை வென்றுகீழ்ப்படுத்தி அந்நாட்டுக்குந்தலைமைபூண்டதனால், 'கோழியர்கோன்' எனப்பட்டனர். "கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன் குலசேகரன்" என்றதனால், இவர் தமிழ்நாடுமூன்றுக்குந் தலைமைபூண்டமை விளங்கும். முற்காலத்து ஒருகோழி நிலமுக்கியத்தால் அயல்நாட்டுயானையோடு பொருது அதனைப் போர்தொலைத்தமை கண்டு அந்நிலத்துச்செய்த நகரமாதலின், 'கோழி' என்று உறையூருக்குப் பெயராயிற்று. இனி, குலசேகராழ்வார் அரசாட்சிசெய்த இடமான கோழிக்கூடு என்ற சேரநாட்டு இராசதானி (நாமைகதேசேநாமக்கிரகணத்தால்) கோழியெனப்பட்ட தென்றலு மொன்று.

பாண்பெருமாள் - வீணையும் கையுமாய்ப் பெரிய பெருமாள் திருவடிக்கீழே நிரந்தரசேவை பண்ணிக்கொண்டு பாட்டுப் பாடிப் புகழ்பவர்; பாண் - இசைப்பாட்டு: அதற்குத் தலைவர், பாண்பெருமாள். இவர் நம் பெரியபெருமாளுடைய திருமேனியழகில் ஈடுபட்டு அதனை அடிமுதல் முடிவரை அநுபவித்து அப்பெருமாளாற் கொண்டாடி யழைக்கப்பெற்று அப்பெருமாளின் திருவடிகளிலே ஐக்கியமடைந்ததனால், 'பெருமாள்' என்று சிறப்பித்துக் கூறப்படுவர்; "சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழா லளித்த, பாரியலும் புகழ்ப் பாண்பெருமாள்", "காண்பனவுமுரைப்பனவு மற்றொன்றின்றிக்கண்ணனையேகண்டுரைத்தகடியகாதற், பாண்பெருமாள்" என்பன காண்க. உறையூரில் அயோநிஜராய் நெற்பயிர்க்கதிரில் அவதரித்துப் பஞ்சமசாதியிற் பாணர்குலத்திற்பிறந்தானொருவன் வளர்க்கவளர்ந்து யாழ்