அதனையும் விடாமற் பற்களாலே கடித்துவாங்க, அம்மிடுக்கை நோக்கி எம் பெருமான், இவர்க்கு 'கலியன்' என்று ஒருபெயர்கூறினா னென உணர்க. தமிழ்வேதம் - வேதங்களின் சாராம்சமான கருத்து அமையப் பாடிய தமிழ்ப் பிரபந்தங்கள். வியன் - உரிச்சொல்; வியல்என்பதன் விகாரமுமாம். நெய் வேல் - பகைவரது நிணம் தோய்ந்த வேலுமாம். (2) (குருபரம்பரை.) 3. | சீதரன்பூமகள்சேனையர்கோன்றென்குருகைப்பிரா | | னாதமுனியுய்யக்கொண்டாரிராமர்நல்லாளவந்தா | | ரேதமில்வண்மைப்பராங்குசதாசரெதித்தலைவர் | | பாதமடைந்துய்ந்தவாழ்வானெம்பார்பட்டர்பற்றெமக்கே. | (இ - ள்.) சீதரன் - (பரமாசாரியனான) திருமாலும், பூமகள் - (அத்திரு மாலினதுசிஷ்யையான) திருமகளும், சேனையர்கோன் - (அப்பெரியபிராட்டியாரின் சிஷ்யரான) சேனைமுதலியாரும், தென்குருகை பிரான் - (அச்சேனைத் தலைவரதுசிஷ்யரான) அழகியதிருக்குருகூரில் அவதரித்த தலைவராகிய நம்மாழ்வாரும், நாதமுனி - (அச்சடகோபரதுசிஷ்யரான) ஸ்ரீமந்நாதமுனிகளும் உய்யக்கொண்டார் - (அந்நாதமுனிகளின் சிஷ்யரான) உய்யக்கொண்டாரும், இராமர் - (அவருடைய சிஷ்யரான) ராமமிச்ரரென்னுந் திருநாமமுடைய மணக்கால்நம்பியும், நல் ஆளவந்தார் - (அவரது சிஷ்யரான ஞானங் கனிந்த) நலங்கொண்ட ஆளவந்தாரும், ஏதம் இல்வண்மை பராங்குசதாசர் - (அவர்சிஷ்யரான) குற்றமில்லாத உதாரகுணமுள்ள பெரியநம்பியும், எதி தலைவர் - (அவர் சிஷ்யரான) யதிராஜராகிய ஸ்ரீபாஷ்யகாரரும், பாதம் அடைந்து உய்ந்த ஆழ்வான் - (அவருடைய) திருவடிகளைச் சரணமடைந்து நல்வாழ்வுபெற்ற கூரத்தாழ்வானும், எம்பார் - (அவ்வாழ்வான்போலவே ஸ்ரீபாஷ்யகாரர்க்கு அதிஅந்தரங்கசிஷ்யரான) எம்பாரும், பட்டர் - (கூரத்தாழ்வானுடைய குமாரரும் எம்பாரதுசிஷ்யருமான) பட்டரும், (ஆகிய இவர்கள்), எமக்கு பற்று - எமக்குத் தஞ்சமாவர்; (எ - று.) இந்நூலாசிரியர்க்குப் பட்டர் ஸ்வாசாரிய ராதலால், குருபரம்பரையில் அவரளவே கூறலாயிற்று, சீதரன் முதல் பட்டர் ஈறாகச் சொல்லும் குரு பரம்பரைக்கிரமத்தில் எதித்தலைவர்க்குப்பின்னே எம்பார்க்குமுன்னே கூரத்தாழ்வானை வைக்கவேண்டிய அவசியமில்லையாயினும், ஸ்வாசாரியரான பட்டர்க்குக் கூரத்தாழ்வான் திருத்தமப்பனாராதல்பற்றியும், தம்குலமுதல்வரான திருவரங்கத்தமுதனார் ஸ்ரீபாஷ்யகாரருடைய திருவடிகளில் ஆசிரயித்தற்குக் கூரத்தாழ்வான் புருஷகாரராய்நின்றமைபற்றியும், அவ்வாழ்வானை இடையிலே நிறுத்தினார். இது, இந்நூலாசிரியருடைய குலகுருபரம்பரை யென்க. அன்றியும், ஸ்ரீபாஷ்யகாரரது நியமனத்தின்படி சென்று பட்டர்க்கு த்வயோபதேசஞ்செய்து ஆசாரியராகி அவர்க்குப் பஞ்சஸம்ஸ்காரங்களையும் திருவாய்மொழிமுதலிய கிரந்தங்களையும், அவற்றின் வியாக்கியாநங்களையும் அருளினவர், எம்பார்: பட்டர்க்கு ஜாதகரும நாமகரண சௌளோபநயநாதிகளையும், ஸ்ரீபாஷ்யாதிகிரந்தங்களையும் அருளினவர், திருத்தந்தையாரான கூரத்தாழ்வான்; ஆதலால், ஆழ்வானையும் பட்டர்க்கு ஆசாரியரென்றல் ஒருவாறு அமையும். |