ஸ்ரீதரன் - வடசொல்; திருமகளைத் (திருமார்பில்) தரிப்பவன். பூமகள் - (மலர்களிற் சிறந்ததான) தாமரைமலரில் வாழும் மகள். தென் குருகை - தெற்கிலுள்ள குருகூரெனினுமாம்; இது, தென்பாண்டி நாட்டிலுள்ளது: ஆழ்வார்திருநகரியென வழங்கும். நாதமுனி - தலைவராகிய முனிவர்: யோகீசுவரர். முநி - மநநசீலன்; ஸ்ரீரங்கநாதனுடைய 'நாதன்' என்ற திருநாமத்தை வகித்து நம்மாழ்வாரால் தமக்கு உபதேசிக்கப்பட்ட அர்த்தங்களை அடைவே எப்பொழுதும் மநநம்பண்ணிக்கொண்டு எழுந்தருளியிருக்கிற அந்தணராதலால், நாதமுனி யென்று பெயர் வழங்கலாயிற்று என்பதையும் உணர்க. உய்யக்கொண்டார் - மணக்கால்நம்பி முதலிய பலரையும் உய்யுமாறு ஆட் கொண்டவர்: அன்றி, நாதமுனிகளால் உய்வுபெற ஆட்கொள்ளப்பட்டவ ரெனினுமாம். மணக்காலென்கிற ஊரில் திருவவதரித்தவராதலால் மணக்கால்நம்பி யென்று திருநாமம்பெற்ற ஆசாரியரது இயற்பெயர், ராமர் என்பது: கடவுளின் பெயரை அடியார்கட்குஇடுதல், மரபு. நாதமுனிகளின் பேரனாரான யமுனைத்துறைவர் இளமையிலே ராஜபுரோகிதனும் மகாவித்துவானுமான ஆக்கியாழ்வானோடு வாதஞ்செய்யத் தொடங்கியபோது இராசபத்தினியானவள் 'இவர் தோற்கமாட்டார்' என்று அரசனுக்கு உறுதிகூற, அரசன் அதனை மறுத்து, 'நமது ஆக்கியாழ்வான் தோற்றால் இவர்க்குப் பாதிஇராச்சியம்தருவேன்' என்று பிரதிஜ்ஞைசெய்ய, உடனே நடந்த பலவகை வாதங்களிலும் யமுனைத்துறைவரே வெற்றியடைய, அதுகண்டு தனதுபிரதிஜ்ஞை நிறைவேறினமைபற்றி மகிழ்ச்சிகொண்ட இராசமகிஷி 'என்னையாளவந்தவரோ!' என்றுகொண்டாடியதனால், இவர்க்கு 'ஆளவந்தார்' என்று திருநாமமாயிற்று. பெரியநம்பியின் மறுபெயரான பராங்குசதாசரென்பது பராங்குசரென்னும் ஒருதிருநாமத்தையுடைய நம்மாழ்வாரது அடியவரென்று பொருள்படும். இவர் ஸ்ரீபாஷ்யகாரர்க்குப் பஞ்சஸம்ஸ்காரங்களையும் மந்த்ரரத்நத்தையும் அருளி அவரை நம்தரிசநப்பிரவர்த்தகராம்படி செய்திட்ட சிறப்புத் தோன்ற, இவர்க்கு 'ஏதமில் வண்மை' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. இங்கு வண்மை, கைம்மாறு கருதாது மந்திரோபதேசஞ் செய்தல்; அதற்கு ஏதமின்மை, நூல்முறைக்கும் சிஷ்டாசாரத்துக்கும் சிறிதும் வழுப்படாமை. எதித்தலைவர் - சந்யாசிசிரேஷ்டர். யதி என்ற வடசொல், எதியென விகாரப்பட்டது; யந்திரம் - எந்திரம், யமன் - எமன், யஜ்ஞம் - எச்சம், யது - எது, யஜுர் - எசுர் என்பன போல. ஆழ்வான் - எம்பெருமானுடைய குணகனங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர். கூரமென்கிற தலத்தில் அவதரித்தவராய், அத்தலத்தில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானுடைய 'ஆழ்வான்' என்ற திருநாமத்தை வகித்தவராதலால், 'கூரத்தாழ்வான்' என்று வழங்குகிற பெயர் இங்கு நாமைகதேசேநாமக்ரஹணத்தால் 'ஆழ்வான்' எனப்பட்டதென்றும் கொள்க. ஸ்ரீபாஷ்யகாரர் கோவிந்தபட்டருடைய வைராக்கியத்தைக் கண்டு அவர்க்குச் சந்யாசாச்சிரமந் தந்தருளித் தமது திருநாமங்களிலொன்றான எம்பெருமானா ரென்ற பெயரை அவர்க்குச்சாத்த, அவர் அப்பெரும் பெயரைத் தாம்வகிக்க விரும்பாதவராய் 'தேவரீர்க்குப் பாதச்சாயையாயிருக்கிற அடியேனுக்குத் தேவரீர்திருநாமச்சாயையே அமையும்' என்று விண்ணப்பஞ்செய்ய, பாஷ்யகாரரும் அப்பெயரையே சிதைத்து எம்பார் என்று |