பெயரிட்டருளினார். பண்டிதர்க்கு வழங்குகின்ற 'பட்டர்' என்ற பெயர் கூரத்தாழ்வானுடைய குமாரர்க்குச் சிறப்பாகவழங்கும். எம்பெருமானாரால் நாமகரணஞ்செய்தருளப்பெற்றவர், இவர். பற்று - பற்றுக்கோடு, ரக்ஷகம். எமக்கு என்ற தன்மைப்பன்மை, ஸ்ரீவைஷ்ணவரனைவரையும் உளப்படுத்தியது; கவிகட்குஉரிய இயற்கைப்பன்மையுமாம். (3) (எழுபத்துநான்கு சிங்காசநாதிபதிகள்.) 4. | திருமாலையாண்டான்றிருக்கோட்டிநம்பிதிருவரங்கப் | | பெருமாளரையர்திருமலைநம்பிபெரியநம்பி | | யருமால்கழல்சேரெதிராசர்தாளிற்சிங்காதனராய் | | வருமாரியர்களெழுபத்துநால்வரென்வான்றுணையே. | (இ - ள்.) திருமாலையாண்டன் -, திருக்கோட்டிநம்பி -, திருவரங்கப் பெருமாளரையர் -, திருமலைநம்பி -, பெரியநம்பி -, (என்பவர்களுடைய), அருமால் கழல் - அருமையான சிறந்த திருவடிகளை, சேர் - அடைந்த, எதிராசர் - எம்பெருமானாருடைய, தாளின் - திருவடிசம்பந்தத்தால், சிங்காதனர் ஆய் வரும் - ஸிம்ஹாஸநாதிபதிகளாய் விளங்குகின்ற, ஆரியர்கள் எழுபத்துநால்வர் - ஆசாரியர்கள் எழுபத்துநான்குபேரும், என் வான் துணை - எனக்குச் சிறந்த துணையாவர்; (எ - று.) முதலிரண்டடியிற் குறித்த ஐவரும், ஸ்ரீபாஷ்யகாரர்க்குப் பஞ்சாசாரிய ரெனப்படுவர். அவர்களில், திருமாலையாண்டான், இவர்க்குத் திவ்வியப்பிரபந்த வியாக்கியாநம் அருளிச்செய்து 'சடகோபன்பொன்னடி' என்கிற திருநாமத்தைச் சாத்தியருளினார்; திருக்கோட்டியூர்நம்பி, இவர்க்குத் திருமந்திரார்த்தத்தையும் சரமச்லோகார்த்தத்தையும் அருளிச்செய்து 'எம்பெருமானார்' என்கிற திருநாமத்தைச் சாத்தியருளினார்; திருவரங்கப்பெருமாளரையர், இவர்க்குப் பெரிய திருமொழிமூலமும் திருவாய்மொழிமூலமும் கண்ணி நுண்சிறுத்தாம்புவியாக்கியாநமும் த்வயார்த்தமும் அருளிச்செய்து 'லக்ஷ்மணமுனி' என்கிற திருநாமஞ் சாத்தியருளினார்; பெரியதிருமலைநம்பி, இவர்க்கு ஸ்ரீராமாயணவியாக்கியாநம் அருளிச்செய்து 'கோயிலண்ணன்' என்கிற திருநாமஞ் சாத்தியருளினார்; பெரியநம்பி, இவர்க்கு 'ராமாநுஜன்' என்கிற திருநாமமும் திருமந்திரமும் த்வயசரமச்லோகங்களும் உள்படப் பஞ்சஸம்ஸ்காரம் செய்தருளி, முதலாயிரம் இயற்பா என்ற ஈராயிரமூலத்தை அருளிச்செய்தார். எழுபத்துநால்வர் - பட்டர், சீராமப்பிள்ளை, கந்தாடையாண்டான், அநந்தாழ்வான், எம்பார், கிடாம்பியாச்சான் முதலியோர். இவர்கள் பெயர்வரிசையை, குருபரம்பராப்பிரபாவம் முதலிய நூல்களிற் காணலாம். இவர்கள், ஸ்ரீபாஷ்யகாரரிடமிருந்து உபயவேதாந்தார்த்தங்களையும் உபதேசம்பெற்று அவராலேயே ஆசாரியபுருஷர்களாக நியமிக்கப்பட்டவர்கள். சிங்காதனராய்வரும் ஆரியர்கள் - ஆசாரியபீடத்தில் வீற்றிருந்து அதற்கு உரிய அதிகாரத்தை நிர்வகிப்பவர்கள். 'எதிராசர்தாளிற் சிங்காதனராய் வருமாரியர்கள்' என்ற சொற்போக்கினால், பாஷ்யகாரராகிய ஒருசக்ரவர்த்தி பின் கீழடங்கி ஆட்சிசெய்யும் சிற்றரசராவர் இவரென்பது தோன்றும். |