"மங்காதகீர்த்தியெதிராசர்பாதமணிமுடியாத், தங்காதலாற்றந்தலைச் சூடிக்கொண்டுதடங்கடல்சூ, ழங்காசினியைப்புரக்குமெட்டெட்டுடனையிர ண்டாஞ்,சிங்காதனக் குருராயர்தம்பேர்சொலிற் றீதறுமே" என்று திருவேங்கடக்கலம்பகத்துக் காப்புச்செய்யுள் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. (4) (நம்மாழ்வார்) 5. | மாறன்பராங்கதிதந்தடியேனை மருட்பிறவி | | மாறன்பரானகுழாத்துள்வைப்பான்றொல்லைவல்வினைக்கோர் | | மாறன்பராமுகஞ்செய்யாமலென்கண்மலர்க்கண்வைத்த | | மாறன்பராங்குசன்வாழ்கவென்னெஞ்சினும்வாக்கினுமே. | (இ - ள்.) மால்தன் - திருமாலினுடைய, பராங்கதி - பரமபதத்தை, தந்து - அளித்து, அடியேனை - தொண்டனான என்னை, மருள் பிறவி மாறு அன்பர் ஆன குழாத்துள் வைப்பான் - மயக்கமுள்ள பிறப்பு நீங்கப்பெறுகிற அடியார்களான முக்தர்களுடைய கூட்டத்தில் (ஒருவனாகச்) சேர்த்தருள விருப்பவனும், தொல்லை வல்வினைக்கு ஓர் மாறன் - அநாதியாய்வருகிற வலிய கருமங்கட்கு ஒரு சத்துருவா யுள்ளவனும், பராமுகம் செய்யாமல் என்கண் மலர் கண் வைத்த மாறன் பராங்குசன் - உபேக்ஷைசெய்யாமல் என்மீது தாமரைமலர்போன்ற (தனது) திருக்கண்பார்வையை வைத்தருளியவனும் மாறனென்றும் பராங்குசனென்றும் பெயர்களையுடையவனுமான ஸ்ரீசடகோபன், என் நெஞ்சினும் வாக்கினும் வாழ்க - எனது மனத்திலும் மொழியிலும் வாழக்கடவன்; (எ - று.) இப்பிரபந்தம் இனிது முடிதற்பொருட்டு ஆழ்வார் எனது மனத்திலும் வாக்கிலும் இருந்து நல்லகருத்துக்களையும் வளமான சொற்களையும் தோற்றுவிப்பாராக வென வேண்டியவாறாம். ஆழ்வாரை மனத்திற்கொண்டு தியானித்துச் சொல்லிற்கொண்டு துதிப்பே னென்ற கருத்தும் அமையும். மால்தன் பராங்கதி - விஷ்ணுலோகமாகிய ஸ்ரீவைகுண்டம். மருள் - விபரீதஞானம். மருட் பிறவி - அவித்தையினாலாகிற பிறப்பு எனினுமாம்; "பொருளல்லவற்றைப் பொருளென் றுணரும், மருளானா மாணாப் பிறப்பு" என்றார் திருக்குறளிலும். கருமத்தை முற்றும் ஒழித்து மீளாவுலகமாகிய முக்தி பெற்றவர் மீண்டும்பிறத்தல் இல்லையாதலால், 'பிறவிமாறுஅன்பர்' எனப்பட்டனர். வல்வினைக்கு மாறன் - அழித்தற்கு அரியகருமங்களை எளிதில் அழிப்பவன். பராமுகம் = பராங்முகம், முகங்கொடாமை. என்கண், கண் - ஏழனுருபு. மலர்க்கண்வைத்தல் - அருள்நோக்கம். மிகக் களித்துக் கொழுத்துச் செருக்கித் திரிந்து எதிர்த்து வாதப்போர்க்கு வரும் பிறமதத்தவராகிய மதயானைகளைத் தமது பிரபந்தங்களிற் கூறிய தத்வார்த்தங்களினால் அடக்கிக் கீழ்ப்படுத்தித் தம்வசத்தில் வைத்து நடத்துந் திறமுடையராய் அவற்றிற்கு மாவெட்டி யென்னுங் கருவிபோ லிருத்தலால், நம்ஆழ்வார்க்குப் பராங்குசனென்று திருநாமமாயிற் றென்க: பர அங்குசன் என்று பிரிக்க: பரர் - அயலார்; அங்குசம் - மாவெட்டி, தோட்டி, தந்து வைப்பானென முடியும். (5) |