திருவரங்கத்தந்தாதி. நூல் 1. | திருவரங்காவுறைமார்பாதிசைமுகன்சேவிப்பக்கந் | | திருவரங்காதரித்தின்னிசைபாடத்திருக்கண்வளர் | | திருவரங்காவுன்பழவடியேற்கருள்செய்யவெழுந் | | திருவரங்காதலித்தேனுனக்கேதொண்டுசெய்வதற்கே. | (இ - ள்.) திரு - திருமகள், அரங்கு ஆ - தான் வசித்தற்குஉரிய இடமாக (க்கொண்டு), உறை - வசிக்கப்பெற்ற, மார்பா - திருமார்பையுடையவனே! திசைமுகன் சேவிப்ப - பிரமன் தரிசித்து வணங்கவும், கந்திருவர் அங்கு ஆதரித்து இன் இசை பாட - கந்தருவர்கள் அவ்வாறே (தரிசித்துவணங்கிப்) பக்திகொண்டு இனிமையான கீதம்பாடவும், திரு கண் வளர் திரு அரங்கா - திருவரங்கமென்னுந் திருப்பதியில் அழகாகப்பள்ளிகொண்டு யோகநித்திரை செய்தருள்பவனே! உனக்கே தொண்டு செய்வதற்கு வரம் காதலித்தேன் - (யான்) உனக்கே அடிமைசெய்யுமாறு வரம்பெற ஆசைப்பட்டேன்: உன் பழ அடியேற்கு அருள் செய்ய எழுந்திரு - நினது பழமையான அடியவனாகிய எனக்குக் கருணைசெய்தற்கு எழுந்திருப்பாயாக; (எ - று.) 'திரு என்பது - கண்டாரால்விரும்பப்படுந் தன்மைநோக்கம்: என்றது, அழகு; இஃது என்சொல்லியவாறோ வெனின், - யாவனொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக்கண்டவற்கு அப்பொருள்மேற் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு. அதன்மேல் அவற்கு விருப்பஞ்சேறல் அதனிற் சிறந்த உருவும் நலனும் ஒளியும் எவ்வகையானும் பிறிதொன்றற்கு இல்லாமையால்', 'எல்லாராலும் விரும்பப்பட்ட அழகு அவட்கு உண்டாகையாலே திருமகள் என்று பெயராயிற்று' என்பது, திருக்கோவையார் பேராசிரியருரை. "அகலகில்லே னிறையு மென் றலர்மேன்மங்கை யுறை மார்பா" என்றாற்போல, 'திருவரங்காவுறைமார்பா' என்றார். அரங்கு - ரங்க மென்ற வடசொல்லின் விகாரம்: இதற்கு - கூத்தாடுமிடமென்றபொருளும்உண்டு; ஆ - ஆக என்பதன் விகாரம். இனி, அரங்கா - அழுந்தி யெனினுமாம்; சிறிதுபொழுதும் விட்டுநீங்காமல் நிலையாக என்றபடி: ஒருசொல்; செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு இறந்தகாலவினையெச்சம்: அரங்கு - வினைப்பகுதி, ஆ என்ற விகுதியே இறந்தகாலங்காட்டும். உறை மார்பு - வினைத்தொகை, இடப்பெயர் கொண்டது. "எம்மாண்பிலயன் நான்குநாவினாலுமெடுத்தேத்தி யீரிரண்டுமுகமுங் கொண்டு, எம்மாடுமெழிற்கண்களெட்டினோடுந் தொழுதேத்தி யினிதிறைஞ்சநின்ற செம்பொன், அம்மான்றன் மலர்க்கமலக்கொப்பூழ்தோன்ற வணி யரங்கத்தரவணையிற் பள்ளிகொள்ளு, மம்மான்", "ஏதமில் தண்ணுமை யெக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோ டிசை திசை கெழுமிக், கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவரவர் கங்குலுமெல்லாம், மாதவர் வானவர் சாரண ரியக்கர் சித்தரு மயங்கினர் திருவடிதொழுவான், ஆதலிலவர்க்கு நாளோலக்கமருள அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே" என்ற |