பக்கம் எண் :

256திருவரங்கத்துமாலை

(இ - ள்.) தெள்ளா வரும் பொன்னி சூழ் அரங்கா - தெளிவில்லாமல் (மிகக்கலங்கி) வருகின்ற காவேரிநதி சூழ்ந்த திருவரங்கத்து நாதனே! விண்ணில் - ஆகாசத்தில், ஓர் உவணம் புள் - ஒப்பற்ற பெரியதிருவடி, வேதம் பொருள் ஆகி - வேதார்த்த ஸ்வரூபியாய், தன் பொன் கழுத்தில் - தனது ஸ்வர்ணமயமான கழுத்தின்மேல், உன்னை -, கொள்ளா - எழுந்தருளப்பண்ணிக்கொண்டு, வருகின்ற - விரைந்தோடி வருகின்ற, கோலம் - அழகை, உள்ளே - என்மனத்திலே, கண்டுகொண்டபின் - சேவித்தபின்பு, - எனது உள்ளம் - என்னுடைய மனம், ஒரு தேவரையும் - வேறொரு தேவரையும், உள்ளாது - (ஒருதெய்வமாக) மதியாது; யான் என் செய்வேன் -? (எ - று.)

பரதேவதையாகிய உன்னைக் கண்கூடாகக்கண்டு களித்தபின்பு அபர தேவதைகளும் பொற்பில்லாதவரும் கீர்த்தியில்லாதவரும் ஆற்றலில்லாத வருமான மற்றை க்ஷுத்ர தேவதைகளை நான் ஒருபொருளாக மதியேன் என்பதாம். இதனால், கவி, தமது அநந்யசரணத்வத்தை (வேறொருகடவுளுக்கு ஆட்படாமையை) வெளியிட்டார். தெள்ளாவரும் பொன்னிசூ ழரங்கன் - "தெளிவிலாக் கலங்கல்நீர்சூழ் திருவரங்கத்துள் ளோங்கு, மொளியுளார்" என்றார் பெரியாரும். இனி, தெள்ளிவருகின்ற பொன்னி யென்றுமாம். உவணப்புள் - கருடப்பறவை. ஆகி - அசை.

(105)

106.முன்பாலிலைமகவாகியபோதிந்தமூதண்டங்க
ளுன்பாலொடுங்கியிருந்ததுபோலு முததிமங்கைக்
கன்பாவரங்கங்தென்னாரமுதே யணுவாயிருந்து
மென்பாலகண்டமுமாகியநீவந்திருக்கின்றதே.

(இ - ள்.) உததி மங்கைக்கு அன்பா - திருப்பாற்கடலில் தோன்றிய திருமகளுக்குக் கணவனே! அரங்கத்து - திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற, என் ஆர் அமுதே - எனது கிடைத்தற்கரிய தேவாமிருதமே! அணு ஆய் இருந்தும் - (எனது மனம்) மிகச்சிறுமையாயிருந்தும், என்பால் - அந்த என்மனத்தினிடத்து, அகண்டமும் ஆகிய - எல்லாமாகிய, நீ -, வந்து இருக்கின்றது - வந்து எழுந்தருளியிருக்கின்ற தன்மை, - (நீ), முன்பு - முன்னே, ஆல் இலை - ஆலிலையில், மகவு ஆகிய போது - சிறுகுழந்தையாய்க் கிடந்தருளினபோது, இந்த முது அண்டங்கள் - இந்தப் பழைய அண்டங்க ளெல்லாம், உன்பால் - உன்னிடத்து, ஒடுங்கி இருந்தது - அடங்கியிருந்த தன்மையை, போலும் - ஒக்கும்; (எ - று.)

ஸர்வவியாபியாய் மிகப்பேருருவமுடைய நீ எனதுமிகச்சிறுமனத்தில் எழுந்தருளியிருக்குந் தன்மை, பிரளயகாலத்தில் சிறுகுழந்தைவடிவான உனது வயிற்றினுள் எல்லாப்பிரபஞ்சமும் ஒடுங்கியிருப்பது போலும் என்பதாம். ஆதாரமாகிய ஆலிலை அணுக்களை விட, ஆதேயமாகிய பரம்பொருளுக்குப் பருமைதோன்றக் கூறியது, மிகுதியணியின்பாற்படும். மக - இளமை. உததி - கடல்; நீர் நிறைந்து தங்குமிடம்: இங்கு, பாற்கடல். உததிமங்கை - அதனிடத்துத் தோன்றிய மங்கையெனத் திருமகள்; உததியாற்சூழ்ந்த மங்கையென நிலமகளாகவுமாம்.

(106)