பக்கம் எண் :

திருவரங்கத்துமாலை257

(பகவானைப் பிரார்த்தித்தல்.)

107.வலைப்பால்விடம்பிணைக்கண்ணியர்போகத்தின்மாலுறுமென்
றலைப்பாற்கழலருடாரரங்கா பலதாயர்தந்த
முலைப்பாற்கடலுன்றிருக்கழலாணிவெண்முத்தெறியு
மலைப்பாற்கடலினளவாமெனின்மற்றதுவுமன்றே.

(இ - ள்.) தார் - திருத்துழாய்மலையையுடைய, அரங்கா -!- பல தாயர் தந்த - (இதுவரையில் பல பிறப்புக்களிலும்) பல தாய்மார்கள் கொடுத்த, முலை பால் கடல் - முலைப்பாலினது வெள்ளம், - உன் திரு கழல் - உனது திருவடிகளில், ஆணி வெள் முத்து - மேன்மையான வெள்ளிய முத்துக்களை, எறியும் - வீசுகின்ற, அலை - அலைகளையுடைய, பால் கடலின் - திருப்பாற்கடலினது, அளவு ஆம் எனின் - அளவினதாகு மென்றால், அதுவும் அன்றே - அதுவும் ஒப்பாகமாட்டாது; (அலைப்பாற்கடலினும் முலைப்பாற்கடல் மிகவும் பெரியது என்றபடி); (ஆதலால், இனி அப்பால்குடிக்குமாறு பிறவாதபடி) - வலை - வலையும், பால் - அமிருதமும், விடம் - விஷமும், பிணை - பெண்மான் கண்ணும், (ஆகிய இவைபோன்ற), கண்ணியர் - கண்களையுடைய மகளிரது, போகத்தில் - சிற்றின்பத்தில், மால் உறும் - பெருமயக்கமடைகின்ற, என் - எனது, தலைப்பால் - தலையின்மீது, கழல் - (உனது) திருவடிகளை, அருள் - வைத்தருள்வாய்; (எ - று.)

எம்பெருமானைச் சரணமாகப்பற்றும்போது ஜீவாத்மாக்கள் தம்முடைய குற்றங்களையே காணிக்கைப்பொருளாகக்கொண்டு சரணமடையும் மரபின்படியே ஐயங்காரும் மூன்றடிகளினால் தமது குற்றத்தைக் கூறிச் சரண்புகுந்து, இரண்டாமடியால் தம்மை யாட்கொண்டு எம்பெருமான் தனது திருவடிகளைத் தமதுமுடியின்மீது பொறித்தருளுமாறு வேண்டுகின்றனரென்க. "முன்னம்பிறந்த பிறப்போ முடிவில்லை" என்றபடி பலபிறப்பெடுத்து உழன்று வருந்திய என்னை இனிப் பிறப்பற்று முத்தியடையுமாறு அருள்செய்ய வேண்டுமென்று வேண்டியபடி. "உன்திருக்கழ லாணிவெண்முத்தெறியும்" என்றது, பாற்கடலானது தன்னிடத்திற்சயனித்துள்ள உனது திருவடிகளில் சிறந்தமுத்துக்களை அலைகளாற்கொழிக்கு மென்றவாறு. கண்ட ஆடவர்களைக் கவர்தலால் வலையும், இன்பஞ் செய்தலாற் பாலும், துன்பஞ் செய்தலால் விடமும், மருட்சி பொருந்திய பார்வையாற் பிணையும் - மகளிர்கண் கட்கு உவமை கூறப்படும்; இனி, சுற்றிடம் விளர்த்திருத்தலாற் பாலும், நடுவிடம் கறுத்திருத்தலால் விடமும் உவமையாகவுமாம். பாலும், விடமுஞ் சேர்த்துச் சொல்லப்படுதலால், அவை பாற்கடலிற் பிறந்த தேவாமிருதமும், ஆலாகலவிடமுமாம். பிணை - ஆகுபெயர்.

(107)

(இதுவும் அது.)

108.தொடைமாறனுந்தமிழ்சொன்மாறனுந்தொழத்துத்தி வெள்ளைக்,
குடைமாசுணத்திற்றுயிலரங்கேச குலவுவைவேற்,
படைமாறுகொண்டமைக்கண்ணியர்பால்வைத்தபாசநெஞ்சை,
மடைமாறியுன்றன்றிருவடிக்கேவரவைத்தருளே.