(இ - ள்.) தொடை மாறனும் - (வேப்பம்பூ) மாலையையுடைய பாண்டியனும், தமிழ் சொல் மாறனும் - தமிழினாற் சொல்லுகின்ற (பாமாலையையுடைய) நம்மாழ்வாரும், தொழ - தொழும்படி, துத்தி - படப்புள்ளிகளையுடைய, வெள்ளை - வெண்மையாகிய, குடை - குடைபோலக் கவிந்துகொண்டிருக்கின்ற, மாசுணத்தில் - திருவனந்தாழ்வான்மேல், துயில் - பள்ளிகொண்டருளுகின்ற, அரங்கேச -!- குலவு - விளங்குகின்ற, வை - கூர்மையாகிய, வேல் படை - வேலாயுதத்தோடு, மாறு கொண்ட - பகைமைகொண்ட (ஒத்த), மை கண்ணியர்பால் - மையூட்டிய கண்களையுடைய மகளிரிடத்து, வைத்த -, பாசம் நெஞ்சை - அன்பினையுடைய (எனது) மனத்தை, மடைமாறி - மாற்றி, உன்தன் திருவடிக்கே வர - உனது திருவடிகளுக்கே ஆட்படும்படி, வைத்தருள் - அன்புவைத்தருள்வாயாக; (எ - று.) பாண்டியன் - ஸ்ரீவல்லபதேவ னென்பர். குடைமாசுணம் - சென்றாற் குடையாகும் மாசுண மென்றுமாம். பிறந்தபொழுதே தொடங்கி அழுதல் பாலுண்ணுதல் முதலியன செய்யாமல் உலகநடைக்கு மாறாயிருந்ததனால், நம்மாழ்வார்க்கு 'மாறன்' என்று ஒரு திருநாமம். பகைவர்க்கு மாறாயிருந்து வெல்பவனாதலால், பாண்டியன் 'மாறன்' எனப்படுவன். நெஞ்சு விஷயங்களிற் பாய்ந்துசெல்லுந் தன்மைய தாதலால், அதனைப் பெருக்காகக் கொண்டு, 'மடைமாறி' என்றனர். மடைமாறுதல் - ஓரிடத்திற் பாயும் நீரை மற்றோரிடத்துப் பாய்வதற்காக நீர்மடையை மாற்றுதல். (108) (அநந்யகதித்வமும், பிரார்த்தனையும்.) | 109. | கரணந்தவிர்ந்துவிழிபோய்ச்சுழன்றுகலங்குமென்றன் | | மரணந்தனில்வந்துதவுகண்டாய் கொற்றவாளியொன்றா | | லரணங்கடந்தவன்காணாவரங்க வென்னாருயிர்க்குன் | | சரணஞ்சரணமொழிந்தில்லைவேறித்தராதலத்தே. | (இ - ள்.) கொற்றம் வாளி ஒன்றால் - வெற்றியையுடைய ஒரு பாணத்தினால், அரணம் கடந்தவன் - முப்புரங்களையும் வென்ற பரமசிவனும், காணா - கண்டறியாத, அரங்க -!- என் ஆர் உயிர்க்கு - எனது அருமையான உயிருக்கு, உன் சரணம் ஒழிந்து - உனதுதிருவடி யன்றிக்கே, வேறு சரணம் - வேறு அடைக்கலம், இ தராதலத்து - இவ்வுலகத்தில், இல்லை -; (ஆதலால், நீ), - கரணம் தவிர்ந்து - கரணங்கள் நிலைகுலைந்து, விழி போய் - கண்பார்வை மழுங்கி, சுழன்று - மனஞ் சுழன்று, கலங்கும் - கலங்குகின்ற, என்தன் - எனது, மரணம்தனில் - மரணகாலத்தில், வந்து - எழுந்தருளிவந்து, உதவு - காத்தருள்வாய்; (எ - று.) நான் அந்திமகாலத்தில் யமபாதையினாற் செயலற்று ஒடுங்குஞ் சமயத்தில் நீ அஞ்சேலென்று அபயமளித்துக் காக்கவேண்டு மென்பதாம்; அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் என்றபடி. கரணம் - ஐம்பொறிகளென்றாயினும், திரிகரணங்க ளென்றாயினும், அந்தக்கரணமென்றாயினுங் கொள்க. அரணம் - மதில். வாளி - விஷ்ணுஸ்வரூபமாகிய அம்பு. "துப்புடையாரை யடைவதெல்லாஞ் சோர்விடத்துத் துணையாவரென்றே, |