(இ - ள்.) (இந்நூலானது), - சொல் நோக்கும் - சொல்லழகும், பொருள் நோக்கும் - பொருளழகும், தொடை நோக்கும் - தொடையழகும் நடை நோக்கும் - நடையழகும், துறையின் நோக்கோடு - துறையினழகும் (ஆகிய இவைமுதலிய), எ நோக்கும் - எல்லாவழகையும், காண - காணுமாறு, இலக்கியம் ஆவது அன்றி - இலக்கியமாயிருத்தல்மாத்திரை யேயன்றி, - இதில் - இந்நூலில், ஈடுபட்டோர் - அன்புடன் மிகப்பயின்றவர், நல் நோக்கும் - நல்ல ஒழுக்கத்தையும், (நல்) புத்தியும் - நல்ல அறிவையும், (நல்) பத்தியும் - நல்ல பக்தியையும், பெறுவர் - அடைவர்; (அவர்களுக்கு), முத்தி - பரம பதம், உண்டாம் - உண்டாகும்; (ஆகையால் ). - பல் நோக்கு மணவாளர் - பலவகை ஞானத்தையுடைய அழகியமணவாளதாசர், பகர் - திருவாய்மலர்ந்தருளிய, அரங்கக் கலம்பகத்தை - திருவரங்கக்கலம்பகத்தின் சிறப்பை, நான் என் சொல்கேன் - யான் என்னவென்று எடுத்துச் சொல்லுவேன்! பாரீர் பாரீர் - ஆராய்ந்து நோக்குங்கள் நோக்குங்கள்; (எ - று.) சொன்னோக்கு - மடக்கு முதலிய சொல்லணிகளால் வரும் அழகு. பொருணோக்கு - உவமை முதலிய பொருளணிகளால் வரும் அழகு, தொடை நோக்கு - மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்கிற ஐந்திலும் அடிமோனை முதலாக ஓரொன்றிலே எவ்வெட்டுத்தொடையாக நாற்பதும், அந்தாதித்தொடை இரட்டைத்தொடை செந்தொடை என்கிற மூன்றும் ஆக நாற்பத்துமூன்று தொடைகளால் வரும்அழகு. நடைநோக்கு - வைதருப்பம், கௌடம் முதலாகக் கூறப்படுகின்ற நடைகளால் வரும் அழகு. துறை நோக்கு - காட்சி, ஐயம், தெளிதல் முதலிய கிளவித்துறைகளால் வரும் அழகு. "எந்நோக்கும்" என்றதனால் விளங்கவைத்தல் நவின்றோர்க்கினிமை நன்மொழி புணர்த்தல் ஓசையழகு ஆழ்ந்தபொருளுடைமை முதலானவையுங் கொள்க. "நல்நோக்கு" என்பதில் உள்ள நன்மையை "புத்தி", "பத்தி" என்பவற்றோடுங் கூட்டுக. "உரைத்த தமிழ்வரைந்த ஏட்டைப், பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும் பரிமளிக்கும் பரிந்த ஏட்டைத், தொட்டாலும் கைம்மணக்கும் சொன்னாலும் வாய்மணக்கும் துய்ய சேற்றில், நட்டாலும் தமிழ்ப் பயிராய் விளைந்திடுமே பாட்டினது நளினந் தானே" என்று சிறப்பித்துக் கூறுமாறு இந்நூலின்நடை மிகப்பிரசித்தி பெற்றது என்பதாம். "பக்தி", "முத்தி" என்பவை - முறையே "பக்தி", "முக்தி" என்பவற்றின் விகாரங்கள். முத்தி - வீடு: சரீர இந்திரியங்களிலிருந்து ஜீவாத்மா விடுபடுவ தென்று பொருள். "என்சொல்கேன்" என்றது, இவ்வளவென்று ஓரளவின்மையாலே சொல்லத்தெரிந்திலே னென்றபடி. "சொல்கேன்", ககரவொற்று - எதிர்கால இடைநிலை. இலக்கியம் லக்ஷ்ய மென்பதன் திரிபு. "பாரீர் பாரீர்" - உவகையில் வந்த இருமுறையடுக்கு; இனி, பாரீர் - உலகத்தவரே! பாரீர் - (இவ்வாறு பலவகையழகும் நிரம்பியிருத்தலால் கவனித்துப்) பாருங்கள் எனினுமாம். இது - முதல் நான்குங் காய்ச்சீர்களும், மற்றை யிரண்டும் மாச்சீர்களு மாகிய அறுசீராசிரியவிருத்தம். (2) |