ஸ்ரீ கோயிற்கலம்பகம் என்னும் திருவரங்கக்கலம்பகம். "திரு" என்னும் பலபொருளொருசொல் - வடமொழியில் "ஸ்ரீ" என் பதுபோல, தமிழிலே தேவர்கள் அடியார்கள் ஞானநூல்கள் மந்திரங்கள் புண்ணியஸ்தலங்கள் புண்ணியதீர்த்தங்கள் முதலிய மேன்மையையுடைய பலபொருள்கட்கு விசேஷணபதமாகி, மகிமைப்பொருளைக் காட்டி, அவற்றிற்கு முன்னே நிற்கும்; ஸ்ரீமகாவிஷ்ணு ஸ்ரீபக்திசாரர் ஸ்ரீராமாயணம் ஸ்ரீஅஷ்டாக்ஷரம் ஸ்ரீரங்கம் ஸ்ரீகைரவிணி ஸ்ரீபாதம் எனவும், திருமால் திருமழிசைப்பிரான் திருவாய்மொழி திருவெட்டெழுத்து திருவரங்கம் திருவல்லிக்கேணி திருவடி எனவும் வழங்குவது காண்க. இது, இங்கு அரங்கத்திற்கு அடைமொழி; கலம்பகத்திற்கு அடைமொழியாகவுமாம். திருவரங்கம் என்பது - திருமாலின் திவ்வியதேசங்கள் நூற்றெட்டனுள் தலைமைபூண்டதும், சோழநாட்டுத்திருப்பதிகள் நாற்பதில் முக்கியமானதும், "கோயில் திருமலை பெருமாள்கோயில்" என்று பிரதானமாக எடுத்துக்கூறப்படுகின்ற மூன்று தலங்களுள் முதலதும், "கோயில்" என்றும் "பெரியகோயில்" என்றும் மறுபெயருடையதும், "பூலோக வைகுண்டம்" எனப்படுகின்ற மகிமையுடையதும், "போகமண்டபம்" எனப்படுவதுமாகிய தலம். பிரணவாகாரமான ஸ்ரீரங்கவிமானத்திலே ஆதிசேஷசயனத்திற் பள்ளி கொண்டருளுந் திருமால், ஆதியிற் சத்தியலோகத்திற் பிரமதேவனது திரு வாராதனத்திருவுருவமாயிருந்தான். பின்பு, சூரியகுலத்து மநுகுமாரனான இக்ஷ்வாகுமகாராசன் பிரமனைக்குறித்துப் பலகாலம் அரும்பெருந்தவம்புரிந்து அத்தேவனருளால் அப்பெருமானைத் தான் பெற்றுத் திருவயோத்திக்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டுவந்து பிரதிஷ்டித்துத் திருவாராதனஞ் செய்துவந்தனன்; அந்த ஸ்ரீரங்கநாதனே, இக்ஷ்வாகு முதல் இராமபிரான் வரையிலுள்ள இரவிகுலமன்னவ ரெல்லார்க்குங் குலதெய்வமாகி விளங்கினான்; இங்ஙனம், மனிதவுருவங்கொண்ட பெருமாளாகிய இராமபிரானால் வணங்கப்பட்டமைபற்றி, அரங்கநாதனுக்கு "பெரியபெருமாள்" என்று திருநாமம்: இராமபிரான், வனவாசஞ்சென்று விபீஷணனுக்கு அபயமளித்துக் கடல்கடந்து இலங்கைசேர்ந்து இராவணாதிராக்ஷஸசங்காரஞ்செய்து திருவயோத்திக்கு மீண்டு பட்டாபிஷேகஞ்செய்துகொண்டபின்பு, சுக்கிரீவன் முதலிய அனைவர்க்கும் விடைகொடுத்து அவரவரை ஊர்க்கு அனுப்பும்பொழுது, தனது திருவாராதனமூர்த்தியும் குலதனமுமான திருவரங்கநாதனைத் தனக்குமிகவும் அந்தரங்கனான விபீஷணாழ்வானிடங் கொடுத்து ஆராதித்துவரும்படி நியமித்து அனுப்பினான்;* அங்ஙனமே அவ்வரக்கர்பெரு
* இராமபிரான், திருவவதாரத்தைமுடித்துக்கொண்டு தன்னடிச்சோதிக்கு எழுந்தருளும்போது, வந்து தன்னை வணங்கித் தனது பிரிவை யாற்ற மாட்டாதுநின்ற விபீஷணனுக்கு இக்ஷ்வாகுகுலதெய்வமும் தனது திருவாராதனமூர்த்தியுமான திருவரங்கநாதனைத் தந்தருளினனென வரலாறு கூறுதலு முண்டு. |