பக்கம் எண் :

266திருவரங்கக்கலம்பகம்

மான் அவ்வமரர்பெருமானை அவ்விமானத்துடனே எழுந்தருளப்பண்ணிக் கொண்டு இலங்கைநோக்கிச் செல்லும்பொழுது, இடைவழியில் உபய காவேரி மத்தியிலே பெருமான் புடைபெயராது விமானத்துடனே நிலை நின்றருளினான்: அவ்வாறு திருமால் திருவுள்ளமுவந்து தங்கிய இடமே ஸ்ரீரங்க மெனப்படுவது.

(ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் சூரியமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்தினும் இனிய தென்று திருமால்) திரு வுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிட மானதுபற்றி, "ரங்கம்" என்று அவ் விமானத்திற்குப் பெயர்; திருமால் இங்கு ரதியை (ஆசைப்பெருக்கத்தை) அடைகின்றன னென்க. ரங்கம் என்னும் வடமொழி, அகரம் மொழிமுத லாகிமுன்வரப்பெற்று "அரங்கம்" என நின்றது. இங்கு "அரங்கம்" என்பது - விமானத்தின்பெயர், திருப்பதிக்கு ஆனதோர் ஆகுபெயர் - (தானியாகுபெ யர்). இனி, திருமகளார் திருநிருத்தஞ் செய்யு மிடமாயிருத்தலாலும், ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருவுக்கு (மேன்மைக்கு)க் கூத்துப்பயிலிடமா யிருத்தலாலும், ஆற்றிடைக்குறை (நதியினிடையேயுயர்ந்த திடர்) யாதலாலும், திருவரங்கமென்னும் பெயர் வந்த தெனினுமாம்.

திரு என்பதற்கு - மேன்மையான என்று பொருள்கொண்டால் திருவரங்கம் என்ற தொடர் - பண்புத்தொகையும், மேன்மையையுடைய என்று பொருள்கொண்டால் இரண்டாம்வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையுமாம். அரங்கக்கலம்பக மென்ற தொடர் - அரங்கத்தினது சம்பந்தமான கலம்பக மென்று விரித்து அரங்கத்தின் விஷயமான பிரபந்தமென்று பொருள்கொண்டு ஆறாம் வேற்றுமைத்தொகையாகவும், அரங்கத்தைப்பற்றிய கலம்பகமென்றுவிரித்துப் பொருள் கொண்டு இரண்டாம்வேற்றுமையுருபும்பொருளுந்தொக்கதொகையாகவும் உரைக்கத்தக்கது; அரங்கத்தின்மேற் பாடிய கலம்பக மென்று விரித்துப் பொருள்கொண்டு ஏழனுருபும்பயனுந்தொக்கதொகை யென்பாரும் உளர். திருவரங்கம் என்ற தொடரில், வகரவொற்று - உடம்படுமெய்.

கலம்பகமாவது - ஒருபோகும் வெண்பாவும் கட்டளைக்கலித்துறையும் முதற்கவியுறுப்பாக முதலிற்கூறி, புயவகுப்பு மதங்கு அம்மானை காலம் சம்பிரதம் கார் தவம் குறம் மறம் பாண் களி சித்து இரங்கல் கைக்கிளை தூது வண்டு தழை ஊசல் என்னும் பதினெட்டு உறுப்புக்களும் இயையுமாறு, மருட்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா ஆசிரியவிருத்தம் கலிவிருத்தம் கலித்தாழிசை கலிநிலைத்துறை வஞ்சிவிருத்தம் வஞ்சித்துறை ஆசிரியத் துறை வெண்டுறை முதலியவற்றால், இடையிடையே வெண்பாவும் கலித் துறையும் விரவிவர, மடக்குடைச்செய்யுளும் வண்ணம் சந்தம் முதலியனவும் பொருந்த, அந்தாதித்தொடையால் முற்றுற, இறுதியும் முதலும் மண்டலி த்துப்பாடுங்கால் தேவர்க்கு நூறும் அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்தும் அரசர்க்குத் தொண்ணூறும் அமைச்சர்க்கு எழுபதும் வணிகர்க்கு ஐம்பதும் வேளாளர்க்கு முப்பதுமாகப் பாடுவதொரு பிரபந்தம்; இக்கலம்பகவிலக்க ணத்தைப் பன்னிருபாட்டியல், வச்சணந்திமாலை, இலக்கணவிளக்கம் முத லியவற்றிற் காண்க.