பக்கம் எண் :

திருவரங்கக்கலம்பகம்267

"களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த, அலங்கலந் தொடையல் கொண் டடியிணை பணிவா னமரர்கள் புகுந்தன ராதலி லம்மா" என்னும் பெரியார் பாசுரத்தில் பலவகை மலர்களைக்கொண்டு தொடுக்கப்பட்டுள்ள மாலை, "கலம்பகம்புனைந்ததொடையல்" எனக் கூறப்பட்டுள்ளதனால், அப் பூமாலைபோலப் பலவகைப்பாக்களைக்கொண்டு அமைக்கப்பட்ட பாமாலை யைக் கலம்பக மெனப் பெரியோர் பெயரிட்டுவழங்கின ரென்பர்; இதற்கு இவ்வாறு பொருள்கொள்ளும்போது, இது - கதம்ப மென்னும் வடமொழியின் திரிபுபோலும்: இனி, கலப்பு அகம் எனப் பிரித்து, மெலித்தல்விகாரம் பெற்றதாக்கி, பலவுறுப்புக்களுங்கலத்தலைத் தன்னிடத்தேயுடைய தென அன்மொழித்தொகைக் காரணக்குறியாகவும்கொள்ளலாம்; இனி, ஒருசாரார் பன்னிரண்டுமரக்காலென்னும் பொருளுள்ள "கலம்" என்னுஞ் சொல்லும் கடவுளது ஆறுகுணங்களைக் குறிக்கும் "பகம்" என்னுஞ் சொல்லும் குறிப்பாய்ப் பன்னிரண்டு ஆறு என்னுந் தொகையை மாத்திரம் உணர்த்தி உம்மைத்தொகையாகப் புணர்ந்து பதினெட்டு உறுப்புக்களையுடைய பிரபந்தத் துக்கு ஏதுப்பெயராயிற் றென்றும் உரைப்பர்.

(அந்தாதி - அந்தத்தை ஆதியாகவுடையது; அந்தாதியாவது - முன் நின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் அடுத்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது; இங்ஙனம் பாடும் நூலினது ஈற்றுச்செய்யுளின் அந்தமே முதற்செய்யுளின் ஆதியாக அமையவைத்தல், மண்டலித்த லெனப்படும். சொற்றொடர்நிலைச் செய்யுள் பொருட்டொடர்நிலைச்செய்யுள் என்ற வகையில் இது, சொற் றொடர்நிலை; "செய்யுளந்தாதி சொற்றொடர்நிலையே" என்றார் தண்டிய லங்காரத்தும்.)

"முதனூல் கருத்தன் அளவு மிகுதி, பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும், இடுகுறியானும் நூற்குஎய்தும் பெயரே" என்று கூறப்படுகின்ற நூற்பெயர்வகைகளுள் நுதலியபொருளினாலும் தன்மையி னாலும் பெயர்பெற்றது இந்நூலென அறிக; (நுதலியபொருள் - நூலிற் கூறப்பட்ட விஷயம். தன்மை - நூலின் இயல்பு.) இங்கு "அரங்கம்" என்பது - அத்திருப்பதியில்எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானைக் குறித்தது; இலக்கணை. இனி, "திருவாளன்திருப்பதிமேல், திருவரங்கத்தமிழ்மாலை விட்டு சித்தன்விரித்தன" என்று பெரியாழ்வார் திருமொழியிற் கூறியபடி திருவரங்கத்தின் விஷயமான தமிழ்த்தொடையாதல்பற்றி "திருவரங்கக்கலம்பகம்" எனவும் தகும்; (மேற்காட்டிய அருளிச்செயலின் வியாக்கியானத்தில் "தேஸ்யரான பெருமாளைச் சொன்னதெல்லாம் உபஸர்ஜநகோடியிலேயாய், அத்தேசமேயாய்த்து இத்திருமொழிக்கு விஷயம்" என்றது காண்க.) எனவே, திருவரங்கத்தைப்பற்றிப் பாடியதொரு பிரபந்தமென்பது பொருளும், திருவரங்கத்தி லெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானைக்குறித்துப் பாடியதொரு நூலென்பது கருத்து மாகலாம். "கோயிற்கலம்பகம்" என்பதற்கும் இங்ஙனமே கொள்க.

ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில் "விருந்தே தானும், புது வது கிளந்த யாப்பின் மேற்றே" என்பதனால், "விருந்துதானும், பழங்கதை