பக்கம் எண் :

திருவரங்கக்கலம்பகம்269

காப்பு.

காப்பு - ரக்ஷித்தல்; அது இங்கு ரக்ஷக விஷயமான வணக்கத்துக்கு ஆகுபெயர்: ஆகவே, கவி தமக்கு நேரிடத்தக்க இடையூறுகளை நீக்கித் தமது எண்ணத்தை முடிக்கவல்லதோர் பொருளின் விஷயமாகச் செய்யுந் தோத்திர மென்பது கருத்து.

(ஆழ்வார்கள் பன்னிருவர்.)

வேதந்தொகுத்துத்தமிழ்ப்பாடல்செய்தவிமலன்பொய்கை
பூதன்மயிலையர்கோன்புகழ்ச்சேரன்புத்தூரன்றொண்டர்
பாதந்தருந்துகண்மாமழிசைக்குமன்பாணன்மங்கை
நாதன்மதுரகவிகோதைபாதங்கணண்ணுதுமே.

(இ - ள்.) வேதம் - வேதங்களின் பொருளை, தொகுத்து - சுருக்கமாக அடக்கி, தமிழ் பாடல் செய்த - தமிழ்ப்பாசுரங்களாக அருளிச்செய்த, விமலன் - நம்மாழ்வாரும், பொய்கை - பொய்கையாழ்வாரும், - பூதன் - பூதத்தாழ்வாரும், - மயிலையர் கோன் - பேயாழ்வாரும், - மாமழிசைக்குமன் - பெருமைபொருந்திய திருமழிசையாழ்வாரும், - புகழ் சேரன் - புகழினை யுடைய குலசேகராழ்வாரும், - புத்தூரன் - பெரியாழ்வாரும், - தொண்டர் பாதம் தரும் துகள் - தொண்டரடிப் பொடியாழ்வாரும், - பாணன் - திருப்பாணாழ்வாரும், - மங்கைநாதன் - திருமங்கையாழ்வாரும், - மதுரகவி - மதுர கவியாழ்வாரும், - கோதை - ஆண்டாளும் என்னும் ஆழ்வார்கள் பன்னிருவர்களது, பாதங்கள் - திருவடிகளை, நண்ணுதுல் - சேருவோம்; (எ - று.)

ஆசீர்வாதம் (வாழ்த்து), நமஸ்காரம் (வணக்கம்), வஸ்துநிர்த்தேசம் (தலைமைப்பொருளுரைத்தல்) என்ற மூவகைமங்களங்களுள் இது, வணக் கத்தின்பாற்படும். எப்பொழுதும் எம்பெருமானது குணங்களில் ஈடுபட்டுப் பாடல்பாடித்துதிக்கும் ஆழ்வார்கள் அப்பெருமானது தோத்திரமாகத் தாம் செய்யும் கலம்பகத்திற்கு நேரும் இடையூறுகளை நீக்கிப் பாதுகாப்ப ரென்று கொண்டு அவர்களை இங்கு வணங்குகின்றார். ஸ்ரீவைஷ்ணவசமயத் தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இக்காப்புச்செய்யுள், அந்த ஸ்ரீ மகாவிஷ்ணுவினது தொண்டர்களாகிய ஆழ்வார்களைக் குறித்த தாதலால், வழிபடு கடவுள் வணக்கம், ஏற்புடைக் கடவுள் வணக்கம் என்ற வகை யிரண்டில் வழிபடுகடவுள்வணக்கமாம். அடுத்த மூன்று செய்யுள்களும் இவ்வாறே. தம்தமது மதத்துக்கு உரிய கடவுளை வணங்குதலேயன்றி அக்கடவுளி னடியார்களை வணங்குதலும் வழிபடுகடவுள்வணக்கத்தின் பாற்படு மென்க.

எல்லாநூல்களும் மங்கலமொழி முதல்வகுத்துக் கூறவேண்டுவது பெரு மரபாதலின், காப்புச்செய்யுளின் முதலில் "வேதம்" என்று தொடங்கினார். மேல் நூல்தொடக்கத்தில் "சீர்" என்னுஞ் சொல்லை வைத்தவாறுங் காண்க.