பக்கம் எண் :

திருவரங்கக்கலம்பகம்271

ஒருமையாற்கூறித்தாழ்த்தாமற் பன்மையாற்கூறித் தன்னை உயர்த்தியபின் இதில் வணக்க மென்னெனின்;- அங்ஙனம் உயர்த்திக் கூறுதல் பிறவிடங்களில் உண்டெனினும் இவ்விடத்தில் உயர்த்தியதன்று; தன்மைப்பன்மையென்பது தன்னொடு சார்ந்தாரையுங் கூட்டியல்லது தனித்து இயலாமையால் தானொருவன் கடவுளை அறிந்து அன்புகூர்ந்து வணங்கி அப்பயனைத் தான் அடைதலினுஞ் சிருட்டி தொடங்கித் தன் கோத்திரத்தாரையுந் தன்னோடு கூட்டி வணங்கி அவர்க்கும் அப்பயனை அடைவித்தலே சிறந்ததெனக் கருதிச் சான்றோரெல்லாம் தொன்றுதொட்டு இவ்வாறு கூறிவருவதோர் மரபாமென்க; என்னெனின்; - "ஏகதந்த னிணையடி பணிவாம்", "ஏத்தியேத்தித் தொழுவோம் யாமே", "சரண வாரிசமலர் தலைக்கொள் வாமரோ" என இவ்வாறுகூறியவை அளவிலவென்க. நூல்செய்தவர்க்கு மாத்திரையேயன்றி, இந்நூலைப் படிக்கத்தொடங்குவோர் முதலியோர்க்கும் யாதோரிடையூறுமின்றி இந்நூல் முற்றப்போதற்கு அவர்களையும் உளப்படுத்திய தன்மைப்பன்மையெனினு மமையும். யாமென்னுந் தோன்றா எழுவாயை முதலிற்கூட்டி நண்ணுது மென முடிப்பினும், இச்செய்யுளில் நின்றாங்கே யாமென்பதனை இறுதியிலே கூட்டி முடிப்பினும் நேராகச் சென்று பொருள் முடிதலால், யாற்றுநீர்ப்பொருள்கோள் . ஏகாரம் - ஈற்றசை.

இங்ஙனம் வணங்கியதனால், எடுத்த கருமம் இனிது முடியுமென்று கருத்து.

இது, நேரசை முதலாய் ஒற்றொழித்துப் பதினாறெழுத்துப் பெற்று வந்த கட்டளைக்கலித்துறை.

(1)

(நம்மாழ்வார் துதி)

மறைப்பாற்கடலைத்திருநாவின்மந்தரத்தாற்கடைந்து
துறைப்பாற்படுத்தித்தமிழாயிரத்தின்சுவையமிர்தங்
கறைப்பாம்பணைப்பள்ளியானன்பரீட்டங்களித்தருந்த
நிறைப்பான்கழலன்றிச்சன்மவிடாய்க்குநிழலில்லையே.

(இ - ள்.) மறை - வேதமாகிய, பால்கடலை - திருப்பாற்கடலை, திருநாவின் - (தமது) சிறந்த நாக்காகிய, மந்தரத்தால் - மந்தரபருவதத்தால், கடைந்து -, துறை பால் படுத்தி - துறைகளின் வகைகளோடு பொருந்தச்செய்து, தமிழ் ஆயிரத்து - ஆயிரந் தமிழ்ப்பாசுரங்களாகிய, இன் சுவை அமிர்தம் - இனிய சுவையினையுடைய அமிருதத்தை, கறை பாம்பு அணை பள்ளியான் - நஞ்சினையுடைய திருவநந்தாழ்வானாகிய திருவணையிற் பள்ளி கொள்ளுதலையுடைய திருமாலினது, அன்பர் - தொண்டர்களது, ஈட்டம் - கூட்டம், களித்து - மனமகிழ்ந்து, அருந்த உண்ணும்படி, நிறைப்பான் - நிறைந்தருளிய நம்மாழ்வாரது, கழல் அன்றி - திருவடிகளேயல்லாமல், சன்மம் விடாய்க்கு - பிறவித்துன்பமாகிய தாபத்திற்கு, நிழல் - வேறுநிழலாவது, இல்லை -; (எ - று.)

அளத்தற்கரிய பரப்புடைமைபற்றியும், இன்சுவையுடைமைபற்றியும், எம்பெருமானுக்கு உறைவிடமாதல்பற்றியும், மறையைப் பாற்கடலாக உரு