வகப்படுத்தினார். திரு - வேறொன்றற்கில்லாத மேன்மை; "திருநாவீறுடைய பிரான்" என்னுந் திருநாமத்தின்பொருளை நோக்குக. தமிழ் - தமிழ்ப்பாடலுக்கு ஆகுபெயர். தமிழாயிரம் - திருவாய்மொழி. கறை - புள்ளி யென்றுமாம். அணை - சயநம். பள்ளி யோகநித்திரை. அன்பரீட்டங்களித்தருந்துதல் - "தொண்டர்க்கமுதுண்ணச்சொன்மாலைகள் சொன்னேன்" என்றதனானுமுணர்க. ஈட்டம் - தொழிற்பெயர்; ஈண்டு - முதனிலை. களிப்பு - பெறலரிய இப்பேறு பெற்றோமே யென்பதனா லுண்டாவது சன்மம் - ஜந்மம். பிறவித்துன்பங்களெல்லாந் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு இல்லையாதலின், ஸம்ஸாரதாபத்தை நீக்குதற்கு நிழலாமென்பார், "சன்மவிடாய்க்கு நிழலில்லை" என்றார். இது, உருவகவணி; இதில், விண்ணுலகத்திலுள்ள தேவர்க்குத் திருப்பாற்கடலமிருதம்போல மண்ணுலகத்திலுள்ள மானிடர்க்கு இத்திருவாய் மொழியமிருதம் அமையுமென்னும் உவமையணி தொனிக்கின்றது. இங்கு "இன்சுவையமிர்தம்" என்று சிறப்பித்துக் கூறியிருத்தலால், மரணத்தைமாத்திரம் தவிர்க்கும் அந்தத்தேவாமிருதத்தினும், பலவகைப்பிறப் பிறப்புக்களைத் தவிர்த்து முத்தியளிக்கும் ஆற்றலையுடைய இந்தத் திருவாய்மொழி யமிருதம் சிறந்ததென்பது தெற்றென விளங்கும். "அம்பிலே சிலையை நாட்டி யமரர்க்கன் றமுத மீந்த, தம்பிரா னென்னந் தானுந் தமிழிலே தாலை நாட்டிக், கம்பநா டுடைய வள்ளல் கவிச்சக்ர வர்த்தி பார்மே, னம்புபா மாலை யாலே நரருக்கின் றமுத மீந்தான்" என்பதனோடு இக்கவியை ஒப்பிட்டு உணர்க. "திருநாவென் மந்தரத்தால்" என்றும் பாடமுண்டு. இது, நிரையசைமுதலாய்ப் பதினேழெழுத்துப்பெற்று வந்த கட்டளைக் கலித்துறை; மேவிற்கவியும் இது. (2) (எம்பெருமானார் துதி.) | பிடிக்கும்பரசமயக்குலவேழம்பிளிறவெகுண் | | டிடிக்குங்குரற்சிங்கவேறனையானெழுபாருமுய்யப் | | படிக்கும்புகழெம்மிராமாநுசமுனிபல்குணமும் | | வடிக்குங்கருத்தினர்க்கேதிருமாமணிமண்டபமே. | (இ - ள்.) பிடிக்கும் - (தந்தமது சமயமே சிறந்ததாக) மேற்கொள்ளுகின்ற, பர சமயம் - வேறுமதத்தினராகிய, குலம்வேழம் - சிறந்தயானைகள், பிளிற - அலறும்படி, வெகுண்டு - கோபித்து, இடிக்கும் - கர்ச்சிக்கின்ற, குரல் - ஒலியையுடைய, சிங்கம் ஏறு - ஆண்சிங்கத்தை, அனையான் - போன்றவராகிய, எழு பாரும் - ஏழுலகத்தவரும், உய்ய - நற்கதியடையும்படி, படிக்கும் - பாராயணஞ்செய்கின்ற, புகழ் - கீர்த்தியையுடைய, எம் இரா மாநுசமுனி - எம்பெருமானாரது, பல் குணமும் - பலகுணங்களையும், வடிக்கும் - (சாரமாகத் தெளிந்தெடுத்துத்) தியானிக்கின்ற, கருத்தினர்க்கே - மனத்தையுடையவர்களுக்கே, திரு மா மணி மண்டபம் - (பரமபதத்திலுள்ள) முக்திமண்டபம், (பெறலாம்); (எ - று.) - பயனிலை வருவிக்கப் பட்டது. |