பக்கம் எண் :

திருவரங்கக்கலம்பகம்273

மற்றையோர்கீர்த்திபோலாகாமல், எம்பெருமானாரதுகீர்த்தி ஏழுலக த்தவரும் படித்து ஈடேறும்படியான பெருமை வாய்ந்த தென்பதை விளக்க, "எழுபாருமுய்ய" என்ற அடைமொழி கொடுத்துக்கூறினர்; "அனைத்துலகும் வாழப் பிறந்தவன்" என்னக்கடவதிறே, பிரமோபாசநத்தை விதிக்கிற வேதாந்தசாஸ்திரங்களில் ஐயமுழுதும்அகலும்படி இவர் ஸ்ரீபாஷ்ய முகமாகச் சகலஅர்த்தங்களையும் பிரசாதித்து மண்ணுலகத்தாரை வாழ்வித்தமையும், இவர் சாரதாபீடத்துக்கு எழுந்தருளியபோது தேவர்கட்கெல்லாந் தலைவனான பிரமதேவனது மகிஷியாகிய சரசுவதியானவள் இவர்பக்கல் தனதுஐயங்களையெல்லாம் தீர்த்துக்கொண்டதன்றி இவர்செய்தருளின ஸ்ரீபாஷ்யத்தைச் சிரசினால்வகித்தமையும் எங்கும் பிரசித்தம்; இவ்வரலாறுகளால், மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் இந்த எம்பெருமானாரால் ஈடேறியமை அறிக. இனி, எழுபார் என்பதற்கு - ஏழுத்வீபங்களிலுள்ளவர்க ளென்றுங் கூறலாம்.

எம்பெருமானார் திருவடிகளே சரண மென்று இருப்பவர்க்குத்தான் மோக்ஷலோகம் ஸித்திக்கு மென்பதாம். இவ்வாறு கூறியதற்குக் காரணம் - அஜ்ஞாநிகளாய் நித்யஸம்ஸாரிகளாய்ப் போருகிற நமக்குக் கர்மம் ஜ்ஞாநம் பக்தி ப்ரபத்தி என்ற சதுர்வித உபாயங்களில் எதனிலும் அந்வயித்தற்கு ஏற்ற யோக்கியதை யில்லாமையாலும், எம்பெருமானார்திறத்து "உமக்கும் உம்முடையார்க்கும் உபயவிபூத்யைஸ்வர்யமுந் தந்தோம்" என்று எம்பெருமான் அநுக்கிரகித்திருத்தலாலும், அவ்வெம்பெருமானார் ஸம்பந்தத்தைக் கொண்டே நற்கதி பெறவேண்டியிருத்தலாலுமா மென்க. "எம்பெருமானார் திருவடிகளைத் தொழவே, திவ்யதேசங்களெல்லாம் திருவடி தொழுதானாகக்கடவன்; உடையவரை ஆராதித்து அமுதுசெய்யப் பண்ணவே, எல்லாத்திவ்ய தேசங்களி லெம்பெருமான்களையும் ஆராதித்து அமுதுசெய்யப் பண்ணினானாகக்கடவன்; "கர்மமும் உபாயமன்று, ஜ்ஞாநமும் உபாயமன்று, பக்தியும் உபாயமன்று, ப்ரபத்தியும் உபாயமன்று, எம்பெருமானார் திருவடிகளே உபாயோபேயம்" என்கையாலே, எம்பெருமானாரைப் பற்றுகையே ப்ரபத்தி, ராமாநுஜ னென்கிற சதுரக்ஷரியே திருமந்திரம்; அவர்திருவடிகளிலே பண்ணுங் கைங்கரியமே பரமபுருஷார்த்தம்; இதுவே நிச்சிதார்த்தமான ஸித்தாந்தம்" என்ற வாக்கியங்கள் இங்கு நினைக்கத்தக்கன. இராமாநுசனென்னுஞ்சொல்லுக்கு - இராமன் தம்பியென்று பொருள்; ஆதிசேஷனது அம்சமாகிய லக்ஷ்மணனது அம்சமாதலால், உடையவருக்கு இப்பெயர். ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வைத ஸ்தாபநாசாரியரான ஸ்ரீபாஷ்யகாரர்க்கு, ஸர்வலக்ஷண ஸம்பந்நராயிருத்தல் பற்றி, லக்ஷ்மணரது திருநாமமான "இராமாநுசன்" என்னும் திருநாமம் பஞ்சஸம்ஸ்காரம் செய்யும்போது பெரிய நம்பியால் இடப்பட்டது ; பிறகு இவர் ஸந்யாஸம் பெற்றபோது திருக்கச்சியத்திகிரிப் பேரருளாளப்பெருமாள் "ராமாநுஜமுநி" என்று இவர்க்குத் திருநாமம் சாற்றியருளினர். குலவேழம் - உயர்ந்த குலத்தில் தோன்றிய யானை; இனி, வேழக்குலமென மாற்றி, யானைக்கூட்ட மென்றுமாம். சிங்கம் - ஸிம்ஹம்; யானை முதலிய பெரிய விலங்குகளையும் ஹிம்ஸிப்பதென்று பொருள். திருமாமணி மண்டபம் - அழகிய பெரிய இர