பக்கம் எண் :

திருவேங்கடமாலை405

அந்தரத்தான் - (பரமாகாசமெனப்படுகின்ற) பரமபதத்தை யுடையவனாகிய திருமால், சார்பு - சார்ந்திருக்கு மிடம்; (எ - று.)

இந்திரனுக்கும் திருவேங்கடத்துக்கும் செம்மொழிச்சிலேடையுவமை. மால்என்பது - இந்திரனுக்கு ஒருபெயராதல், "வாசவன் அமரர்கோன்மால் முகிலூர்தி" என்ற திவாகரத்தாலும் விளங்கும். மாலாய்ச் சசிதழுவி என்ப தற்கு - ஆசைகொண்டு இந்திராணியை யணைத்து என்றும் பொருள்கொள் ளலாம். வடமொழித்திரிபாகிய சசி யென்பது - சந்திரனைக் குறிக்கையில், முயல்வடிவத்தையுடையதென்று காரணப்பொருள்படும்; சசம் - முயல்: சந்திரனிடத்துக் காணப்படுகின்ற களங்கத்தை முயலென்றல், ஒருவகைக் கவி மரபு. வஜ்ரம் என்ற வடசொல், வச்சிரமெனத் திரிந்தது. செம்புள்ளிகளை யுடைமை யானைக்கு நல்லிலக்கணமாதலை, "தீயுமிழ் சிறுகணுஞ் செம்புகரு முடைத்தாய்" என்ற அரசயானையிலக்கணத்தினாலும் அறிக. புரந்தரன் - வடசொல்; (பகைவர்களுடைய) நகரங்களையழிப்பவ னென்று காரணப்பொ ருள்படும்: புரம் - பட்டணம். நால் - நான்கு என்பதன் விகாரம். வாகு - பாஹு என்ற வடசொல்லின் திரிபு. அழித்தற்குஅரிய வலிமையும் பருமையும் பற்றி, தோளுக்கு மலை உவமைகூறப்படும். எட்டுக்குலமலைகளுள் ஒன்றாய் மிகப்பெரியதும் வலியதுமாதல்பற்றி, மந்தரத்தை யெடுத்துக்கூறினார். அதனை உவமைகூறியதனால், அம்மலை பாற்கடலைக் கடைந்தமைபோல இத்தோள்கள் பகைவருடைய போர்க்கடலை எளிதிற் கடக்கவல்லன வென்க. வேட்டு, வேள் - பகுதி. பரமபதம் தேவர்க்கும் செல்லுதற்கு எளியதன்றென்பது, "கேட்டமரர் வேட்டுத் தளர்வாகு மந்தரம்" என்றதன் கருத்து.

(6)

7.வள்ளிபுணர்ந் தாறுமுக மன்னிமயின் மேற்கொளலால்
வெள்ளிலைவேல் வேள்போலும் வேங்கடமே - யுள்ளினரைத்
தங்கமலப் பார்வையான் றன்னடியார் மேல்வைக்குஞ்
செங்கமலப் பார்வையான் சேர்வு.

(இ - ள்.) வள்ளி புணர்ந்து - வள்ளிநாயகியோடு கூடி (வள்ளிக்கொடி கள் பொருந்தப்பெற்று), ஆறு முகம் மன்னி - ஆறு முகம் அமையப்பெற்று (நதிகள் தன்னிடத்திலே அமையப்பெற்றதாய்), மயில் மேல் கொளலால் - மயிலை வாகனமாகக்கொண்டு அதன்மேல் ஏறுதலால் (மயில்களைத் தன் மேற்கொண்டிருத்தலால்), வெள் இலை வேல் வேள் போலும் - வெள்ளிய இலைவடிவமாகிய வேலாயுதத்தையுடைய முருகக் கடவுளை யொக்கின்ற, வேங்கடமே - , - உள்ளினரை - (தன்னைத்) தியானித்த அடியார்களை, மலம் பார் - (காம வெகுளி மயக்கங்களாகிய) மும்மலங்கள் பொருந்திய உலகத்தில், தங்க வையான் - இருக்க வைக்காமல் தனது பரமபதத்திற் சேர்த்துக் கொள்பவனும், தன் அடியார்மேல் வைக்கும் - தனது அடியார்க ளிடத்து வைக்கின்ற, செம் கமலம் பார்வையான் - செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களின் நோக்கத்தை யுடையவனு மாகிய திருமால், சேர்வு - சேருமிடம்; (எ - று.)