பக்கம் எண் :

406திருவேங்கடமாலை

சுப்பிரமணியனுக்கும் வேங்கடத்துக்கும் செம்மொழிச்சிலேடைபற்றி வந்த உவமை. வள்ளி - சுப்பிரமணியனது மனைவியர் இருவருள் ஒருத்தி. (மற்றொருத்தியின் பெயர் - தேவயானை.) வள்ளிக்கிழங்கின் கொடியை மிகுதியாகவுடைமையால் வள்ளிமலை யென்று பெயர்பெற்ற கிரியில் வள் ளிக்கொடிகளுள்ள இடத்திற் பிறத்தலால், இவளுக்கு, வள்ளி யென்று பெயர். "ஆறுமுகமன்னி" என்பதற்கு - (திருவேங்கடத்துக்குச் சேருங்கால்) சண்முகதீர்த்தமென்னும் திவ்வியதீர்த்தம் பொருந்தி என்றும் பொருள் கொள்ளலாம். மூன்றாமடியில், வையான் வைக்கும் என வந்தது. முரண்தொடை; "மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே" என்றது காண்க.

(7)

8.புள்ளரவ நீரரவம் போர்மா வரவமறா
வெள்ளரவ வெற்பாகும் வேங்கடமே - யொள்ளரியாய்
மாகனகம் பத்தினார் வாய்கண்கை யுந்திபதங்
கோகனகம் பத்தினார் குன்று.

(இ - ள்.) புள் அரவம் - பறவைகளின் ஒலியும், நீர் அரவம் - அருவி நீர்பெருகிய ஒலியும், போர் மா அரவம் - போர்செய்கின்ற யானை முதலிய விலங்குகளின் ஓசையும், அறா - நீங்காததாய், வெள் அரவ வெற்பு ஆகும் - சுத்தமான அரவவெற்பென்று ஒருபெயர்பெற்ற, வேங்கடமே - , - ஒள் அரி ஆய் - விளங்குகின்ற சிங்கவடிவமாய், மா கன கம்பத்தினார் - ஓங்கிய பருத்த தூணினின்று தோன்றியவரும், வாய் கண் கை உந்தி பதம் - வாய் ஒன்றும் கண்கள் இரண்டும் கைகள்நான்கும் நாபிஒன்றும் பாதம் இரண்டும் ஆகிய, கோகனகம் பத்தினார் - பத்துத்தாமரைமலர்களையுடையவ ருமாகிய திருமாலினது, குன்று - திருமலை; (எ - று.)

அரவம் என்பது - ஓசையென்னும் பொருளில் ரவம்என்ற வடமொழி முதலில் அகரம்பெற்றதும், பாம்பென்ற பொருளில் அராஎன்னும் தென்மொழி குறுகி அம்சாரியை பெற்றதுமாம். சேஷகிரியென்பதன் பரியாயநாமமாக அப்பொருளில் திருவேங்கடமலைக்கு அரவவெற்பு என்று ஒருபெயர் வழங்கும்; அப்பெயர்க்கு - புள்ளரவம் முதலிய பலவகையரவங்கள் (ஒலிகள்) நீங்காததாய் அரவவெற்பாகுமென்று வேறொருவகைக்காரணங் கற்பித்துக் கூறினது, நிருக்தியலங்காரம்; தமிழில் பிரிநிலைநவிற்சியணி யெனப்படும்: அதன் இலக்கணம் - பெயர்களுக்கு உறுப்பாற்றலால் மற்றொருபொருளைத் தந்துரைத்தல். திருமால் நரசிங்கவடிவமாய்த் தூணினின்று வெளிப்பட்டு இரணியனைக்கொன்று பிரகலாதனைப் பாதுகாத்தமை, பிரசித்தம். அரி - ஹரி; சிங்கம்; (யானை முதலியவற்றை) அழிப்பது. ஸ்தம்பம், கோகநதம் என்ற வடசொற்கள் - கம்பம், கோகநகம் என விகாரப்பட்டன. வாய்முதலியவற்றுக்குத் தாமரைமலர் மென்மையழகுகளில் உவமம். ஆய்என்ற வினையெச்சம். கம்பத்தினார் என்ற குறிப்புவினையாலணையும் பெயரில் தொக்குநின்ற "தோன்றியவர்" என்பதைக் கொள்ளும். பரமபதநாதனது கட்டளையின்படி அவனுக்குப் பலவகைக்கைங்கரியங்களைச் செய்யும் ஆதிசேஷனே இம்மலையுரு