பக்கம் எண் :

திருவேங்கடமாலை409

ளாரும் என்று உரைப்பாரும் உளர். வாலீ என்ற வடசொல் வாலியென ஈயீறு இகாரமாயிற்று. இப்பெயர் - வாலில் வலிமையுடையவ னென்றும், வாலினின்று பிறந்தவனென்றும் காரணப்பொருள் படும். இவன் - இந்திரன் மகன்; சுக்கிரீவனது தமையன்; கிஷ்கிந்தா நகரத்தையாண்ட வாநரராசன்; தன்னை யெதிர்த்தாரது வலிமையிற் பாதி தன்னிடம் வந்து கூடும்படி வரம் பெற்றவன்; இராவணனை ஒருகால் வென்று பின்பு அவனது வேண்டுகோ ளின்படி அவனோடு அக்கினிசாக்ஷியாக நண்புகொண்டவன். இராமபிரான் வனவாசஞ்செய்கையில் இராவணன் சீதையை யெடுத்துக்கொண்டுபோன பின்பு அப்பிராட்டியைத் தேடிக்கொண்டு இலக்குமணனுடனே செல்லுகையில் வழியிலெதிர்ப்பட்ட அநுமான்மூலமாகச் சுக்கிரீவனோடு நண்பு கொண்டு அவன் வேண்டுகோளின்படி அவனது தமையனும் வாநரராசனு மான வாலியைத்தந்திரமாகக்கொன்று சுக்கிரீவனுக்குக்கிஷ்கிந்தையில் முடிசூட்டி வைத்தபின் அவனது உதவியால் இராவணாதியரைக் கொன்று பிராட்டியை மீட்டன னென வரலாறு அறிக. வாலி முன்னமே இராவணனுடன் அக்கினிசாட்சியாக நட்புக்கொண்டிருந்ததுபற்றி அவனை இராமபிரான் உதவி யாகக்கொண்டால் இராவணாதி துஷ்டர்களைத் தொலைக்க வகையில்லாமை யால், வாலியை நண்பாகக்கொள்ளாமல் சரணமடைந்த சுக்கிரீவனது வேண்டுகோளின்படி அவ்வாலியை வதைத்திட்டா னென்க; வாலியை நண்பா வையாது அரித்ததற்கு மற்றுஞ்சிலகாரணமுங் கூறப்படும். ஆ - ஆக: விகாரம்.

முதலாழ்வார்கள் - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், இவர்கள்மூவரும் மற்றையாழ்வார்களுக்கெல்லாம் முன்னே திருவவதரித்தத னாலும், பின்பு உண்டாகும் பிரபந்தங்களுக்கெல்லாம் இலக்கணமாம்படி ஆதியில் திருவந்தாதி திவ்வியப்பிரபந்தங்களைத் திருவாய்மலர்ந்தருளிய தனாலும், முதலாழ்வார்க ளென்று பெயர்பெற்றனர். ("மற்றுள்ள வாழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து, நற்றமிழால் நூல்செய்து நாட்டையுய்த்த - பெற்றிமையோ, ரென்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு, நின்ற துலகத்தே நிகழ்ந்து" என்ற உபதேசரத்தினமாலையையுங் காண்க.) இம்மூவரும் நூறுநூறு வெண்பாக்களினாற்பாடிய திவ்வியப்பிரபந்தங்கள், முறையே முதல் திருவந்தாதி, இரண்டாந்திருவந்தாதி, மூன்றாந்திருவந்தாதி யெனப் பெயர்பெறும். வெண்பா - அதனாலாகிய பிரபந்தத்துக்குக் கருவியாகுபெயர். தலைமைபற்றி, முதலாழ்வார்கள் வெண்பாவையாதரித்தமையை எடுத்துக்கூறினார்; அன்றியும், அவர்கள் நூற்றெட்டுத்திருப்பதிகளுள்ளும் திருவேங்கடத்தை மிகுதியாகப் பாராட்டிக் கூறியமையுங் காண்க.

(11)

12.தெள்ளியதோர் வீடருளுஞ் சீர்கேட்டுப் பொன்மலையும்
வெள்ளிமலை யும்பணியும் வேங்கடமே - புள்ளின்
கொடிவா கனத்தான் குளிர்ந்திருண்ட காரின்
வடிவாக னத்தான் வரை.

(இ - ள்.) தெள்ளியது ஓர் வீடு அருளும் சீர் கேட்டு - தெளிவுள்ள தான ஒப்பற்ற பரமபதத்தைக் கொடுத்தருளுகிற சிறப்பைக் கேள்விப்பட்டு,