பக்கம் எண் :

438திருவேங்கடமாலை

தாண்டமண்டலத்தார்" என்றார். ஆண்ட என்பதற்கு - மனைவியாக ஆட் கொள்ளப்பட்ட என்றும் பொருளுரைக்கலாம்; பூமி தேவியாதல் காண்க. "பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரையாண்ட, பேராளன்" என்ற திருநெடுந் தாண்டகம் இங்குக் காணத்தக்கது.

(46)

47.செம்பதும ராகச் சிலைசூழ் பெரும்பாந்தள்
வெம்பரிதி யூர்கோளாம் வேங்கடமே - யும்பருல
கோதத்தி னப்புறத்தா னோரா லிலைதுயின்றான்
வேதத்தி னப்புறத்தான் வெற்பு.

(இ - ள்.) செம் - செந்நிறமான, பதுமராகம் சிலை - பதுமராகக்கல்லை, சூழ் - சுற்றிக்கொண்ட, பெரு பாந்தள் - பெரிய மலைப்பாம்பு, வெம் பரிதி ஊர்கோள் ஆம் - வெவ்விய சூரியமண்டலத்தைச் சுற்றிக் காணப்படும் பரி வேஷம் போன்று தோன்றப் பெற்ற, வேங்கடமே - , - ஓதத்தின் அப்பு - பிரளய சமுத்திரத்தின் நீர்வெள்ளம், உலகு உம்பர் உற - எல்லாவுலகங்களையுங் கவிந்து அவற்றின்மேற் சென்று பரவ, தான் ஓர் ஆல் இலை துயின்றான் - (அப்பெருங்கடலில்) ஓர் ஆலிலையின்மேல் தான் யோகநித்திரை கொள்கின்றவனும், வேதத்தின் அப்புறத்தான் . வேதங்களுக்கு எட்டாமல் அப்பாற்பட்டவனுமான திருமாலினது, வெற்பு - திருமலை; (எ - று.)

பத்மராகம் - வடசொல்; செந்தாமரைமலர்போலச் செந்நிறமுடைய தென்று பொருள்படும்; இது, நவரத்தினங்களுள் ஒன்று. செந்நிறமுள்ளதாக மிகவிளங்குகிற பதுமராக ரத்தினத்துக்கு - அங்ஙனம் விளங்குகிற சூரிய மண்டலமும், அவ்விரத்தினத்தைச் சுற்றிக்கொண்ட பெரும்பாம்புக்கு - சிற்சிலசமயங்களில் சூரியமண்டலத்தைச் சுற்றி அருகிற்காணப்படுகிற ஊர் கோள்வட்டமும் உவமைகூறப்பட்டன. பரிதி - வடசொல். ஊர்கோள் - ஊர்ந்துகொள்வது எனப் பொருள்படும் காரணக்குறி; ஊர்தல் - வளைதல். உம்பருலகு உற என்றுஎடுத்து, மேலுள்ள தேவலோகங்களுக்கும் மேலே பொருந்த என்று உரைத்தலும் ஒன்று. இனி, தேவலோகமுமுட்பட யாவும் கடல்வெள்ளத்தினுள்ளே அகப்பட எனினும் அமையும். வேதங்கட்கும் எட்டாதபடியுள்ளது எம்பெருமானது ஸ்வரூபமென்பது, வேதங்களினாலேயே விளங்குகின்றது.

(47)

48.கோலமணிப் பாறையிற்பாய் கோடரங்கள் செங்கதிரோன்
மேலனுமன் பாய்ந்தனைய வேங்கடமே - நாலுமறை
யாய்ந்தபர தத்துவந்தா னானான் குடமாடல்
வாய்ந்தபர தத்துவந்தான் வாழ்வு.

(இ - ள்.) கோலம் - அழகிய, மணி பாறையில் - மாணிக்கப்பாறையின் மேல், பாய் - பாய்கின்ற, கோடரங்கள் - குரங்குகள், செங் கதிரோன் மேல் அனுமன் பாய்ந்து அனைய - சிவந்த சூரியமண்டலத்தின்மேல் அனுமான் பாய்ந்தாற்போலத் தோன்றுதற்கு இடமான, வேங்கடமே - ,