பக்கம் எண் :

440திருவேங்கடமாலை

கூத்தாவது" என்ற வாக்கியங்கள் இங்கு உணரத்தக்கன. குடம் - தயிர்த்தாழி. "குடத்தால் குன்றெடுத்தோ னாடல்," "நீணிலமளந்தோ னாடிய குடம்" என்றார் பிறரும். பரதம் - வடசொல்; பாவம், ரஸம், தாளம் இம் மூன்றையு முடைமைபற்றி, பரதமென்று நாட்டியத்துக்குப் பெயரென்பர்.

(48)

49.கொம்பினிறால் வாங்கநிமிர் குஞ்சரக்கை யம்புலிமேல்
வெம்பியெழுங் கோளரவாம் வேங்கடமே - தும்பிபல
போர்காது மீர்தார் புனையரக்கி மூக்கினொடு
வார்காது மீர்ந்தார் வரை.

(இ - ள்.) கொம்பின் - மரக்கொம்பிற்கட்டிய, இறால் - தேன்கூட்டை, வாங்க - எடுத்தற்கு, நிமிர் - உயரத்தூக்கிய, குஞ்சரம் கை - யானையினுடைய துதிக்கை, அம்புலிமேல் வெம்பி எழும் கோள் அரவு ஆம் - சந்திர மண்டலத்தைப் பற்றுதற்கு அதன்மேல் கறுக்கொண்டு எழுகின்ற கரும்பாம்பு வடிவமான (இராகுவென்னும்) கிரகம்போலத் தோன்றப்பெற்ற, வேங்கடமே -,- தும்பி பல போர் காதும் - பல வண்டுகள் நெருங்கி மொய்த்து ஒன்றோடு ஒன்று தாக்கப்பெற்ற, ஈர் தார் - (தேனினாற்) குளிர்ந்த மலர்மாலையை, புனை - தரித்த, அரக்கி - சூர்ப்பணகையினது, மூக்கினொடு - மூக்கையும், வார் காதும் - நீண்ட காதையும், ஈர்ந்தார் - அறுத்தவராகிய திருமாலினது, வரை - திருமலை; (எ - று.)

இறாலுக்குச் சந்திரனும், அதன்மீது எடுத்த யானைத் துதிக்கைக்குச் சந்திரன்மீது எழும் இராகுவென்னும் பாம்பும் வடிவில் உவமம் குஞ்சரம் - வடசொல்; காட்டுப்புதர்களிற் சஞ்சரிப்பது என்றும், துதிக்கையையுடையது என்றும் காரணப் பொருள்படுவது. கிரகணகாலத்திற் சூரியனை மறைக்கின்ற சந்திரன் சாயையும், சந்திரனை மறைக்கின்ற பூமியின்சாயையும் இராகு கேதுக்களென்னும் பாம்புவடிவமான கிரகங்க ளெனப்படும். பாற்கடல் கடைகையில் உண்டான அமிருதகலசத்தை யெடுத்துக்கொண்ட திருமால் மிகவும் அழகிய மோகினியென்னும் பெண்வடிவத்தால் அசுரர்களை மயக்கித் தேவர்களுக்கே அமிருதத்தைப் பங்கிட்டுக் கொடுத்து வருகையில், இராகுவென்னும் ஓரசுரன் தான்இருத்தற்குஉரிய அசுரர் கூட்டத்தைவிட்டு வஞ்சனையாகத் தேவர்கூட்டத்தினிடையிலே புக்குக் கையேற்று அமிருதத்தை வாங்கியுண்ண, அதனைச் சூரியசந்திரர் குறிப்பித்த மாத்திரத்தில் எம்பெருமான் அவனை அகப்பையால் அடித்துத் தலைவேறு உடல்வேறாக்க, அமிருத முண்டதனால் உயிர்நீங்காத அந்தத் தலையும் உடம்பும் விஷ்ணுவின் அனுக்கிரகத்தால் இராகு கேதுக்களென்ற இரண்டு கிரகங்களாகிச் சூரியன்முதலிய ஏழு கிரகங்களோடு சேர்ந்து கரும்பாம்பு செம்பாம்புவடிவுபெற்று, தம் மேற்கோள்சொன்ன சூரிய சந்திரர்க்குப் பகையாய்ச் சிற்சிலகாலத்தில் அவர்களைப் பிடித்துக்கொள்கின்றன வென்பது, புராணவரலாறு.

மலர்களின் தேனை யுண்ணுதற்பொருட்டுப் பல வண்டுகள் நெருங்கி மொய்க்கும்போது, நான்முன்னே நான்முன்னே யென்று ஒன்றன்மே