லொன்றாக விழு மென்பது, "தும்பியல போர்காதும்" என்பதன் கருத்து; இது, தார்க்கு அடைமொழி; அரக்கிக்கு அடைமொழியாகக்கொண்டு, பலயானைகளோடு போர்செய்யும் வலிமையுடைய என்று பொருள்கொள்ளவும் இடமுண்டு. ஈர்ந் தார் - குளிர்ச்சியாகிய மாலை யெனக் கொண்டால் பண்புத் தொகையும், குளிர்ச்சியையுடைய மாலையெனக் கொண்டால் இரண்டனுருபும் பொருளுந் தொக்கதொகையுமாம். ஈர் + தார் = ஈர்ந்தார்; "யரழமுன்னர்" என்னுஞ் சூத்திர விதி. சூர்ப்பணகை இராமலக்ஷ்மணரிடம் வரும்பொழுது அழகியவடிவங்கொண்டு ஆடையாபரணாதிகளால் தன்னையலங்கரித்து வந்தமை தோன்ற, "தும்பிபல போர்காது மீர்ந்தார் புனையரக்கி" என்றார்; "அறலோதிப், பூ முரலும் வண்டு மிவை பூசலிடு மோசை" என்ற கம்பராமாயணத்தையுங் காண்க. சூர்ப்பணகையை அங்கபங்கப்படுத்தியது இராமபிரானது திருத்தம்பி யான இளையபெருமாளினது செய்கையாயினும், அதனைப் பெருமான் மேல் ஏற்றிச் சொன்னது, இராமபிரானது கருத்திற்கு ஏற்ப அவன் கட்டளையிட்டபடி. இவன்செய்தன னாதலின் ஏவுதற்கருத்தாவின் வினையாதல்பற்றி யென்க. அன்றியும், இளையபெருமாளும் திருமாலினது திருவவதாரமே யாதலால், அங்ஙனஞ் சொல்லத் தட்டில்லை. மற்றும், "ராமஸ்ய தக்ஷிணோபாஹு:" என்றபடி இராமனுக்கு இலக்குமணன் வலத்திருக்கை யெனப்படுதலால், அங்ஙனம் கையாகிற இலக்குமணனது செயலை இராமன் மேல் ஒற்றுமைநயம்பற்றி ஏற்றிச்சொல்லுதல் தகுதியே. "அரக்கிமூக்கை நீக்கிக் கரனோடுதூடணன் தனுயிரை வாங்கி" என்று குலசேகராழ்வாரும், "தன் சீதைக்கு, நேரவைனென்றோர் நிராசரிதான் வந்தாளைக், கூரார்ந்த வாளாளாற் கொடிமூக்குங் காதிரண்டும், ஈராவிடுத் தவட்குமூத்தோனை வெந்நரகஞ், சேராவரையே சிலைகுனித்தான்" என்று திருமங்கையாழ்வாரும் அருளிச்செய்தமையுங் காண்க. "தம்முடைய கையாலேயிறே தண்டிப்பது; ...... தம்முடைய தோளாயிருக்கிற இளையபெருமாளை இடுவித்துத் தண்டிப்பித்தார்" என்ற வியாக்கியாந வாக்கியமும் உணரத்தக்கது. (49) | 50. | வண்மைதிகழ் வெண்பளிங்கு வட்டத்திற் கண்டுயின்மான் | | விண்மதியின் மானேய்க்கும் வேங்கடமே - யொண்மதியா | | னூலைத்தா மோதரனார் நோக்கவரி யார்துளவ | | மாலைத்தா மோதரனார் வாழ்வு. | (இ - ள்.) வண்மை திகழ் - அழகியதாக விளங்குகின்ற, வெள் பளிங்கு வட்டத்தில் - வெண்ணிறமான வட்டவடிவுள்ள பளிக்குப்பாறையில், கண் துயில் - படுத்துத்தூங்குகிற, மான் -, விண் மதியின்மான் ஏய்க்கும் - வானத்துச் சந்திரமண்டலத்தின் நடுவிலே காணப்படுகிற மான்வடிவத்தை யொத்திருக்கப்பெற்ற, வேங்கடமே -,- ஒள் மதியால் - சிறந்த புத்தியினால் (தமது புத்திவிசேஷத்தால்), நூலை தாம் ஓது - பல நூல்களைத் தாம்ஓதிய, அரனார் - சிவபெருமானாலும், நோக்க அரியார் - கட்புலனாகக் கண்டு தரிசிக்க முடியாத |