வரும், துளவம் மாலை - திருத்துழாய்மாலையையணிந்த, தாமோதரனார் - தாமோதரனென்ற ஒருதிருநாம முடையவருமாகிய திருமால், வாழ்வு - வாழுமிடம்; (எ - று.) பளிங்கு வட்டத்துக்குச் சந்திரமண்டலமும், அதனிடையே அசையாது துயில்கிற மானுக்குச் சந்திரமண்டலத்தின் நடுவிலே அசைவின்றிக் காணப் படுகிற மான்வடிவமும் உவமை; வடிவு பற்றியது. பளிங்கு - ஸ்படிகம். வ்ருத்த மென்னும் வடமொழி, வட்டமெனச் சிதைந்தது. ஏய்க்கும் - உவமவுருபு. மதி - அறிவைக் குறிக்கையில், வடசொல். தாம் - அசை. ஓதுதல் - கற்றலும், கற்பித்தலும், நூலியற்றலும். தாமோதர என்ற வடசொல். தாம + உதர எனப் பிரிந்து, (வெண்ணெய் களவாடினதற்கு ஒருதண்டனையாக யசோதையாற் கட்டப்பட்ட) கயிற்றை வயிற்றிலுடையவனென்று காரணப் பொருள்படும் தாமம் - கயிறு, உதரம் - வயிறு. (50) சிலேடைகள். | 51. | காதலிற்றுச் சார்தவர்க்குங் காமியத்தைச் சார்ந்தவர்க்கும் | | வேதனைக்கூற் றைத்தவிர்க்கும் வேங்கடமே - போதகத்தை | | மோதி மருப்பொசித்தார் முன்பதினா றாயிரவ | | ரோதி மருப்பொசித்தா ரூர். | (இ - ள்.) காதல் இற்று சார் தவர்க்கும் - (பிரபஞ்சவாழ்வில்) ஆசை (முழுவதும்) ஒழிந்து (தன்னிடம் வந்து) சேர்ந்த முனிவர்களுக்கும், வேதனை கூற்றை தவிர்க்கும் - பிரமனையும் யமனையும் விலக்குகின்ற: காமியத்தை சார்ந்தவர்க்கும் - பிரபஞ்சவாழ்வுகளை விரும்பியவர்களுக்கும், வேதனை கூற்றை தவிர்க்கும் - துன்பங்களின் வகைகளை ஒழிக்கின்ற: வேங்கடமே -,- போதகத்தை - யானையை, மோதி - தாக்கி, மருப்பு ஒசித்தார் - அதன் தந்தங்களை முறித்தவரும், முன் - முற்காலத்தில் (கிருஷ்ணாவதாரத்தில்), பதினாறாயிரவர் - பதினாறாயிரம் இளமங்கையருடைய, ஓதி - கூந்தலின், மரு - நறுமணத்தை, பொசித்தார் - மோந்து நுகர்ந்தவருமான திருமாலினது, ஊர் - வாசஸ்தாநமாம்; (எ - று.) "வேதனைக்கூற்றைத் தவிர்க்கும்" என்ற தொடர் - வெவ்வேறுவகையாகப் பிரியாது ஒருவகையாகவே பிரிந்து இருபொருள்பட்டதனால், செம்மொழிச்சிலேடை; இது, வடமொழியில் அபிந்நபதச்லேஷா எனப்படும்: பிறவும் இங்ஙனம் வருவன காண்க. காதலிற்றுச்சார்ந்தவராவார் - எல்லாவகைப்பற்றுக்களையும் முற்றத்துறந்து முத்திபெறுதற்பொருட்டுத் திருவேங்கடமுடையானை வந்து சரணமடைகிற முனிவர்கள்: அவர்கட்குப் பிரமனையும் யமனையும் விலக்குகின்ற என்றது -பிரமனால்வரும் பிறப்பையும், யமனால்வரும் இறப்பையும் போக்கி முத்தியளிக்கிற மகிமையையுடைய என்றபடி. வேதன் என்றது - அவனது காரியமான ஜநநத்துக்கும், கூற்று என்றது - அவனது காரியமான மரணத்துக்கும் இலக்கணை. காமியத்தைச் சார்ந்தவராவார் - அழியுந்தன்மையனவான இம்மை மறுமைப்பேறுகளை விரும்பி வந்து சேர்ப |