வர்கள். அவர்கட்குத் துன்பவகைகளை ஒழிக்கின்ற என்றது - "பித்து மலடூமை முடம் பேய் குருடு கூன் செவிடு, மெய்த்துயர்நோய் தீர்த்தருளும் வேங்கடமே" என்றவாறு அவர்களுடைய உடற்குற்றங்களையும் நோய்களையும் மகப்பேறின்மை முதலிய மநோவியாதிகளையும் நீக்கி அவர்கள் வேண்டிய பயன்களை அவர்கட்கு வேண்டியவாறே உண்டாகச் செய்கின்ற சிறப்பையுடைய என்றபடி. பற்றற்று வந்தவர்க்கும். பற்றறாதுவந்தவர்க்கும் சமமாக இடையூறகற்றியருள்கின்ற வேங்கடமெனச் சொல்நயத்தாற் சமத்காரந் தோன்றக் கூறியவாறு காண்க. கண்ணபிரான் இளமையில் திருவாய்ப்பாடியில்வளரும்போது தன்னிடங் காதல்கொண்ட பதினாறாயிரம் கோபஸ்த்ரீகளோடுகூடி இன்பம்நுகர்ந்தமையும், கண்ணன் நரகாசுரனைச் சங்கரித்தபின்பு அவனாற் சிறைவைக்கப் பட்டிருந்த தேவசித்தகந்தருவாதி கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும் பதினாறாயிரம் வடிவமெடுத்து விவாகஞ்செய்துகொண்டு அவர்களோடு கூடி இன்பம் நுகர்ந்தமையும் பற்றி, "பதினாறாயிரவரோதி மருப்பொசித்தார்" என்றார். "ஓதிமருப்பொசித்தார்" என்றது - அவர்களுடைய கூந்தலில் உத்தம இலக்கணமாக இயற்கையில் அமைந்துள்ள நறுமணத்தையும் நறுநெய்பூசி நன்மலர் சூடுதலாற் செயற்கையில் அமைந்த நறுமணத்தையும், உட்கொண்டு உளங்களித்தவ ரென்றபடி. ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும் இன்ப வகைகளுள் இங்கு மூக்கினாற் புலம்நுகர்ந்ததைக் கூறியது, பிறவாறு இன்பம் நுகர்ந்ததற்கும் உபலக்ஷணம். உம்மைகள் - எண்ணுப்பொருளன, இற்று என்ற வினையெச்சத்தில், இறு என்ற குறிலிணைப்பகுதி இடை ஒற்று இரட்டி இறந்தகாலங் காட்டிற்று. சார்தவர் - வினைத்தொகை. தவர் - தவஞ்செய்பவர். "காதலித்துச்சார்ந்தவர்" என்று பாடமோதி, (பரமபதத்தைப்பெற) விரும்பித் தன்னைவந்தடைந்தவர் என்று உரைப்பாரும் உளர். காம்யம் - வடசொல்; விரும்பப்படும் பொருள். வேதன் - வேதங்களை ஓதியவன்; அன்றி, வேதா என்னும் வடசொல்லின் விகார மெனக்கொண்டால், விதிக்குங் கடவு ளென்று ஆகும்; விதித்தல் - படைத்தல். கூற்று - (உடலையும் உயிரையும் வெவ்வேறு) கூறாக்குபவன். இரண்டாம் பொருளில் வேதநா என்ற வடசொல் வேதனையென விகாரப்பட்டது. கூற்றை என்றது - கூறுஎன்பதன் இரண்டாம் வேற்றுமை விரி. "தவிர்க்கும் வேங்கடம்" என்றதில், நிலைமொழியிறுதியில் நின்ற மகரவொற்று - வகரத்தின்முன் வந்ததனால், மகரக்குறுக்கம்; மாத்திரை - கால். போதகம் - வடசொல். போதகத்தை மோதி மருப்பொசித்தார் - போதகத்தை மருப்புஒசித்து மோதினார் என விகுதி பிரித்துக் கூட்டலுமாம். முன் - காலமுன்; இதனை, மத்திமதீபமாக முன்நின்ற "ஒசித்தார்" என்பதனோடும் இயைக்கலாம். ஒசித்தார். பொசித்தார் - உயர்வுப்பன்மை. பதினாறாயிரவர் -எண்ணடியாப்பிறந்தபெயர்; இங்கே, தொகைக்குறிப்பு. ஓதி - பெண்மயிர். பொசித்தல் = புஜித்தல். புசித்தல், உண்ணல், நுகர்தல், துய்த்தல் என்பன - ஒருபொருளன. "ஊர்" என்றது - திருமாலுக்குத் திருவேங்கடம் இயல்பிலுரியதாதலை விளக்கும். (51) |