பக்கம் எண் :

444திருவேங்கடமாலை

52.கேள்வித் துறவோருங் கேடறவில் வாழ்வோரும்
வேள்விக் கினமாற்றும் வேங்கடமே - மூள்வித்து
முன்பா ரதமுடித்தார் மொய்வேந்தர் வந்தவிய
வன்பா ரதமுடித்தார் வாழ்வு.

(இ - ள்.) கேள்வி துறவோரும் - ஞானக்கேள்விகளையுடைய துறவிகளும், வேள் விக்கினம் மாற்றும் - மன்மதனால் வரும் இடையூற்றை நீக்குதற்கு இடமான: கேடு அற இல் வாழ்வோரும் - தீங்கில்லாமல் இல்லற வொழுக்கத்தில் வாழ்பவர்களும், வேள்விக்கு இனம் ஆற்றும் - யாகத்துக்கு இனமான நற்செயல்களைச்செய்தற்கு இடமான: வேங்கடமே - , - முன்பு ஆ - முற்காலத்தில், ரதம் முடி தார் மொய் வேந்தர் வந்து அவிய - தேரையும் கிரீடத்தையும் மாலையையும் உடைய வலிய அரசர்கள் வந்து (பொருது) இறக்கும்படி, வல் பாரதம் - கொடிய பாரதயுத்தத்தை, மூள்வித்து முடித்தார் - மூட்டிநிறைவேற்றியவராகிய திருமாலின், வாழ்வு - வாசஸ்தாநம்; (எ - று.)

"வேள்விக்கினமாற்றும்" என்ற தொடர் - வெவ்வேறுவகையாகப் பிரிந்து இருபொருள்பட்டதனால், பிரிமொழிச்சிலேடை; இது, வடமொழியில் பிந்நபதச்லேஷா எனப்படும்: பிறவும் இங்ஙனம் வருவன காண்க. கேள் வித்துறவோர் - "ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவேயுடையவனான குரு" வினிடத்து உபதேசமொழிகளைக் கேட்டுஉணர்ந்து பற்றுக்களைத் துறந்தவ ரென்றபடி. முத்தியளித்தற்குஉரிய முதற்பொருளை உணர்வதற்கு ஏற்ற உபாயங்களான கேள்வி விமர்சம் பாவனை என்ற மூன்றனுள் முதலதும், மற்றை இரண்டற்குங் காரணமுமான கேள்வியையுடைமை கூறப்பட்டது. கேள்வி யெனினும், சிரவண மெனினும் ஒக்கும். துறவோர் - துறவையுடை யோர்; துறவாவது - புறமாகிய செல்வத்தினிடத்தும் அகமாகிய உடம்பி னிடத்தும் உளதாகிய பற்றை விடுதல். அவர்கள் வேள் விக்கின மாற்றுதல் - எக்காரணத்தாலும் காமஅவாவைக் கொள்ளாமை. கேடு - துன்பமும், குற்றமும். இல்வாழ்வோர் வேள்விக்கு இனம் ஆற்றுதல் - பிரமயஜ்ஞம், தேவயஜ்ஞம், மநுஷ்யயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், பூதயஜ்ஞம் என்ற பஞ்சமகா யஜ்ஞங்களைத் தவறாதுசெய்தல்; (பிரமயஜ்ஞம் - வேதமோதுதல் தேவயஜ்ஞம் - ஓமம்வளர்த்தல். மநுஷ்யயஜ்ஞம் - விருந்தினரை உபசரித்தல். பித்ருயஜ்ஞம் - தர்ப்பணஞ்செய்தல். பூதயஜ்ஞம் - பலியீதல்.) இவை இல்லறத்தார்க்குஉரிய ஐம்பெருவேள்வி யெனப்படும். துறவறத்தாரும் இல்லறத்தாரும் சமமாக அவரவர் தொழிலைச் செய்யப்பெற்ற வேங்கட மெனச் சொல் நயத்தாற் சமத்காரந்தோன்றக் கூறியவாறு காண்க.

துஷ்டர்களையெல்லாம்சங்கரித்துப் பூமிபாரநிவிருத்தி செய்தற்பொருட் டுத் திருவவதரித்த கண்ணபிரான் அதற்கு உபயோகமாகப் பாண்டவர்க்குத் துணைநின்று பலபடியாகஉதவிப் பாரதயுத்தத்தை ஆதியோடந்தமாகநடத்தி முடித்தமை, மகாபாரதத்திற் பிரசித்தம் சூதுபோரில் இழந்த இராச்சியத்தை மீளவும் மோதுபோர்செய்து பெறுவதில் தருமபுத்திரனுக்கு உபேக்ஷையுண்டான பொழுதெல்லாம் அங்ஙனம் வெறுப்புக் கொள்ளாதவண்ணம்