பலவாறுபோதித்துப் போர்தொடங்கும்படி தூண்டியும், பின்பு போர்த்தொ டக்கத்தில் "உற்றாரையெல்லா முடன்கொன் றரசாளப், பெற்றாலும்வேண்டேன் பெருஞ்செல்வம்" என்றுசொல்லிப் போரொழிந்த அருச்சுனனுக்குக் கீதையை உபதேசித்து அவனைப்போர்புரிய உடன்படுத்தியும் கண்ணபிரானே பாரதப்போரை மூட்டியவனாதல் காண்க. கேள்வி - கேட்டல்: 'வி' விகுதி பெற்ற தொழிற்பெயர். இல் - வீடு, இல்லறம். வேள் - (ஆடவர்க்கும் மகளிர்க்கும்) விருப்பத்தை விளைக்குந்தேவன்; அல்லது, விரும்பப்படும் அழகையுடையவன்: காமனென்ற வட மொழிப்பெயரும் இவ்விருபொருள்படும். விக்நம் - வடசொல். மாற்றும் வேங்கடம், ஆற்றும் வேங்கடம் - பெயரெச்சம், இடப்பெயர் கொண்டது. 'முன்பா' என்றது - அவிய, மூள்வித்து, முடித்தார் என்றவற்றோடு இயையும். முன்பு, பு - சாரியை. ஆ - ஆக என்பதன் விகாரம். ரதம் - வடசொல். சிந்தாமணியில், 'ரவிகுலதிலகன்' என வடமொழியிற் பிறந்தவண்ணமே தற்சமமாகக் கூறினாற்போல, இங்கு இரதமெனத் திரியாமல் ரதமென்றே கூறினார். 'ரதவேந்தர்' என்றது - அதிரத மகாரத சமரத அர்த்தரத வீர ரென்றவாறு. முடிவேந்தர் - கிரீடாதிபதிகளான அரசர். தார் என்றது, இங்கு - அடையாளப்பூமாலையோடு போர்ப்பூமாலையையுங் குறிக்கும். பாரதம் - பரதவமிசத்தாருள் நிகழும் போர். வாழ்வு என்ற சொல்லின் ஆற்றலால், திருவேங்கடம் திருமாலின் திருவுள்ளத்துக்கு மிகப்பாங்காயிருத்தல் விளங்கும். (52) | 53. | பொய்யாம் வினையேனைப் போல்வாரு மன்பருஞ்செய் | | மெய்யாம் வழுத்தேயும் வேங்கடமே - செய்யா | | டனத்துவசப் பொற்புள்ளார் தானவரை மோதுஞ் | | சினத்துவசப் பொற்புள்ளார் சேர்வு. | (இ - ள்.) பொய் ஆம் வினையேனை போல்வாரும் - பொய்கலந்த தொழிலையுடைய என்னைப் போன்ற நீசர்களும், செய் - செய்த, மெய் ஆம் வழு - சரீரசம்பந்தத்தாலாகிய குற்றங்கள் (கருமங்கள்), தேயும் - நீங்குதற்கு இடமான: அன்பரும் - உள்ளன்புடைய அடியார்களும், செய் - செய்கின்ற, மெய் ஆம் வழுத்து - உண்மையான தோத்திரங்கள், ஏயும் - பொருந்தப்பெற்ற: வேங்கடமே -,- செய்யாள் தனத்து வசம் - திருமகளினது தனத்துக்கு வசப்பட்ட, பொற்பு உள்ளார் - அழகையுடையவரும், தானவரை மோதும் - அசுரர்களைத் தாக்குகின்ற, சினம் - கோபத்தையுடைய, துவசம் - கொடியான, பொன் புள்ளார் - பொன்னிறமான கருடனென்னும் பறவையையுடையவருமாகிய திருமால், சேர்வு - (திருவுள்ளமுவந்து) சேருமிடம்; (எ - று.) பொய்யாம்வினை - உள்ளன்பின்றி அகமொன்று புறமொன்றாக வெளி வேடங்கொண்டு செய்யும் வஞ்சனைச்செயல். "பொய்யாம் வினையேனைப் போல்வார்" என்று தம்மைத் தாம் இழித்துக் கூறினார், விநயத்தால். மெய்யாம் வழுத்து - மனப்பூர்வமாகச் செய்யுந் தோத்திரம். போலியன்பரும் |