உண்மையன்பரும் ஒருநிகராக இருக்கப்பெற்ற வேங்கடமெனச் சொல்நயத் தாற் சமத்காரந்தோன்றக் கூறியவாறுகாண்க. முன்னிரண்டடியில் "பொய்யாம்", "மெய்யாம்" என மாறுபட்ட சொற்கள் வந்தது, முரண்தொடை. "செய்யாள் தனத்து வசம்" என்றது - பொற்புள்ளார்க்கு அடைமொழி. இத்தொடர் - திருமகளினது திருமேனியழகில் திருமால் ஈடுபடுதலையும். அத்திருமகளை ஈடுபடுத்தவல்ல திருமாலின் திவ்வியசௌந்தரியத்தையும் விளக்கும். துவசப்பொற்புள்ளார் - பக்ஷிராஜனான கருடனை வாகனமுங் கொடியுமாக உடையவர். கருடாழ்வானது திருத்தோளின்மேல்ஏறித் திருமால் அசுரசேனையோடு போர்செய்யும்பொழுது, அக்கருடனும் எதிர்க்கிற அசுரர்மீது கோபம்மூண்டு தன்சிறகுகளினாலும் மூக்கினாலும் கால்களினாலும் அவர்களைத் தாக்கியழித்தல் இயல்பு. வழுத்து - முதனிலைத்தொழிற்பெயர். செய்யாள் - செந்நிறமுடையவள்; செம்மையென்னும் பண்புப்பகுதி ஈறுபோய் முன்நின்ற மகரம்யகரமாத் திரிந்தது. ஸ்தநம், வசம், தாநவர், த்வஜம் - வடசொற்கள். தாநவர் - (காசியப முனிவனது மனைவியருள்) தநுஎன்பவளிடம் பிறந்தவர்: தத்திதாந்தநாமம். "பொற்பே பொலிவு" என்ற தொல்காப்பியத்து உரியியற்சூத்திரத்தால், பொற்பு என்பது - உரிச்சொல்லென அறிக. "சேர்பு" என்றும் பாடமுண்டு. | 54. | கோடலிலா வுள்ளத்தைக் கோதி லடியவரும் | | வேடருமங் கைவரைவெல் வேங்கடமே - மூடர் | | மனமா மனைக்கொன்றார் வன்கஞ்ச னென்னுஞ் | | சினமா மனைக்கொன்றார் சேர்பு. | (இ - ள்.) கோடல் இலா - கோணுதலில்லாத (நேர்வழிப்பட்ட), உள்ளத்து - மனத்தையுடைய, கோது இல் - குற்றமில்லாத, அடியவரும் - அடியார்களும், அங்கு ஐவரை வெல் - அவ்விடத்துப் பஞ்சேந்திரியங்களை வெல்லுதற்கு இடமான: வேடரும் - வேடர்களும், அம் கை வரை வெல் - அழகிய துதிக்கையையுடைய மலைபோன்றயானையை வெல்லுதற்கு இடமான வேங்கடமே -,- மூடர் மனம் ஆம் மனைக்கு ஒன்றார் - மூடர்களுடைய உள்ளமாகிய வீட்டில் வந்து பொருந்தாதவரும், வல் கஞ்சன் என்னும் சினம் மாமனை கொன்றார் - கொடிய கம்சனென்கிற கோபத்தையுடைய மாமனைக் கொன்றவருமாகிய திருமால், சேர்பு - சேருமிடம்; (எ - று.) "அங்கு" என்பது - அசையுமாம். ஐம்பொறிகளை "ஐவர்" என உயர்திணையாற்கூறியது, இழிபுபற்றிய திணைவழுவமைதி. ஐந்து என்னும் எண்ணினடியாப்பிறந்த ஐவரென்ற பெயர் - இங்கே தொகைக்குறிப்பு. "கைவரை" என்றார், யானையை; "கைம்மலை" என்றாற்போல. மூடர், மநஸ் - வடசொற்கள். "மூடர் மனமாம் மனைக்கு ஒன்றார்" என்றது - "மலர்மிசையேகினான்" என்றபடி, அன்புகொண்டு தியானிக்கின்ற அறிவுடையாரது உள்ளக்கமல த்தைத் தாம் உகக்குமிடமாகக்கொண்டு அங்கு அவர்நினைத்தவடிவத்துடன் விரைந்து சென்று வீற்றிருக்குந் தன்மைய ரென்ற எதிர்மறைப்பொருளை |