பக்கம் எண் :

திருவேங்கடமாலை447

நன்குவிளக்கும். மனைக்கு என்ற நான்கனுருபு ஏழனுருபின் பொருளில் வந்ததனால், உருபுமயக்கம். கஞ்சன் - வடசொற் சிதைவு.

மாமன் - இங்கு, தாயுடன்பிறந்தவன். கம்ஸன் - கண்ணனது தாயான தேவகிக்குத் தமையனாதலால், கண்ணனுக்கு மாமனாவன். தன்னைக்கொல் லப்பிறந்த தேவகீபுத்திரன் யசோதையினிடம் ஒளித்துவளர்தல் முதலிய விருத்தாந்தங்களை நாரதர்சொல்லக்கேட்டுக் கம்சன் அதிககோபங்கொண்டு கிருஷ்ணனைக் கொல்ல நிச்சயித்து வில்விழாவென்கிற வியாஜம் வைத்துக் கண்ணனை மதுரைக்கு வரவழைத்துப் பலவகையில் வதைக்க வழிதேடுகை யில், கம்சசபையில் கிருஷ்ணபகவான் வேகமாக எழும்பிக் கம்சனது மஞ்சத்தின்மே லேறி அவனது கிரீடம் கழன்று கீழேவிழும்படி அவனைத் தலை மயிர் பிடித்துத் தரையில் தள்ளி அவன்மேல் தான் விழுந்து அவனைக் கொன்று ஒழித்தன னென்பது, இங்குக் குறித்த வரலாறு.

(54)

55.மொய்வதன மங்கையர்கண் முன்கையும் யோகியர்கண்
மெய்வயது மஞ்சுகமார் வேங்கடமே - பெய்வளையார்
பாற்றிருப்பா தஞ்சிவந்தார் பற்றினார் புன்பிறப்பை
மாற்றிருப்பா தஞ்சிவந்தார் வாழ்வு.

(இ - ள்.) மொய் - (அழகு) மிக்க, வதனம் - முகத்தையுடைய, மங்கையர்கள் - மகளிரது, முன் கையும் - முன்னங்கையும், அம் சுகம் ஆர் - அழகிய கிளி (உணவுண்ணுதற்கு) இடமாகப்பெற்ற: யோகியர்கள் மெய் வயதும் - யோக நிட்டையிலிருக்கின்ற முனிவர்களுடைய உடம்பின் ஆயுளும், அஞ்சு உகம் ஆர் - ஐந்துயுகமாகப் பொருந்தப்பெற்ற: வேங்கடமே -,- பெய் வளையார் பால் திருப்பாது - அணிந்த வளையல்களையுடைய மகளிர்பக்கல் (மனத்தைச்) செலுத்தாமல், அஞ்சி - அச்சங்கொண்டு, வந்தார் பற்றினார் - தம்மிடம் வந்து சரணமடைந்தவர்களுடைய, புல் பிறப்பை - இழிவான சன்மத்தை, மாற்று - நீக்குகின்ற, இரு பாதம் - தமது இரண்டு திருவடிகளும், சிவந்தார் - சிவந்திருக்கப்பெற்றவரான திருமால், வாழ்வு - வாழுமிடம்; (எ - று.)

"மொய்தவனம்" என்பதற்கு - (தாமரைமலரென்று மயங்கி வண்டுகள்) மொய்க்கப்பெற்ற முகமென்று உரைத்தலும் ஒன்று. மங்கையர் - இளமகளிர்; மங்கைப்பருவத்துக்கு வயதெல்லை - பன்னிரண்டுமுதற் பதின்மூன்றளவும். வயஸ், வதநம், சுகம், பாதம் - வடசொற்கள். அஞ்சு - ஐந்து என்பதன் முழுப் போலி. திருவேங்கடமலையிலுள்ள மகளிர்கையிற் கிளியைவைத்துக் கொண்டு அதற்கு உணவூட்டி அதனோடு கொஞ்சிவிளையாடுதலும், அங்குள்ள யோகிகள் அவ்யோகபலத்தால் நீடூழிகாலம் வாழ்தலும், இங்குக் குறிக்கப்பட்டன. யுகமென்பது, உகமெனவிகாரப்பட்டது. ஆர்தல் - உண்ணுதலும், பொருந்தலும். பெய்வளை - வினைத்தொகை. வந்தார் - முற்றெச்சம். இருபாதம் என்ற தொடர் "இருப்பாதம்" என வருமொழி முதல்வலி மிக்கது, திரிபுநயம் நோக்கி யென்க. இதனைச் சிறுபான்மை எதுகைநயத்தின் பொருட்டு "ஒருக்கால்" என வருதல்போலக் கொள்க: அன்றி, முற்றியலுகரவீறாகிய எண்ணுப்பெயரின்