முன் வலிமிகாமை காண்க. "செம்" என்ற பண்படிப்பகுதி வினைத்தன்மைப் படும்போது "சிவ" என விகாரப்படும். பாதம்சிவந்திருத்தல், உத்தமஇலக்கணம். புன்பிறப்பு என்றது, கர்மசம்பந்த முடைமைபற்றி. பிறப்பைமாற்றுதல் - மீளவும்பிறக்கவேண்டாதபடி முத்திதருதல். திருப்புதலென்றவினைக்கு மனத்தையென்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது, அவாய்நிலையால்; (அவாய்நிலையாவது - ஒருசொல் மற்றொருசொல்லை வேண்டிநிற்றல்.) (55) | 56. | இல்லக் குறத்தியரும் யாக்கைநிலை வேட்டவரு | | மெல்லக் கிழங்கெடுக்கும் வேங்கடமே - நல்ல | | புதுப்பூவை வண்ணத்தான் போர்முகத்துச் செவ்வாய் | | மதுப்பூவை வண்ணத்தான் வாழ்வு. | (இ - ள்.) இல்லம் குறத்தியரும் - (தமக்கு உரிய) வீட்டில் இருக்கின்ற குறப்பெண்களும், மெல்ல கிழங்கு எடுக்கும் - மென்றுதின்னும்பொருட்டுக் கிழங்குகளைத் தோண்டி எடுக்கப்பெற்ற, யாக்கை நிலை வேட்டவரும் - உடம்பு (அழிதலின்றி நெடுநாள்) நிலைத்திருத்தலை விரும்பிய சித்தர்களும், மெல்ல கிழம் கெடுக்கும் - மெதுவாக (நாளடைவில்) முதுமைப்பருவத்தை ஒழிக்கப்பெற்ற; வேங்கடமே -,- நல்ல புது பூவை வண்ணத்தான் - சிறந்த புதிய (அன்றுமலர்ந்த) காயாம்பூப் போன்ற கரியதிருநிறத்தையுடையவனும், போர்முகத்து - யுத்தகளத்தில், செம் வாய் மது பூ வை - சிவந்த தனது திருவாயாகிய தேனையுடைய தாமரைமலரில் வைத்துஊதுகின்ற, வள் நத்தான் - மேன்மையுள்ள (ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னுந் திவ்விய) சங்கத்தை யுடையவனுமாகிய திருமால், வாழ்வு - வாழுமிடம்; (எ - று.) இல்லம், அம் - சாரியை. குறத்தியர் - குறிஞ்சிநிலத்துமகளிர்; குறவ ரென்பதன் பெண்பால். யாக்கை - (எலும்பு நரம்பு முதலியவற்றாற்) கட்டப்பட்ட தெனப் பொருள்படுங் காரணப்பெயர்; யா - பகுதி; யாத்தல் - கட்டுதல்: ஐ - செயப்படுபொருள்விகுதி, கு - சாரியை, க் - சந்தி. நிலை - நிற்றல்; 'ஐ' விகுதிபெற்ற தொழிற்பெயர். வேட்டவரென்ற இறந்தகால வினையாலணையும் பெயரில், வேள் - பகுதி. "மெல்ல" என்றது. முந்தியபொருளில், மெல்என்ற வினைப்பகுதியடியாப் பிறந்த எதிர்காலச்செய வெனச்சமும்; பிந்தின பொருளில், மென்மை என்ற பண்பினடியாப் பிறந்த குறிப்புவினையெச்சமுமாம். பூவை யென்ற செடியின்பெயர், இங்கு அதன் மலர்க்கு முதலாகு பெயர். வாயாகிய பூ எனறது உருவகம். வாய்க்குத் தாமரை மலர் உவமை - செம்மையும் மென்மையும் அழகும் பற்றி. உபமானமாகிய வாய்க்குச் சுவையினிமைகொள்க. வை - வினைத்தொகை. வர்ணமென்ற வடமொழி வண்ணமெனச் சிதைந்தது. வள்நத்து - பண்புத்தொகை. திருமால் போர்க்களத்தில் பகைவரை அஞ்சுவித்தற்காகவும், தனது வெற்றிக்கு அறிகுறியாகவும் சங்கத்தைவாயில்வைத்து முழக்குதல் இயல்பு. மது - வடசொல். |