பக்கம் எண் :

திருவேங்கடமாலை449

57.தேனியலுங் கூந்தலார் செங்கரமு மாதவத்தோர்
மேனியுமை யம்பொழியும் வேங்கடமே - ஞானியர்க
டாங்குறியெட் டக்கரத்தார் தாளுரன்மேல் வைத்துவெண்ணெய்
தாங்குறியெட் டக்கரத்தார் சார்பு.

(இ - ள்.) தேன் இயலும் கூந்தலார் - (சூடிய மலர்களினின்று சொரிகின்ற) தேன்பொருந்திய கூந்தலையுடைய மகளிரது, செம் கரமும் - சிவந்த கைகளும், ஐயம் பொழியும் - (இரப்பவர்க்கு மிகுதியாகப்) பிச்சையிடப்பெற்ற: மா தவத்தோர் மேனியும் - சிறந்ததவத்தையுடைய முனிவர்களது உடம்பும், ஐ அம்பு ஒழியும் - (மன்மதனது) பஞ்சபாணம் பொருந்தாதிருக்கப்பெற்ற: வேங்கடமே -,- ஞானியர்கள் குறி - (தத்துவ) ஞானமுடையவர்கள் குறிக்கொண்டு தியானிக்கின்ற, எட்டு அக்கரத்தார் - அஷ்டாக்ஷரமகாமந்திரத்துக்கு உரியவரும், உரல்மேல்தாள் வைத்து - உரலின்மேற்காலைவைத்து ஏறி, வெண்ணெய்தாங்கு உறி எட்டு - வெண்ணெய் வைத்துள்ள உறியை எட்டிப்பிடித்த, அ கரத்தார் - அழகிய கையை யுடையவருமாகிய திருமால், சார்பு - (திருவுள்ளமுவந்து) சார்ந்திருக்குமிடம்; (எ - று.) - தாம் - அசை.

தேன்இயலும்கூந்தல் - நல்லமணத்தே செல்லும் இயல்புள்ள தேனென் னும் உத்தமசாதிவண்டுகள் இயற்கை நறுமணத்தின் பொருட்டும் செயற்கை நறுமணத்தின் பொருட்டும் மிகுதியாக மொய்க்கப்பெற்ற கூந்தலெனினுமாம். மாதவத்தோர் மேனி ஐயம்பொழிதலாவது - அவர்கள் காமவசப்படாதிருத்தல்; மன்மதபாணம் அவர்களுடம்பைத் துளைத்துவருத்த மாட்டாதனவா யினவென்க. ஐ அம்பு - தாமரைமலர், அசோகமலர், மாமலர், முல்லைமலர், நீலோற்பலமலர் என்ற ஐந்துபூக்களும் மன்மதனுக்குப் பாணங்களாம். ஜ்ஞாநீ என்ற வடசொல், "ஞானி" என விகாரப்பட்டது. குறி - வினைத்தொகை. எட்டக்கரம் - திருவெட்டெழுத்தாகிய பெரியதிருமந்திரம். அக்ஷரமென்ற வடசொல், அக்கரமென விகாரப்பட்டது. கரம் - வடசொல். "அம்" என்பதுபோல "அ" என்பதும் அழகிய என்னும் பொருளதாதலை, பத்துப்பாட்டு நச்சினார்க்கினியருரையிற் காண்க. "பொத்தவுரலைக்கவிழ்த்ததன்மேலேறித், தித்தித்தபாலுந் தடாவினில்வெண்ணெயும், மெத்தத்திருவயிறாரவிழுங்கிய, லப்பன்" என்ற பெரியாழ்வார்திருமொழியும், "தந்த முறியி லவர் வைத்த தயிர்பால்வெண்ணெ யெட்டாமற், குந்தி யுரலின்மிசை யேறி" என்ற வில்லிபுத்தூரார்வாக்கும், இங்கு ஒப்புநோக்கத்தக்கன. "சார்வு" என்றும் பாடம்.

(57)

58.காணையிலார் சொற்கேட்ட கந்தருவ ருந்தவரும்
வீணையிரா கத்தைவிடும் வேங்கடமே - கோணை
யிருங்குண்டை யோட்டினா னேற்பொழித்தான் கூனி
மருங்குண்டை யோட்டினான் வாழ்வு.

(இ - ள்.) காண் ஐயிலார் சொல் கேட்ட - பார்க்கின்ற வேல்போன்ற கண்களையுடைய மகளிர் பேசுகின்ற சொற்களைச் செவியுற்ற, கந்தருவரும் -