பக்கம் எண் :

450திருவேங்கடமாலை

கந்தர்வரென்னுந் தேவசாதியாரும், வீணை இராகத்தை விடும் - (அச்சொற் களின் இனிமைக்குமுன் தாம் பாடும் இசையின்இனிமை சிறவாதென்னுங் கருத்தினால்) வீணையில் இசைவாசித்தலை ஒழியப்பெற்ற: தவரும் - தவவொழுக்கத்தையுடைய முனிவர்களும், வீணை இராகத்தை விடும் - பயனில்செய் கைகளையும் ஆசையையும் துறக்கப்பெற்ற: வேங்கடமே - , - கோணை இரு குண்டை - வலிமையையுடைய பெரியஎருதை வாகனமாகவுடைய, ஓட்டினான் - (கையிற்) கபாலமேந்தியவனான சிவபிரானது, ஏற்பு - இரத்தல்தொழிலை, ஒழித்தான் - நீக்கியருளியவனும், கூனிமருங்கு உண்டை ஓட்டினான் - (கிருஷ்ணாவதாரத்திற்) கூனியினிடத்து உள்ள உண்டையைப் போக்கியவனுமான திருமால், வாழ்வு - வாழுமிடம்; (எ - று.)

காணையி லெனவே, கண்ணாயிற்று, கண்ணுக்கு வேல் உவமை - கூரிய வடிவுபற்றியேயன்றி, ஆடவரை ஆசைநோய்ப்படுத்தி வருத்துதல்பற்றியுமாம். காணையிலார் என்றது - அம்மலையில்வாழும் மகளிரது கண்ணழகின் சிறப்பை விளக்கும். அயிலென்பது "ஐயில்" என முதற்போலி. கந்தர்வர் - எப்பொழுதும் கையில் வீணைவைத்துக் கொண்டு இசைபாடித்திரியுந் தேவசாதியார். வீணா, ராகம் - வடசொற்கள். இரண்டாம்பொருளில், வீண் ஐ இராகத்தை விடும் எனப் பிரித்து - பயனற்ற ஐம்புலவாசைகளை ஒழிக்கப்பெற்ற என்று உரைத்தலும் ஒன்று.

கோணை - முசுப்பெனப்படுகிற முதுகின்வளைவுமாம். இருங்குண்டை - பண்புத்தொகை; இருமை - பெருமை. குண்டை - ரிஷபம். ஓட்டினான் - ஓடு என்னும் பெயரினடியாகப் பிறந்த ஆண்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர்; ஓடு - மண்டையோடு. இனி, "குண்டை யோட்டினான்" என்பதற்கு - ரிஷபத்தை ஏறிச் செலுத்தியவனென்று உரைத்தல் திரிபிலக்கணத்துக்குப் பொருந்தாதாம்; நான்காம் அடியில், "ஓட்டினான்" என்பது - ஓடச்செய்தவ னென்னும் பொருளதாதல் காண்க. ஏற்பு - ஏற்றல்; 'பு' விகுதி பெற்ற தொழிற்பெயர்: ஏல் - பகுதி.

கூனி - கூனையுடையவள்; இவள் - நைகவக்ரையென்னும் பெயருடையவள்; இவளது கூனை நிமிர்த்தது, கிருஷ்ணாவதாரத்தில். "கூனிமருங் குண்டை" என்றது அவளுடம்பிலுள்ள கோணலையும், முதுகுவளைவையுங் குறிக்கும். உண்டை = உருண்டை. இனி, "கூனிமருங்கு உண்டை யோட்டினான்" என்பதற்கு - இராமாவதாரத்தில் மந்தரையென்னுங்கூனியின் முதுகின்புறத்திலே வில்லினால் மண்ணுண்டையைச் செலுத்தியவன் என்றும் உரைக்கலாம்; "கொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனி கூன், உண்டை கொண்டரங்க வோட்டி யுண்மகிழ்ந்த நாதன்," "கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா" என்ற ஆழ்வார் அருளிச்செயல்கள் இங்கு அறியத்தக்கன.

(58)

59.முந்நூன் மறையவர்நா மூதரம்பை மாரினடு
மெய்நூ னலங்கவரும் வேங்கடமே - பொய்ந்நூலா
லச்சமயக் கத்தினா ராதரிக்கத் தெய்வங்கள்
வச்சமயக் கத்தினார் வாழ்வு.