"முந்நூன்மறையவரு மூதரம்பைமாரு நடு" என்ற பாடத்துக்கு - மறையவர் நடுவுநிலைமையாகத் தத்துவநூல்களின் நற்பொருள்களைக் கிரகிக்கிற எனவும், அரம்பையர் இடையின்வடிவினால் பஞ்சுநூல் கெடும்படிவருகின்ற எனவும் உரைக்க. (59) | 60. | ஓதுமறை யோர்புறமு முள்ளுங் கலையினரு | | மேதையக லாவிருக்கும் வேங்கடமே - கோதைகுழல் | | சுற்றாத தாரணியார் தூயதிருத் தாளூன்றப் | | பற்றாத தாரணியார் பற்று. | (இ - ள்.) ஓதும் - வேதமோதுகின்ற, மறையோர் - அந்தணர்களுடைய, புறமும் - உடம்பும், அரு கலையின் மேதை அகலா இருக்கும் - பெறுதற்கு அரிய மான்தோல் நீங்காதிருக்கப்பெற்ற: உள்ளும் - (அவர்களுடைய) மனமும், கலையின் அருமேதை அகலா இருக்கும் - சாஸ்திரங்களின் நுட்பமான அறிவு பரந்திருக்கப்பெற்ற: வேங்கடமே -,- கோதை குழல் சுற்றத்தார் அணியார் - ஆண்டாள் தனது கூந்தலில் சூடாத மாலையை அன்புடன் அணிந்துகொள்ளாதவரும், தூயதிரு தாள் ஊன்ற பற்றாத தாரணியார் - பரிசுத்தமான சிறந்த தமதுபாதங்களில் ஒன்றை ஊன்றியளத்தற்கு இடம்போதாத நிலவுலகத்தையுடையவருமாகிய திருமால், பற்று - விரும்பிவாழுமிடம்; (எ - று.) வேதமோதுகிற பிராமணப்பிரமசாரிகள் மான்தோலுபவீதந் தரித்தல், மரபு; ("முப்புரிநூலொடு மானுரியிலங்கும், மார்பினி னிருபிறப் பொருமா ணாகி" என்ற திருவெழுகூற்றிருக்கையுங் காண்க.) புறம் - புறத்து உறுப்பு. உள் - அகத்து உறுப்பு. நூல் என்ற பொருளில், கலை என்பது - கலா என்ற வடசொல்லின் விகாரமும். அறிவு என்ற பொருளில் மேதை என்பது - மேதா என்ற வடசொல்லின் விகாரமுமாம். அகலாஎன்பது - அகலாம லென்னும் பொருளில் ஈறுகெட்டஎதிர்மறைவினையெச்சமும்; அகன்றென்னும் பொருளில் செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட் டிறந்தகால வினையெச்சமு மாம். அகலுதல் - நீங்குதலும், பரத்தலும். வேதாத்தியயனஞ் செய்பவரது புறமும் உள்ளும் ஒருநிகராக வுள்ளன வெனச் சொல்நயத்தாற் சமத்காரந் தோன்றியவாறு காண்க. "கோதை குழல் சுற்றாத தார்அணியார்" என்றது - ஆண்டாள் தனது கூந்தலிற் சூடிக்கொடுத்த மாலையையே திருவுள்ளமுகந்து அணிபவர் என்ற வாறு. ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை விட்டு வேறு திருமாலையை அமைத்துப் பெரியாழ்வார் எம்பெருமானுக்குச்சமர்ப்பிக்க, அதனைப் பெருமான் "இந்த மாலை கோதைமணம் பெறவில்லை" என்று வெறுத்தனனென வரலாறு கூறுதலும் உண்டு. கோதையென்பது - உயர்திணைப்பெய ராதலின், அதன்முன் வலிமிகவில்லை. "தாளூன்றப் பற்றாத தாரணியார்" என்றது - உலகமளந்த சமயத்தில் நிலவுலகத்தினும் திருவடிபரந்துநின்றதாதலின். அப்பொழுது காலளவிற்கு உலகம் இடம் போதாமையை "மண்ணும் விண்ணும் என்காற்களவின்மை |