பக்கம் எண் :

திருவேங்கடமாலை453

காண்மினென்பா னொத்து வான் நிமிர்ந்த" என்ற திருவிருத்தத்தாலும், "நின்றகால் மண்ணெலாம் நிரப்பி யப்புறம், சென்று பாவிற்றிலை சிறிது பாரெனா", "உலகெலா முள்ளடி யடக்கி" என்ற கம்பராமாயணத்தாலும் அறிக. "தூயதிருத்தாளூன்றப் பற்றாத தாரணியார்" என்றது - வடமொழி நடை; அன்றியும், இங்ஙனம் கூறியதில் தமக்கு உரிய பொருளைத் தமக்கு உரியதாக்கிக் கொண்டவர் என்ற கருத்துத் தோன்றும். தாரணி - தரணி யென்ற வடசொல்லின் விகாரம். "பற்றாத தாரணியார் பற்று" என்ற அடியில் முரண்தொடை யிருத்தல் காண்க.

(60)

61.நன்முலைபோல் வெண்ணகையார் நாயகர்மேல் வைத்தநெஞ்சு
மென்முலையுங் கற்புரஞ்சேர் வேங்கடமே - முன்மலைந்து
தோற்றமா ரீசனார் தோற்றிமா யம்புரியச்
சீற்றமா ரீசனார் சேர்வு.

(இ - ள்.) நல் முலை போல் வெள் நகையார் - அழகிய முல்லையரும்பு போன்ற வெண்மையான பற்களையுடைய மகளிர், நாயகர்மேல் வைத்த - தம் தம் கணவரிடத்திற் செலுத்திய, நெஞ்சும் - மனமும், கற்பு உரம் சேர் - பதி விரதா தருமத்தின் வலிமை பொருந்தப்பெற்ற: மெல் முலையும் - (அம்மகளிருடைய) மென்மையானதனங்களும், கற்புரம் சேர் - பச்சைக்கற்பூரம் பூசப் பெற்ற: வேங்கடமே -,- முன் மலைந்து தோற்ற மாரீசனார் - முன்பு எதிர்த்துத் தோற்றோடின மாரீசன், தோற்றி மாயம் புரிய - மீண்டும்வந்து மாயை செய்ய, சீற்றம் ஆர் - (அவனிடத்துக்) கோபங்கொண்ட, ஈசனார் - (எல்லா வற்றுக்குந்) தலைவரான திருமால், சேர்வு - சேர்ந்திருக்கு மிடம்; (எ - று.)

எதுகைநயம்நோக்கி, முல்லை யென்பது, "முலை" என இடைக்குறை விகார மடைந்தது; ("முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ" எனக் கலித்தொகையிலும், "முலையேயணிந்த முகிழ்நகையீர்" என மதுரைக்கலம்பகத்திலும், "அம்முலைக் கொடியா ரலர்தூற்றவே" எனத் திரு வேங்கடக் கலம்பகத்திலும், "பயிற்சியும் வனமுலைப்பாலே" என அழகர் கலம்பகத்திலும் காண்க.) முல்லை - அதன் அரும்புக்கு முதலாகுபெயர். பல்லுக்கு முல்லையரும்பு உவமை - அழகிய வடிவிற்கும், வெண்மைக்குமாம்; நாயகர் - தற்சம வடசொல். கற்பாவது - கணவனைத் தெய்வமெனக் கொண்டு ஒழுகும் ஒழுக்கம். திருக்குறளில் "கற்பென்னுந் திண்மை" என்றாற் போல, "கற்பு உரம்" என்றார். உரம் - கலங்காத நிலைமை. கர்ப்பூரமென்ற வடசொல், கற்புரமென விகாரப்பட்டது. திருவேங்கடத்தில்வாழும் மாதர்களது உள்ளும் புறமும் ஒத்துள்ளனவெனச் சொல்லொப்புமையாற் சமத் காரந்தோன்றக் கூறியவாறு காண்க.

மாரீசன் - தாடகையின் மகனும், சுபாகுவின் உடன் பிறந்தவனும், மாயையில் மிக வல்லவனுமான ஓர்அரக்கன். இராவணனுக்கு மாமன்முறை பூண்டவன்; விசுவாமித்திரமுனிவர் தமது யாகத்தைப் பாதுகாத்தற்பொருட்டு ஸ்ரீராமலக்ஷ்மணர்களை அழைத்துச்செல்லும் வழியிடையே தாடகை