பக்கம் எண் :

454திருவேங்கடமாலை

வந்து எதிர்த்து இராமனாற் கொல்லப்பட்டு இறந்தபின், மாரீசன் சுபாகுவி னுடனும் மற்றும்பல அரக்கருடனும் வந்து விசுவாமித்திரருடைய வேள்வியை அழிக்கத் தொடங்கியபொழுது, இராமபிரான் அம்புகளால் அரக்கரைக் கொன்று ஓர் அஸ்திரத்தாற் சுபாகுவை வதைத்து மற்றோர் அஸ்திரத்தால் மாரீசனைக் கடலிலே தள்ளிவிட்டார். இங்ஙனம் தப்பிப்பிழைத்த இவன் சிலகாலங்கழித்து, இராமன் தண்டகாரணியம் புகுந்தபொழுது பழைய வைரத்தால் வேறு இரண்டு அரக்கருடனே மான்வேடம்பூண்டு இராமனைத் தன் கொம்புகளால் முட்டிக் கொல்லக் கருதி நெருங்குகையில் இராமன் எய்த அம்புகளால் உடன்வந்த அரக்கர் இறக்க, இவன்மாத்திரம் தப்பியோடி உய்ந்து இலங்கைசேர்ந்தனன். இவ்வாறு ஒருமுறைக்கு இருமுறை எதிர்த்துத் தோற்றுத் தப்பிப்பிழைத்தமைபற்றி, "முன்மலைந்துதோற்ற மாரீசனார்" என்றார். "ஆர்" விகுதி - மாயையில் அவனுக்குஉள்ள சிறப்பை நோக்கினது. பின்பு சீதையைக் கவர்ந்துசெல்லக் கருதிய இராவணனது தூண்டுதலால் மாரீசன் மாயையாற் பொன்மானுருவங் கொண்டு தண்டகாரணியத்திற் பஞ்சவடியிலே சீதையின் எதிரிற் சென்று உலாவுகையில், அப்பிராட்டியின் வேண்டுகோளின்படி அதனைப் பிடித்தற்குத் தொடர்ந்து சென்ற இராமபிரான் நெடுந்தூரம் ஓட்டங்காட்டிய அம்மானை மாயமானென்று அறிந்த வளவிலே அதன்மேல் அம்பெய்து வீழ்த்தினனென்ற வரலாறு இங்குக்குறிக்கப்பட்டது. கொன்ற என்ற பொருளில். "சீற்றம் ஆர்" என்றது - காரியத்தைக் காரணமாக உபசரித்தவாறு. மாயம் - மாயா என்ற வடசொல்லின் விகாரம். ஈசன் - வடசொல்: ஐசுவரியமுடையவன். "தோற்றமாயம்புரிய" என்று பாடமோதி, மாரீசன் -, ஆர் தோற்றம் - பொருந்திய தோற்றத்தையுடைய, மாயம் - மாயையை, புரிய - செய்ய என்று உரைத்தலும் ஒன்று; மெய்த்தோற்றம்போன்ற பொய்த்தோற்றத்தைக் கொள்ள; என்க.

(61)

62.கூறுங் கிளிமொழியார் கொங்கையென்றுங் கண்ணென்றும்
வீறு மருப்பிணைசேர் வேங்கடமே - நாறுந்
துளவமலர்க் கண்ணியார் தொண்டாய்த் தமக்கன்
புளவமலர்க் கண்ணியா ரூர்.

(இ - ள்.) கூறும் கிளிமொழியார் கொங்கை என்று - (கொஞ்சிப்) பேசு கின்ற கிளியின் சொற்போன்ற இன்சொற்களையுடைய மகளிரது தனங்க ளென்று, வீறு - பெருமையுற்ற, மருப்பு இணையும் - இரட்டையான யானைத் தந்தங்களும்: கண் என்று - (அவர்களுடைய) கண்களின் நோக்க மென்று, வீறு மரு - சிறப்புப்பொருந்திய, பிணையும் - பெண்மானும். சேர் - பொருந்திய, வேங்கடமே -,- நாறும் துளவம் மலர் கண்ணியார் - பரிமளம் வீசுகின்ற திருத்துழாய் மலர்களாலாகிய மாலையை யுடையவரும், தொண்டு ஆய் - (தமக்கு) அடிமையாகி, தமக்கு அன்பு உள - தம்பக்கல் பக்தியுள்ள, அமலர்க்கு - குற்றமற்ற அடியார்களுக்கு, அண்ணியார் - சமீபிக்கின்றவரு மாகிய திருமாலினது, ஊர் - வாசஸ்தாநம்; (எ - று.)